Pages - Menu

Pages

அக்டோபர் 14, 2014

இன்னும் சில கொலைகள்

இன்னும் சில கொலைகள்
 

 
 
முட்டி வலிக்க படியேறிதான் செல்ல வேண்டும். அதிலும் ஐந்தாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கு செல்வதற்குள் நாக்கு தள்ளிவிடும். வழக்கமாக செல்கிறவர்கள் முன்னெச்சரிக்கையாக ஐத்தாவது மாடியில் அடி வைக்கும் போதே மூக்கினை மூடிக்கொள்வார்கள். அடுத்தடுத்த படிகளில் அவசரம் தெரியும். ஆறாவது மாடியை அடைந்ததும் மூச்சினை உள்ளிழுத்து முக்கிகொண்டு முன்னே நடந்து கதவை அடைவார்கள். எப்படியும் அங்கிருக்கும் வாந்தி காய்ந்து போயிருந்தாலும் கவுச்சி வாடை இருக்கவே செய்யும். இது போதாதென்று மூத்திர வாடை வெறு. புதிதாக படியேறுகிறவர்களின் சின்ன அஜாக்கிரதையும் மூச்சடைக்க செய்துவிடும். எதுதான் அங்கு மூந்திரமடிக்க வைக்கிறதென்று கண்டுபிடிக்க முயன்றார்கள்.
வாந்தியும் தொந்தரவுதானே , மூத்திரத்தின் காரணம் மட்டும் அவ்வளவு அவசியமா அவர்களுக்கு என்றால் அதுதான் இல்லை. வாந்தியெடுக்கும் அளவுக்கு சிறுவர்கள் குடித்து போதையுடன் படியேறமாட்டார்கள். அப்படித்தான் அவர்கள் நம்புகிறார்கள். எதையெதையோ நம்பியவர்களுக்கு இதுவொன்னும் ஒவ்வாமையல்ல. அதே போல, சிறுநீர் கழிக்குமளவுக்கு சில சேட்டை சிறுவர்கள் இருப்பதாகவும் நம்பினார்கள். குடிகாரன்களுடன் மோதுவதைவிட குட்டி பையன்களுடன் மோதுவது பாதுகாப்பானது. எந்த ஆதாரமும் இன்றிதான் இவர்கள் நம்பிக்கையோடு காரணங்களை தேட தயாரானார்கள்.
அன்றுதான் கூட்டம் கூடியது. வந்திருந்த கூட்டத்திற்கு ஏற்றார்போல பின்னர் கூடாரங்கள் அளந்து பூட்டப்பட்டன. பார்ப்பதற்கு கூடாரம் நிறைய கூட்டமாக இருந்தது. இருப்பதாக அப்படி தெரிந்தது. கூடாரத்தை வாடகைக்கு கொடுக்கின்றவர்களே சில வசதிகளையும் செய்திருந்தார்கள். உன்னதமானதாக கருதப்பட்டது அவர்களே கூட்டிவரும் இருபது பேர் கொண்ட குழு. கூட்டத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும். யார் மண்டை ஒடிந்தாலும். கூடாரத்துக்கோ அங்கிருக்கும் துணிகளுக்கோ எதும் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்வார்கள். தேவையென்றால் இவர்களே கூட அசம்பாவிதத்தை ஏற்பாடு செய்வார்கள். அதுவொன்றும் பெரிய வேலை இல்லைதான். சுலபமானதுதான். ஆனால் அதற்கேற்ற நேரம் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஆளை பார்த்து கெட்ட வார்த்தையில் கேட்க வேண்டும். அல்லது சரியான நேரத்தில் சரியான ஆள் மீது எதையாவது வீச வேண்டும். அவ்வளவுதான். கொஞ்சம் பிசகினாலும் நம்மை பிதுக்கிவிடுவார்கள். எச்சரிக்கை என்பதைவிட சரியான நேரம் பார்த்திருக்க வேண்டும். அதற்காக காத்திருக்கவும் வேண்டும்.
அன்றைய கூட்டத்திற்கும் அசம்பாவிதத்திற்கும் தொடர்பில்லாதமையால் வந்திருந்திருந்தவர்களின் அக்கரை அவர்களின் கூடாரம் , நாற்காலி மேஜை துணிகள் மீதுதான் இருந்தது.
மூத்திரக்காரணத்தை கண்டறிய அங்கு வசிப்பவர்கள் கூடாரத்தின் கீழ் கூடியிருந்தார்கள். அடுக்குமாடி வீடுகள் எல்லாம் காலியாக இருக்குமென நினைத்தால் ஏமாற்றம்தான். ஒரு வீட்டில் மட்டும் ஏதோ சத்தம் கேட்டது. மூன்று அறை கொண்ட வீடு. நடுத்தர படுக்கையறை ஒன்று. அதைவிட சின்ன படுக்கை அறை ஒன்று. நடுத்தரமும் இல்லாமல் சின்னதாகவும் இல்லாமல் குட்டியாக மூன்றாவது அறை. வழக்கமாக மூன்றாவது அறைதான் சாமிக்கென ஒதுக்கியிருப்பார்கள். அதிலும் பாதியாக்கி ஸ்டோர் சாமான்களை வைத்திருப்பார்கள்.
முதல் அறையில் காத்தாடியை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி . ஒல்லியானவளாக இருந்தாலும் அவள் நின்றுக்கொண்டிருக்கும் நாற்காலி அவளை பயமூட்டியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நாற்காலிதான் என்றாலும் உடைபடுவதற்கு நாளாகும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துக் கொண்டிருந்தது. துடைத்து முடித்தவள். தன் தோளில் போட்டு வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து உதறினாள். நல்ல மொத்தமான துப்பட்டா. ஒரு வீசுதலில் துப்பட்டா காத்தாடிக்கு இந்த பக்கம் நுழைந்து அந்த பக்கம் வந்து தேவியின் கைக்கு கிடைத்தது. நன்றாக சுருக்கிட்டாள். ஒரு முறை இழுத்து பார்த்தாள். துப்பட்டாவும் தாங்கியது காத்தாடியும் தாங்கியது. அவள்தான் தாங்காது இருமினாள்.
இது அவளது கடைசி இருமலாக இருக்கட்டும் என நினைத்துக் கொண்டாள். மீண்டும் இருமல் வந்தது. இந்த சனியன் எப்போது தொலையும் என தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
வெளியில் இருந்து குரல் கேட்டது. கழுத்தில் மாட்ட வேண்டிய கயிறு அப்படியே கையில் நின்றது. உன்னிப்பாக என்ன பேசுகிறார்கள் என கேட்டாள். ஒலிபெருக்கியின் சத்தம் ஒய்..ஒய்யில் தொடங்கி ஒழுங்காய் கேட்டது.
இனி தினமும் ஆறாவது மாடிக்கு ஒருவர் காவலிருக்க வேண்டும் என ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதனை ஆதரித்தார்கள். வெளியில் இருந்து ஆட்கள் வந்தால் செலவாகும் என்பதால், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு நாளுக்கு ஒருவர் அங்கு காவலிருக்கவேண்டும் என்றார். சின்ன சலசலப்பு. யார் முதலில் நிற்கவேண்டும் என ஆளுக்கு ஆள் ஒரு கருத்தினை சொன்னார்கள்.
ஆறாவது மாடி காவலுக்கு முதல் மாடியில் இருந்து காவலுக்கு ஆள் போவதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதில் நியாயம் இருப்பதாக தெரிந்ததும் ஆறாவது மாடியில் தங்கியிருப்பவர்கள் மட்டும் அங்கு காவலுக்கு இருக்க வேண்டும் என முடிவெடுத்து ஓரளவுக்கு சம்மதம் வாங்கினார்கள். ஆறாவது மாடியில் மொத்தம் பத்து வீடுகள் . ஒவ்வொருவரும் சம்மதம் தெரிவித்து கையொப்பமிட தொடங்கினார்கள். மொத்தம் ஒன்பது பேரே இருந்தார்கள். பத்தாவது வீட்டுல் இருக்கும் ஆள் இல்லாததை அப்போதுதான் கவனித்தார்கள். வராதவள் பெயர் தேவி. இருமல் வியாதிக்காரி. அவளை வெளியில் அதிகம் பார்க்க முடியாது. அவள் கணவன் தான் அடிக்கடி வெளியில் தென்படுவான். அவனும் எங்கே என்ன வேலையென்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. மாடி பால்கனியில் அவனை பார்ப்பதோடு சரி கீழே வருவது எப்போதாவது ஐஸ்காரன் மணி அடித்துக் கொண்டே வரும்போதுதான். குதித்து குதித்து வந்து ஐஸ் வாங்கி குதித்து குதித்தே மாடிக்கு போவான். அவனக்கு ஒருகால் வளர்ச்சியின்றி இருப்பது ஐஸ்காரருக்கும் அந்த நேரம் ஐஸ் வாங்க வந்திருப்பவர்களுக்குத்தான் தெரியும்.
வேறெந்த விபரமும் கூடார கூட்டத்திற்கு தெரியவில்லை. ஆழமாக யோசிக்க ஆரம்பித்தார்கள். அவள் பெயர் தேவியா இல்லை ஸ்ரீதேவியா என கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விதான் அவர்களின் யோசனைக்கு காரணம்.
யாரையாவது அனுப்பி ஆறாவது மாடியில் யார் இருந்தாலும் கூட்டிவரும்படி மீண்டும் ஆள் அனுப்ப யோசனையில் ஆழ்ந்தார்கள். சிற்றுண்டியும் வந்தது. நிதானமாக சாப்பிட்டு பிறகு யார் போகலாம் என பேசி முடிவெடுக்கலாம் என கூட்ட தலைவர் சொல்லவும். ஒருசேர ஆமாம் போட்டனர் அங்கத்தினர். சிற்றுண்டியை கொண்டு வந்தவர்கள் என்ன காரணமோ தெரியவில்லை. கரண்டியை எடுத்து வர மறந்துவிட்டார்கள்.
அதற்கான மேஜையில் அடுக்கியிருந்த பலகாரங்களை கையில் எடுப்பது கூட்டத்தினர்க்கு அநாகரீகமாக இருந்தது. வைத்திருப்பது வடைதான் என்றாலும் கையில் எடுப்பதென்பது அவ்வளவு சரியில்லைதான். கரண்டிக்காக ஒரு சலசலப்பு ஏற்பட ஒரு சம்பவம் நடந்தது.
தலைவர்தான் எப்போதும் முதலில் சாப்பிடவேண்டும் என்பது அவர்களே எழுதி வைத்துக்கொண்ட சட்டம். அது வடையானாலும் வருமானமானாலும். கூட்டத்திலிருந்து தன்னுடைய குட்டி கூட்டத்துடன் சாப்பாட்டு மேஜைக்கு சென்ற தலைவர் எதார்த்தமாக வடையில் கை வைக்க உடன் இருந்தவர்கள் பதறினார்கள். தலைவர் என்ற தகுதிக்கு இப்படி வடைகளையெல்லாம் கையில் எடுப்பது ஒவ்வாது என்றார்கள். அதோடு தலைவருக்கான தகுதிகள் என்னவென்று வடையில் இருந்து தொடங்கினார்கள். குட்டி கூட்டம் தலைவரிடம் ஏதேதோ பேச பெரிய கூட்டம் ஏதும் புரியாமல் தங்களுக்கான சிற்றுண்டி என்னவென்றே தெரியாமல் தேவியா ஸ்ரீதேவியா என இன்னமும் யோசித்துக் கொண்ட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு வராதவள் தேவியாக இருந்தால் என்ன, அவள் ஸ்ரீதேவியாக இருந்தால் என்னவென்று காத்துவாக்கில் காதில் விழுந்தது. அந்த முடிவுதான் இந்த கூட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுமென அவர்களுக்குள்ளேயே பேசி சமாதானம் ஆனார்கள்.
தன்னை சூழ்ந்துள்ள குட்டி கூட்டத்தின் இந்த ஆலோசனைகளை கேட்டுக் கோண்டிருந்த தலைவருக்கு சட்டென மூளையில் பொறி கிளம்பியது. இப்படியே போனால் அடுத்த தலைவராய் தன் மகன் ஆக முடியாது என புரிந்தது. தன் தலைமைத்துவத்தில் எல்லாமே சரியாக நடக்கிறது என்பதையும் தான் ஒரு அரசியல் சானக்கியன் என்பதை எடுத்துக் காட்ட முனைந்தார். சிற்றுண்டியை கொண்டு வந்தவர்களிடம் எங்கே உங்க முதலாளி என்றார். தோ வந்திடுவாரு என்று கூறிய எலும்புத்தோல் போர்த்தியவனை பார்வையால் மிரட்டத்தொடங்கினார்.
வடைக்காக கொடுத்த பணமெல்லாம் வீண் என்றும், ஒரு கரண்டியை கூட ஒழுங்காக கொண்டு வராதவர்களை நம்பி அடுத்தடுத்த வியாபார ஆதரவை கொடுப்பது எப்படியென்றும் மைக் இல்லாமலேயே விலாசினார். அதுவரை ஏதேதோ பேசிய அனைவரும் தலைவர் கோவப்பட்டதால் அவரின் போராட்ட குணம் குறித்து பேச ஆரம்பித்தார்கள். கோவத்திற்கும் போரட்ட குணத்திற்கும் அப்படியொரு ஒற்றுமையென யாரும் பாலவயதில் அவர்களுக்கு பாடம் நடத்தியிருக்கலாம்.
வெள்ளை சட்டை வெள்ளை வேட்டை வெள்ளை ஜட்டி போட்டிருந்தவர் சொன்ன கதை தலைவரின் போராட்ட குணத்தை மேலும் மெருகூட்டியது.
இப்படித்தான் ஒரு முறை, தலைவரின் மனைவி தன்னிடமிருந்த பழைய புடவையொன்றை வேலைக்காரிப்பெண்ணுக்கு கொடுத்திருக்கிறாள். அவளும் மறுநாளே அதனை அணிந்து வேலைக்கு வந்திருக்கிறாள். முதல் நாள் அதிக நேரம் தொண்டர்களுடன் சமூக வளர்ச்சி குறித்து பேசிய போதையில் தாமதமாகவே படுக்கையை விட்டு எழுந்திருக்கிறார். கண் மங்கலாக தெரிந்தது. எதிரே இருக்கும் கண்ணாடி அலமாரியை மனைவி துடைத்துக் கொண்டிருக்கிறாள். தலைவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சட்டென மனைவியை பின்னால் இருந்து கட்டியணைத்துவிட்டார். ஒரே அலறல் சத்தம். வெளியில் இருந்து சத்தம் கேட்டு ஓடி வந்திருக்கிறாள் வேலைக்காரி. பாருங்களேன் காலையில் கண்கள் தெளிவில்லாத நேரம் கூட வேலைக்காரி இருந்தும் தலைவர் தன் மனைவியைத்தான் கட்டியணைத்திருக்கிறார். இதே வேறொருவராக இருந்திருந்தால், மனைவியின் ஆடையை வேலைக்காரி அணிந்திருந்ததை காரணம் காட்டி தெரியாதது போல வேலைக்காரியை கட்டிப்பிடுத்து மன்னிப்பு கேட்பார்கள். தலைவரின் போராட்டத்திற்கு இதுவல்லவோ சான்று என முடிக்கவும். இன்னொருவர் சொன்ன கதையும் காதில் விழுந்தது. அது அந்த நேரம் நடந்திருக்க வேண்டிய கதை. ஆனால் யாரும் அந்த கதைக்கு காது கொடுக்கவில்லை. அவனும் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி வெள்ளை ஜட்டி போட்டிருந்தால் அவனது கதையும் கேட்கப்பட்டிருக்கும். அவன் கொஞ்சம் கிறுக்கு போல வேறு வண்ணத்தில் குறிப்பாக தலைவரின் கட்சிக்கொடியில் இல்லாத வண்ணத்தில் பேனாவை சட்டைப்பையில் வைத்திருந்தான். ஒருவேளை இவன் எத்ரிகட்சி ஆளாக இருக்கலாம் எனவும் ஒரு பேச்சு அடிப்பட்டது. அந்த கலகக்காரனின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி தலைவரை மாசு படுத்தும் என முன்னெச்சரிக்கையாக இருந்தார்கள்.
அந்த நேரம்தான் சிற்றுண்டி கொண்டு வந்தவரின் முதலாளி வந்து சேர்ந்தார். கரண்டி இல்லாததை கண்டு தலைவர் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து தன்னுடைய வேலையாளின் கவனக்குறைவை அவரும் கண்டித்து. அடுத்தடுத்த வாய்ப்புகள் தடைபடாமல் கிடைத்திட இம்முறை கட்டணம் வேண்டாம் எனவும் இலவசமாக நிகழ்ச்சிக்கு கொடுத்ததாக இருக்கட்டுமெனவும் பேசி தலைவரை சமாதானம் செய்தார்.
இப்படி உடனே சமாதானம் ஆவாரா தலைவர். முதலாளி தன் பையில் இருந்து காசு வாங்கிய ரிசிட்டையும் கொடுத்த காசையும் திரும்ப கொடுக்கவும். கையால் சாப்பிடும் தமிழ் பாரம்பரியத்தை குறித்து பேச ஆரம்பித்தார்.
தலைவர் பேசி முடித்ததும் முதல் வடையை தான் சாப்பிடாமல் சிற்றுண்டி வேலையாளுக்கு கொடுத்து. உழைப்பவர்கள் வயிறுதான் முதலில் நிறையவேண்டும் என்று மேலும் அரைமணிநேரம் பேசினார். தொடங்கிய பேச்சினை தொடர்ந்து மதிய நேர சாப்பாடும் வந்தது.
கூட்டம் முடிய தாமதமாகும் என தெரிந்தே காலை சிற்றுண்டியை ஒரு இடத்திலும் மதிய உணவை இன்னொரு இடத்திலும் சொல்லி வைத்த தலைவரின் புத்தி சாதூர்யம் குறித்து கூட்டம் பேச ஆரம்பித்தது. வடைகள் அப்படியே மிச்சமிருக்க தலைவரின் அழைப்புக்கு இணங்கி சிறு கூட்டமும் பெரு கூட்டமும் வந்திருந்த சாப்பாடுக்கு வரிசையாய் நின்றது.
சாப்பாட்டுக்காக மேஜை போடப்பட்டிருந்தது. வெள்ளைத்துணியால் மேஜை மூடப்பட்டது. தலைவர் ஒரு முறை திரும்ப பார்த்தார். அவர் ஆசைப்பட்டது போலவே அவருக்கு பின்னால் வரிசையாய் நின்றிருந்தார்கள். கட்டுக்கோப்பாக வழிநடத்தப்படுவதை நினைத்து தலைவரின் புருவம் தானாக ஒரு முறை ஏறி இறங்கியது.
சாப்பாட்டில் ஆவி பறக்கிறது. வாசனையும் அவ்வளவு ரம்மியமாக இருந்தது. சாப்பாடு பறிமாறவேண்டியவரும் பளிச்சென்ற வெள்ளையில் வந்திருந்தார்கள். ஒரு சாப்பாட்டுக்கு ஒரு ஆள் இரண்டு கைகளிலும் கரண்டிகள். முகம் முழுக்க பல்லாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். தலையில் தொப்பியை சொல்லியே ஆகவேண்டும். பார்ப்பதற்கு மெடுக்கான தோற்றத்தைக் கொடுத்தார்கள். தலைவர்தானே முதலில் சாப்பிட வேண்டும். முன் வரிசை வேறு. வேறு காரணத்திற்காகவும் தலைவர் திரும்பி வருசையை பார்த்தார். வயதான அல்லது ஒல்லி பில்லியான யாரும் இருந்தால், அவர்களை முதலாவதாக சாப்பிட வைத்து மேலும் தன்னை உயர்த்திக்கொள்ளலாம். ஆனால், அதைவிட முக்கியமாக , தலைவரின் உயர்வைவிட முக்கியமாக அவரின் தொப்பைக்கு இப்போது பசிக்கிறது. ஆகவே தானே முதலில் சாப்பிட முடிவை வழக்கம் போலவே தனது முதாதையர் பாணியில் பின் பற்றினார்.
தலைவருக்கு பறிமாறும் பாக்கியம் பெற்றவரின் முகத்தில்தான் எத்தனை பூரிப்பு புல்லரிப்பு. தலைவரின் தட்டு நிறைந்துக் கொண்டிருக்கும் சமயம் சட்டென அடுக்குமாடி ஆறாவது வீட்டில் இருந்து ஏதோ உடைந்தது. பெரிதாகத்தான் உடைந்திருக்க வேண்டும். சத்தம் கேட்டதோடு நில்லாமல் ஆறாவது மாடி ஜன்னல் வழியே புகையும் வெளிவந்தது.
ஒருவர் பின் ஒருவராக புகைவந்த ஜன்னலை பார்க்கிறார்கள். மீண்டும் அவள் தேவியா ஸ்ரீதேவியா என பேச்சு தொடங்கியது.
இன்னிக்கு என்ன நாளு இத்தனை மணிக்கு சாமி கூம்டு சாம்பரானி போடறாங்க என தலைவர் கேள்வியை எழுப்ப வரிசையினர் ஒவ்வொருவராக இன்றைய நாளின் சிறப்பை யோசிக்கலானார்கள். ஆறாவது மாடி நெருப்பு அடுத்தடுத்து பற்றியெரிய தயாரானது.
 
- தயாஜி-
 
நன்றி மலைகள்.காம் 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக