Pages - Menu

Pages

ஜூலை 05, 2012

பயணிப்பவனி பக்கம் 19

பிடித்த ரஜினியும் பிடிக்காத காதலும்;  ஒன்றால்தான் இணைக்கப்பட்டிருக்கிறது





ரஜினியை பிடித்திருந்தது. ஏன் பிடித்திருந்தது. யோசிக்கையில்; பைத்தியமாகத்தான் இருந்திருக்கிறேன். எனக்கு எந்த ஒரு வகையிலும் நன்மை செய்திடாத எங்கோ இருக்கும் ரஜினி என்ற சினிமா பிம்பத்தை என் தூக்கி தலையில் வைத்து கொண்டாடியிருந்தேன். படிக்கும் அறையில், மேஜையின் மேல் ரஜினியின் படம். தலை முடியும் ரஜினியின் பாணி. பணப் பையிலும் என் படத்திற்கு அருகில், ரஜினியின் படம்.

இப்போது அவை எதுவுமே என்னிடம் இல்லை. ரஜினி மீது இருந்த கண்மூடித்தனமான ஈடுபாடும் இல்லை. முன்பு போல கேள்விகளுக்கு இல்லாத இடம் இப்போது இருக்கிறது.

இப்போது எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கும் போது இருக்கும் கேள்விகள் இன்னமும் ஆழமாகிறது. ஒருவேளை ரஜினிக்கும் என்னைப்போல மூக்கு பெரிதாக இருப்பதோ, தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசுவதோ, அகல நெற்றியோ, பரட்டை தலை முடியோ கூட காரணமாய் இருக்கலாம். ஆனால் ஏன் ரஜினி.

பதின்ம வயதில் ரஜினி என்பது என்னை இயக்கிய ஆளூமையாகவே எண்ணி வந்திருக்கிறேன். அதே விறுவிறு நடை. சத்தமாக சிரிப்பது. சினிமாவில் ரஜினி பேசிய வசனங்களை பேசிச் கண்ணாடி முன் என் முகத்தையே உற்றுப் பார்ப்பது. இதுவெல்லாம் இப்போது நினைக்கையில் கேலிக் கூத்தாக இருக்கிறது. ஆனால் அப்போது அதைத்தான் நான் அன்றாட வாழ்வின் அடிப்படையென்றே நம்பி வந்திருக்கிறேன்.

ரஜினி போலவே நெற்றியில் பட்டையெல்லாம் அடித்த காலம் அது. அந்த பிம்பம்தான் எனக்கு கடவுள்கள் மீது பற்றிக் கொண்டது. அவ்வபோது ரஜினியின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அதிசயங்களும் என் வாழ்விலும் நடக்க வேண்டும். நானும் ஒரு ரஜினியாக வேண்டும் என்பதே லட்சியம் . அந்த எண்ணமே பக்தியாக மாறியது.

காலண்டரில் இருக்கும் சாமி படங்களை எல்லாம் வெட்டி வெட்டி புத்தகங்களில் ஒட்டிவைப்பது. தூங்கும் போது சாமி படத்தை சட்டைப் பையில் வைத்து படுப்பது. பள்ளியிலும் நண்பர்களிடம் இருந்து சாமி படங்களை காசு கொடுத்து வாங்குவது. பத்திரிகையில் வரும் கடவுள் சம்பந்தமான விபரங்களை சேகரித்து வைத்திருந்தேன். இந்த விந்தை செயலுக்கு என்ன காரணம் இருக்கும்.

இந்த வகை செயல்களில் என் காதலையும் நான் வைக்க நினைக்கிறேன், உடன் நண்பர்களையும்.

படிக்கும் போதினில் எனக்கு பல நண்பர்கள் இருந்தார்கள் அதிலும் நண்பிகள் அதிகம். போதாதற்கு பேய்க்கதை சொல்வதின் நான் மன்னனாக இருந்த நேரம் அது. ஆண்களை பேய்க்கதை சொல்லியும் பெண்களை கவிதைகள் சொல்லியும் சுலபமாக நம்வழிக்கு கொண்டு வந்துவிடலாம். கொண்டும் வந்தேன்.

இப்போது அந்த காதலும் இல்லை, எந்த நண்பனும் நம்பியும் உடன் இல்லை. ஒவ்வொன்றையும் யோசிக்கும் போது நடந்து வந்த ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு மெல்லிய சம்பந்தம் இருப்பதாகவே படுகிறது. ஏன் சேர்ந்தோம் பிரிவதற்குத்தானோ. ஏன் காதலித்தோம் வெறுப்பதற்குத்தானோ.

அது எப்படி நண்பர்களும் பகைவர்களாகி விடுகிறார்கள். காதலிகள் துரோகிகளாகி விடுகின்றார்கள்.

எத்தனை நண்பர்கள் இருந்தாலும் நாம் மனம் வந்து பேசும் நண்பன் ஒருவனாகத்தான் இருப்பான். எனக்கும் இருந்தான். அவன் இளவரசன். நண்பர்கள் நாங்கள் தனி ஆளுமைகளாக வளர நேரிட்டது. கோவமும் சண்டையுமே உருவானவனாக அவன் ஆனான். கோவமும் சமாதானமும் சேர்ந்தே நான் ஆனேன். நான் அப்படியே என் அப்பா. அவன் அப்படியே அவன் அப்பா.

எங்களுக்குள் இயற்கையாகவே பிளவு ஏற்பட்டது. காரண காரியம் இல்லாதது போல அப்போது தோன்றினாலும் இப்போது அதன் காரணம் விளங்கும் நேரம் நெருங்குவதை உணர முடிகிறது.

தனியாளுமை வளர காரணமாய் அமைவதே கருத்துகள்தானே. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இல்லாவிட்டாலும் தங்களுக்கு பிடித்த கருத்துகளுக்கு தலையாட்டிவிடுவார்கள். அப்படி அமையும் கருத்துகளுக்கு தங்களை இயற்கையாகவும் செயற்கையாகவும் தயாராகிறார்கள். கருத்துகளின் வலிமையே ஆளுமையாக உருமாறுகிறது. அப்படித்தான் நண்பர்கள் நாங்கள் பிரிந்தோம்.

தனித்தனி கருத்துகள் வழியே நாங்கள் அறிய விரும்பியிருக்கிறோம். எங்கள் அடையாளமே அதுதான் என நினைத்திருந்தோம். பெரிய புரட்சியெல்லாம் இல்லை. ‘‘நான் சொல்வதை நீ கேள்’’, என்ற வாசகம்தான் இலைமறைக்காயாக எங்களை இயக்கிக் கொண்டிருந்தது.

எத்தனை பிளவுகள் எத்தனை பிரிவுகள். எல்லாமே நாங்கள் எங்களுக்கு என தேடிக் கொண்ட கருத்துகளும், காட்ட நினைத்த எங்கள் ஆளுமைகளும்தான். ஆனால் அவை எல்லாமே ரஜினி படங்கள் போல விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் நிறைந்தவை ஆனால் போலியானவை. ரஜினியைப்போலவே மிகைப்படுத்தபட்ட கருத்துகள் அவை. ஆனால் ஏன் அதிலேயே தேங்கியிருந்தோம்.

அப்படித்தான் எங்கள் காதலும் இருந்தது. எனக்குத் தெரிந்து உடன் படித்த தோழனும் தோழியும் சமீபத்தில்தான் திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்கள் காதலிக்கும் போது தோழி குறித்து தோழனும், தோழன் குறித்து தோழியும் மற்றவரிடம் குறை சொல்லாமல் இருந்திருக்கவில்லை.

பெரிய பெரிய பிரச்சனைகளையெல்லாம் சந்தித்தார்கள். எல்லாம் அவர்களுக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனைகள்தான். இப்போது கணவன் மனைவியாகி விட்டார்கள். எப்படி சாத்தியம் என விசாரித்தால் புரிகிறது. அவர்களின் திருமணம் கூட ஈகோவால்தான் நடந்தேறியதாம்.

பிரிய நினைத்த சமயம், ஊரென்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும் என்ற காரணத்தால் இணைந்திருக்கிறார்கள். தனக்காக வாழாமல் ஊருக்காக வாழ வைக்கும் காதல் இப்போது வேண்டுமானால் இனிக்கலாம். நாளையும் இனிக்குமா?

ரஜினி ஏற்படுத்திய மாயை போலவே எனக்கு ஒரு காதலி ஏற்படுத்திய மாயையும் இருந்தது. எந்த எதிர்வினையோ தெரியவில்லை. நான் தூக்கியெறிந்துவிட்டேன். நண்பர்களும் சுற்றமும், இதனை பெரும் குற்றமாகவே கருதி என்னை ஒதுக்கினர்.

இப்படி ஒதுக்கி தள்ளுகிறவர்களெல்லாம் ஒரு குணத்தின் அடிப்படையில் சேர்க்கலாம். எப்படி கெட்டவனை அடையாளம் காட்டுகிறவன் மற்றவர் கண்களுக்கு நல்லவனாக தெரிகிறானோ அப்படித்தான். உண்மையில் இவர்கள் இப்படிக் காட்டிக் கொடுப்பது கூட தாங்கள் நல்லவர்கள் என்று பிரகடணப்படுத்தத்தான். இது அரசியலுக்கும் பொருந்திவருகிறது. ஒரு ஊழலை இன்னொரு ஊழல் ஊருக்குக் காட்டி ஓட்டுக் கேட்கிறது!

காதல் என்ற மாயையில் நான் விழித்தது ஓர் ஆச்சர்யம்தாம். எந்த பொழுதில் என யூகிக்க முடியவில்லை. நிச்சயம் நடந்திருந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் என் முடிவிற்கும் சம்பந்தம் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒன்றின் பின் ஒன்றாக நடக்கும் ஒவ்வொன்றும் அதன் விளைவை நோக்கி நாம்மை நகர்த்திக் கொண்டே இருக்கிறது. எந்த நொடியில் எந்த பொழுதில் அது நமக்கு விழிப்பைக் கொடுக்கும் என தெரியவில்லை. எல்லோர்க்கும் விழிப்பு வருவதும் இல்லை.


நன்றி
 http://www.vallinam.com.my/issue43/thayaji.html
இதழ் 43
ஜூலை 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக