Pages - Menu

Pages

டிசம்பர் 17, 2015

காரட்டுக்கு பழகிய கழுதைகள்




    அண்மையில் ஒரு பெண் பிரமுகரின் படத்தை முகநூலில் ஏற்றி அவரை வசைப்பாடியிருந்தனர். அவரை வசைப்பாட ஒரு குழுவே உற்சாகமாகச் செயல்பட்டது. அந்த முகநூல் பக்கத்தை உருவாக்கியவரின் நோக்கம் பொறாமை மட்டும்தான். அவர் எண்ணத்துக்கு எப்படியோ முகநூல் சமூகம் உடன் போகிறது. இது நவீன வாழ்வின் புதிய சிக்கல். யாரும் கொஞ்சம் திறமை இருந்தால் ஒருவரை ஆதரிக்கவும் நிராகரிக்கவும் ஒரு குழுவை உருவாக்க முடிகிறது. அவர் விரிக்கும் வலைக்குள் பிறர் ஒன்றினைவது எவ்வாறான மனநிலை எனப் புரிந்துகொள்ள முடிவதில்லை. 
    மனித மனம் குறித்து பேசுவதென்றால் என்னவெல்லாம் பேசலாம் என்று மனதிற்கும் தெரிந்திருக்காதுதான். மனம் என்பதின் இருப்பிடம் எதுவாக இருக்கலாம் என ஆளுக்கு ஆள் ஓரிடத்தை சொல்லிக்கொண்டிருக்கிறோம். அறிவில்தான் மனம் இருக்கிறது. இதயத்தில்தான் மனம் இருக்கிறது. அறிவுக்கும் மூளைக்கும் தொடர்பு இல்லை. இதயத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனம் என்ற ஒன்று இல்லவேயில்லை. எண்ணங்களைத்தான் மனம் என்று பொருள் கொள்கிறோம்.
   எப்படி வேண்டுமானாலும் மனம் குறித்து பேசிக்கொண்டே போகலாம். யாரெல்லாம் இப்படி மனம் குறித்து பேசியிருக்கிறார்கள் என்று பார்த்தால், அந்தப் பட்டியல் படித்தவன் முதல் பாமரன் வரை  நீண்டிருக்கும். படித்த ஒருவரின் புரிதலைவிட படிக்காதவர்கள் மனம் குறித்து மிக எளிதாகப் புரிந்து வைத்திருக்கின்றனர்.
நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒருவர் : 'சிரிக்க சிரிக்கன்னுஜோக் புக்கு எழுதினாரே எங்க போய்ட்டாரு
மற்றவர் : அவராஅழுது அழுதேசெத்துப்போனாரு
அந்த  வயதில் கிறுக்குத்தனமாகச் சிரித்தேன். இப்போது கொஞ்சம் அதிர்ந்து போகிறேன்.
    அந்த ஜோக் புத்தகம் எதற்கு எழுதப்பட்டது? படிப்பவர்களைச் சிரிக்க வைப்பதற்கு. அப்படி சமூகத்தினரைச் சிரிக்க வைக்க எழுதியவன் எப்படி இறந்திருக்கிறான் அழுது அழுது. தன்னை சிரிக்க வைத்தவனையே இச்சமூகம் அழ வைத்துச் சாகடித்திருக்கிறது. இப்படியான ஒருவனைத்தான் கொன்றிருக்கிறோம் என்றுக்கூட தெரிந்து கொள்ளாமல் இச்சமூகம் குற்ற உணர்ச்சியற்று நகர்ந்துகொண்டே இருக்கிறது. போவது மட்டுமல்ல அவனின் இறப்பையும் சிரித்தபடி கடந்து செல்கிறது.
   தான் வாழும் போது சிரிக்க வைக்க நினைத்தவர்களை தனது மரண செய்தி மூலமாகவும் சிரிக்க வைத்திருக்கிறான். தமிழ்ச்சமூகத்தில் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களின் நிலையும் அவ்வாறானதுதான்.
  இச்சமுகமானது உண்மையில் பாவப்பட்டது. கழுதை முன்னே காரட் துண்டை கட்டி தொங்கவிட்டு நினைத்ததை சாதிக்கும் சாமர்த்தியசாலிகள் தம் போக்கில் கழுதையை நடத்திச் செல்கிறார்கள். அந்த கழுதை கடைசிவரை காரட் கிடைக்காமல் பட்டினியாகவே இருக்கிறது. காரட் காட்டிப் பழக்கிய கழுதை என்ன செய்யுமோ அதைத்தான் இச்சமூகம் செய்கிறது.
   பிரமுகரை வசைப்பாட தொடங்கிய ஒருவருக்கு காரட்டை எப்படி உபயோகிப்பது எனத் தெரிந்திருக்கிறது. சமூகம் தெளிவடையாத வரை எவ்விதமான ஆரோக்கிய செயல்பாட்டிலும் கவனம் வைக்காமல் வசைப்பாடுவதிலும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுவதிலும் நமது நேரத்தை கழுதைகள் போல செலவளிக்கலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக