(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரை)
கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற கதையை எழுதியதற்காக தயாஜி மீது கலாசார போலிஸ்களால் தொடுக்கப்படும் தாக்குதலும் தயாஜியை அவர் பணியாற்றிய அரசு நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியது.
-ஷோபா சக்தி
நன்றி வல்லினம்
கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற கதையை எழுதியதற்காக தயாஜி மீது கலாசார போலிஸ்களால் தொடுக்கப்படும் தாக்குதலும் தயாஜியை அவர் பணியாற்றிய அரசு நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியது.
கடவுள் மீதும், பெற்றவர்கள் மீதும், பெற்ற பிள்ளைகள் மீதும் காமுறுவது இலக்கியத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் புதியதல்ல. இல்லாதவொன்றை தாயாஜி சொல்லிவிடவில்லை. அவ்வாறு இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் இல்லாததைத் சொல்ல இலக்கியத்தில் அனுமதியுண்டு. சூரியனோடு புணர்ந்தது மகாபாரதம். சிங்கத்தோடு புணர்ந்து கருவுற்றது மகாவம்சம். தாயை மகன் புணர்ந்தது விவிலியம். இந்த மூன்று இலக்கிய நூல்களும் மூன்று மிகப் பெரிய மத நிறுவனங்களின் வேதநூல்கள்.
ஒவியர் எம். எப். உசைன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தது, ‘த டாவின்ஸி கோட்’ நாவலில் ஏசுக் கிறீஸ்துவுக்கு மரிய மதலேனாளோடு உறவிருந்ததாகச் சித்தரித்தது, டென்மார்க் பத்திரிகையொன்று இஸ்லாத்தின் இறைவனின் பிரதிமையை வெளியிட்டது, புத்தரின் உருவத்தை சட்டையில் பொறித்தது போன்ற சம்பவங்கள் மத அடிப்படைவாதிகளை மட்டுமே கொதிப்படைய வைத்ததேயல்லாமல் வெகுசனங்களை கலவரப்படுத்தவில்லை. அவர்களிற்கு கலைக்கு மரியாதை செய்யத் தெரியும்.
கடவுளைக் காதலானாகவும் காதலியாகவும் கொண்டாடிய இலக்கிய மரபுதான் நமது. திருவரங்கனை காதலனாக வரித்து நாச்சியார் பல நூற்றாண்டுகளிற்கு முன்பு பாடியதிலிருந்து, இன்றைய கவி வசுமித்ர
‘ஆகச்சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் காளியைத்தான் புணரவேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்..’
என எழுதியதுவரை ஏராளம் பெறுமதிமிக்க பெட்டகங்கள் நம்மிடமுண்டு.
இராமனைத் தெருத்தெருவாகச் செருப்பாலடித்தார் தந்தை பெரியார். கடந்த ஏப்ரல் மாதம் கத்தோலிக்க ஆர்ச் பிஷப் முன்பு திறந்த மார்பகங்களோடு தோன்றிய பெமன் (FEMEN) போராட்டக் குழுப் பெண்கள் ‘இந்தா வாங்கிக்கொள் இயேசுவின் விந்தை’ எனத் தண்ணீரை அவர்மீது ஊற்றினார்கள். இவற்றோடு ஒப்பிடுகையில் தயாஜி செய்தது காளிக்குச் சாதகமானதே. கலவியிலே மானுடற்கு கவலை தீரும் என்றான் பாரதி. காளிக்கும் தீரும்.
நமது முன்னோடி ஜி. நாகராஜன் சொன்னதை இங்கு குறிப்பிடலாம்:
‘நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இது உங்களிற்குப் பிடிக்காதிருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால்முழுமையும்தான் சொல்லியாக வேண்டும்.’
-ஷோபா சக்தி
நன்றி வல்லினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக