Pages - Menu

Pages

டிசம்பர் 13, 2015

இயந்திரமென உருவெடுக்கும் இதயத்தின் போலி சங்கீதம்





     கோலாலும்பூர் போன்ற பட்டிணங்களில் சொந்த வீடு வாங்குவதை விட வாடகை வீடு கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. பணவசதி இருப்பவர்களுக்கு சொந்த வீடு சர்வ சாதாரணம். வீடு வாங்கிய பிறகு கடன்களை கட்டியே நிலமை தலைகீழானாலும், முந்தைய பொழுதில் அவர்கள் பணவசதி படைத்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.
வாடகை வீட்டுக்கான விளம்பரங்களும் தொலைபேசி எண்களும் பார்க்கும் இடமெங்கினும் இருந்தாலும் அழைத்து பேசும் பொழுது சரியான விபரங்கள் கிடைக்காது

     புதர்களுக்கு மத்தியில் வீட்டின் கூரை மட்டுமே தெரியும் வீடுகள் இருந்தும் அதன் உரிமையாளர் குறித்தோ வாழ்ந்தவர் குறித்தோ யாருக்கும் தெரிந்திருக்காது. எப்போது எந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி வருமென்று அலாரம் வைத்து பார்க்க தெரிந்த நமக்கு அதையெல்லாம் தெரிந்துக் கொள்வதற்கு நேரமோ தேவையோ இருப்பதில்லை.

   சில மாதங்கள் (call centre) கால் சென்ட்ரில் வேலை பார்த்து வந்தேன். வீட்டு உரிமையாளரிடம் கட்டவேண்டிய கடன் பாக்கி ஏதும் இருந்தால் , பேசி பணத்தை வசூல் செய்யும் வேலை. பொதுவாகவே வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டுக்காரர் எண்களை கொடுப்பதற்கு சிரமப்படுவார்கள். அல்லது தவறான எண்களை கொடுத்துவிடுவார்கள். ஒரு முறை கொடுக்கப்பட்ட எண்களால் அலுவலகம் முழுதுமே சிரித்தது. சம்பந்தப்பட்டவர் பல முறை தொடர்புக்கொண்டும் கிடைக்காத்தால் இன்னொருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். அவர் கவனித்ததுதான் சிரிப்புக்கு காரணம். அந்த வாடகை வீட்டுக்காரர் ,                    எண் 012-3456789.

     இப்படி அழைப்புகளில் பல சுவாரஷ்யங்கள் இருக்கும். அதிக கடன் கட்டப்படாமல் இருக்கும் வீட்டுக்கு அழைக்கவேண்டும். முதல் வாரத்திலேயே அங்கு சென்று எண்களையும் இதர விபரங்களையும்ம் பெற்று வந்துவிடுவார்கள். அவர்களின் விபரங்களுக்கு ஏற்ற வகையில் தகவல்களை திரட்டி நாங்கள் அழைக்க வேண்டும்.
அழைத்ததும் எடுத்துவிட்டார். எங்களுக்காக காத்திருந்ததாகவும், உதவி வேண்டும் என்றார். அழைப்பது நாங்கள் என சொன்னவுடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படும். அல்லது பேசவே இடம் தராமல் திட்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இவரோ எங்களின் அழைப்புக்காக காத்திருந்திருக்கிறார்

    அவர் பத்து ஆண்டுகளாக இந்த வாடகை வீட்டில் இருக்கிறார். முதல் இரண்டு  ஆண்டுகள்தான் வீட்டு வாடகை கட்டியிருக்கிறார். அதன் பிறகு வீட்டுக்காரர் வாடகை வாங்க வரவில்லையாம். தன்னிடம் இருந்த வீட்டுக்காரரின் கைபேசிக்கு எவ்வளவு முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.  இம்மாதம் வருவார் அடுத்த மாதம் வருவார் என ஒவ்வொரு மாதமும் வாடகையுடன் காத்திருந்திருக்கிறார். பின்னர் அதற்கேற்ற செலவுகள் வரவும் அதற்கு பயன்படுத்தியிருக்கிறார். இப்போதைக்கு அவருக்கு தேவைப்படும் உதவி என்னவெனில் , இருக்கும் வீட்டை அவர் பெயருக்கு மாற்றுவதற்கான வழிமுறையை சொல்லிக்கொடுக்க வேண்டும். வராமல் இருக்கும் வீட்டுக்காரர் இனி வரவே மாட்டாராம்.  வாடகைக்கு இருப்பவர் உரிமையாளராகிட நினைக்கிறார்.

   இப்படி பல வீடுகள் இருக்கின்றன. இரட்டைமாடி கோபுரங்களை அன்னாந்துப்பார்த்து அப்படியே கழுத்தை கீழே இறக்கினால் காலியாக கிடக்கும் வீடுகள். இன்னும் கொஞ்சம் கீழ பார்த்தால் நான்கு சுவர்களுக்கு மத்தியில் கூரைக்கு கீழாக புதர்களுக்கு அருகில் வீடுகள் என்ற பெயரில் சில சுவர்கள் கட்டப்பட்டிருக்கும். 

    இதே சூழலில்தான், வீடற்றவர்களையும் தலைநகரில் பார்க்கலாம். இருவுகளில் அடைக்கப்பட்ட கடைகளின் வாசலில் அழுக்கு தேய்ந்த பாயின் மீது நிம்மதியாக உறங்கிகொண்டிருப்பவர்களுக்கு பகல்தான் பதட்டமாகவும் பசியாகவும் இருக்கும்

    ஒரு பக்கம் வீடற்றவர்கள். ஒரு பக்கம் காலியான வீடுகள் . ஒரு பக்கம் வாடகை வீடு கிடைக்காதவர்கள். இன்னொரு பக்கம் சொந்த வீடு வாங்கி ஆயுள் முழுக்க கடன் கட்டுகின்றவர்கள். இப்படி பல தரப்பினரைக் கொண்டுதான் கோலாலும்பூர் போன்ற பட்டிணங்களில் வாழ்வென்னும் சுழற்சி சுழல்கின்றது. இதன் மூல சுழற்சியாக இருப்பது  பொருளாதார சுழற்சிதான். இச்சுழற்சி சிலரை மேலேயும் சிலரை கீழேயும் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது . மனிதனை அவனது கடைசி எல்லை வரை ஓட்டிச்செல்கிறது. அவனை ஓட செய்கிறது.

    மேலேயும் கீழேயும் சுழற்றுக்கொண்டிக்கும் போது சிலர் தூக்கி வீசப்படுகின்றார்கள். அப்படி வீசப்பட்டவர்களைப் பொருத்தவரை அவர்களும் பந்தயத்தில் ஓடுகின்ற பாணியிலேயே யாருமில்லாத பந்தயத்தில் தங்களை முன்னிருத்த ஓடிகொண்டிருப்பது போல மாயைக்கு ஆட்படுகின்றார்கள். பொருளாதாரம் குறித்தும் நாட்டின் வளர்ச்சி குறித்தும் போதுமான தகவல்களை சேகரித்துக் கொள்கிறார்கள். பாக்கேட் காலியாக இருந்தாலும் எதை குறித்து சொல்வதற்கு கருத்து அவர்களிடம் இருக்கிறது. சக மனிதனுடன் பழகுவது கூட தன் தகுதிக்கு ஏற்றார்போல இருப்பதை உறுதி செய்துக்கொள்கிறார்கள். சாப்பிடும் இடங்கள், ஆடை வாங்கும் கடைகள் என எதுவாக இருந்தாலும் ஒரு தரம் வேண்டும் என நிர்ணயம் செய்துக்கொள்கிறார்கள்.

    இயந்தர மனிதர்கள் நிறைந்துக் கொண்டிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் எப்போதாவது சில நிஜ  மனிதர்கள் கன்ணுக்கு தெரிவார்கள்.  

   எனக்கு ஒரு பைத்தியக்கார சீனக்கிழவனின் அறிமுகம் கிடைத்தது. புதிய வாடகை வீட்டில் முதலாவதாக சந்தித்தது அந்த கிழவனைத்தான். கையில் பையும் குடையும்தான் அந்த சீனக்கிழவனின் அடையாளம் போல. பின்னர் எப்போது பார்த்தாலும் அவற்றுடன்தான் தெரிந்தார்

     வாயும் பேச வராது, மனநிலையும் ரியில்லையென தெரிந்தது. இருந்தும் இன்னமும் அண்ணனின் பாதுகாப்பில்தான் இருக்கிறார் என்று பாதுகாவலர் சொன்னது; அந்த அண்ணனை ஒரு முறையேனும் பார்க்கத்தோன்றியது. மன நலம் பாதிக்கப்பட்டவர்களை இளமை காலத்திலேயே பார்த்துக்கொள்வது சிரமம். அதிலும் தனது வயதான காலத்தில் மனநலம் குன்றிய தம்பியை வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் அவரை சந்திப்பதற்கான வேறு காரணம் தேவையில்லாமல் போனது.

      அடுக்குமாடி வீட்டுப்பகுதியிலேயே மளிகை கடை இருக்கிறது. பணக்காரர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே எல்லாவற்றையும் வைத்துவிடுவார்கள் போல; உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம், மசாஜ் செண்டர் என அலுவலக வேலையை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே போவதற்காக எந்த காரணமும் இல்லாமல் இருந்தார்கள்.

    மளிகை கடையில் அன்றைய தேவைக்கு பொருட்களை வாங்கிகொண்டிருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்ததும் கடைக்கு வெளியில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து பேசத் தொடங்கினேன். லேசாக தூரல் போட்ட மழை சட்டென அடைமழையானது. அப்போது, தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த என்னையே அந்த சீனக்கிழவன் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்ததும் மனதில் சுருக்கென்றது. கையில் ஒரு ரிங்கிட் இருந்தால், போனால் போகுது என்று கொடுத்துவிடலாம். ஆனால் இருப்பதோ எல்லாம் ஐம்பது வெள்ளிதாள்கள். சீனக்கிழவன் வாயில் சத்தமிட்டுக்கொண்டே என்னை நோக்கி வந்துகொண்டிந்தார். எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. சகஜமாக தொலைபேசியில் பேச முடியாமல் அழைப்பை துண்டித்தேன். இப்போது இம்மாதிரியான பைத்தியங்கள் குடியிருப்பில் இருப்பது எத்தகைய பிரச்சனையை கொடுக்கும் என மனம் கணக்கிட்டது. இப்படி பைத்தியங்களை குடியிருப்பு பகுதியில் தங்க வைத்திருக்கும், கிழவனின் அண்ணன் மீது கடுப்பும் ஏற்பட்ட.து.

   அருகில் வந்த சீனக்கிழவன் சத்தத்தின் மூலமும் செய்கையின் மூலமும் என்னிடம் எதையோ கேட்க எனக்கு அவமானமாக இருந்தது. என்னை பார்த்துக் கொண்டிருந்த சிலர் சிரிக்கத்தொடங்கினார்கள்.

    இடத்தைவிட்டு நகர்ந்திட நினைத்து சட்டென எழவும் அந்த சீனக்கிழவன் என் கையை பிடித்துவிட்டார். அப்படியே கிழவனை தள்ளிவிட முயற்சிக்கையில், கையில் இருந்த குடையை என்னிடம் கொடுத்து, வீட்டுக்குப்போகச்சொல்லி செய்கை காட்டினார்.

 
    மழைக்குத்தான் நான் ஒதுங்கியிருப்பதாக நினைத்துக் கொண்டார்.. குடையை கொடுத்து அவர் மழையில் நனைந்தபடி நடக்கத்தொடங்கினார். அவர் கொடுத்த குடையை திறந்தேன். கிழிந்திருந்தது. கிழிந்ததின் வழியே அந்த பைத்தியக்கார சீனக்கிழவன் தெரிந்தார். கடைசியில் என்னையும் பொருளாதார சுழற்சி தூக்கி வீசிவிட்டதாக உணர்ந்து நானும் நடக்கத்தொடங்கினேன். குடையினுள்ளே பெய்துக்கொண்டிருக்கும் மழையில் உடல் மட்டுமின்றி மனமும் நனைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக