Pages - Menu

Pages

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 3

இரு ஆளுமைகள்



என் தந்தை மூலம் எழுத ஆர்வம் கொண்ட எனக்கு சிலரின் எழுத்துகளும் பெயர்களும் விருப்பமானது. என் தந்தையின் நண்பரான M.K. ஞானசேகரன் முதல் என் தோள் தட்டி “இதையெல்லாமா எழுதுவ நீ!” எனச் சொல்லும் என் நண்பர் மணிராமு வரை என் பட்டியியலில் அடங்கும். இந்தப் பட்டியலில் இருந்து தனித்து, தங்களுக்கும் தங்களின் படைப்புகளுக்கும் தனித்துவ இடத்தை பெற்ற இரு நண்பர்களைச் சொல்ல விரும்புகின்றேன்.

அப்பாவின் படிக்கும் பழக்கத்தால் வார மாத இதழ்கள் முதல் அன்றைய தின நாளிதழ் வரை படித்துவிடுவதும் அதில் உள்ளப் படங்களைப் பார்ப்பதும் பிடித்திருந்தது. உண்மையில் பதிமூன்றுக்கு முந்தைய வயதில்; நாளிதழிலும் வார இதழ்களிலும் வெளிவரும் சினிமா படம் என்றால் ஆசை அதிகம். அதிலும் அரைகுறை ஆடைகொண்ட அம்மணிகள் படம் என்றால் உணர்ச்சி கொஞ்சம் ஓங்கதான் செய்யும்...! சில பத்திரிகைகள்; அவர்கள் பத்திரிகை விற்பனைக்காக வாசகர்களின் அந்தரங்கக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஒரு பக்கத்தை ஒதுக்கியிருப்பார்கள். படிக்க படிக்க விசயம் தெரிகிறதோ இல்லையோ சிலவற்றில் ஆர்வம் எழுந்தது. அப்படியும் நடக்குமா என்ற யோசித்த வயது அது. இப்போதுள்ள மனநிலையில் படித்தால் அதெல்லாம் எந்த அளவுக்கு விளையாட்டு என்பது புரிகிறது. பத்திரிகை விற்பனைக்குப் இப்படிப் பச்சை பச்சையாய் கேள்விகளைத் தாங்களே கேட்டு தாங்களே பதில் எழுதி படிப்பவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டுவது என்ன மாதிரியான செயல்...? சினிமாவில் வரும் ஆபாசப்பாடல்கள் அநாவசியம் என அதே பத்திரிக்கையில் செய்திகளும் வருகின்றது. இப்படி அந்தரங்க கேள்விப் பகுதிக்கென சிலத் தன்மைகள் இருந்தன.

1. கேள்வி கேட்டவர் பெயரைக் குறிப்பிட விரும்ப மாட்டார்.
2. ‘குறிகள்’ குறித்த ஐயங்கள். (வாராவாரம் வரும்... வேறு வேறு பெயர்களில்)
3. பெண்களே பத்தில் ஒன்பது கேள்விகளைக் கேட்பார்கள்.
4. வாரம் ஒரு கள்ளத்தொடர்பை எப்படி மறைப்பது என்ற கேள்வி.
5. கண்டிப்பாக 16 வயது பெண்ணின் பாலுணர்வு குறித்த பயம்.
6. கணவரின் தம்பி அழகாய் தெரிவார்.
7. மச்சினியைப் பற்றியக் கனவால் பாதிக்கப்படுபவர்.
8. அப்பாவின் கைபடும் அவமானங்கள்.
9. அவளுக்கு வயது அதிகம் / அவர் திருமணமானவர்... ஆனால் அவ்வபோது தோணுகின்றது... இது நல்லதா கெட்டதா..?
10. உடலுறவைக் குறித்த மருத்துவரின் விளக்கம்..... நீலப்படத்தைவிட நீளும்.....!

சில சமயம் மட்டும் மனம் திருந்திவிட்டதாய் கடிதம் வந்திருக்கும். 13 வயதில் இதில் கிடைத்த சந்தோஷங்கள் இன்னும்கூட அங்கொன்றும் இங்கொன்றும் ஒட்டிக்கொண்டிருந்தாலும் முன்பு போல் உணர்ச்சிவசப்படுவது இல்லை. இப்போதெல்லாம் படிப்பதைவிட பார்ப்பது வசதியாக இருப்பதாலோ...? சமீபத்தில் நான் வாங்கிய ‘அர்த்தமுள்ள அந்தரங்கம்’, ‘பெண்களின் மறுபக்கம்’ பெண்கள் மீதானப் பார்வையை உன்னிப்பாக்குகின்றது. மருத்துவர் ஷாலினி எழுதிய இந்தப் புத்தகம் தொடக்கத்தில் ஆனந்த விகடனின் தொடராக வந்திருந்தது. இவ்வாறான சங்கதிகளைத் தவிர்த்து இதழ்களில் இலக்கியம் வாசிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.

அப்படி ஒருநாள் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கண்ணில் இந்த வரிகள் தட்டுப்பட்டது.

'கணவனைக் கைக்குள்
போடத்தெரியாத கையாலாகாதவளுக்கு
பத்தினி பட்டம் கொடுக்கும் போது.....
உள்ளாடையை வெளியே உடுத்தும்
வெட்கம் கெட்டவனை
சூப்பர்மேன் என புகழும் போது
........
........
.......... (அவ்வளவுதான் நினைவில் ஒட்டியிருக்கின்றது.)
குப்பென சிரித்து எச்சில் தெரிக்க;
எழுதுகிறது என் பேனா!'

என் பள்ளிப் பருவத்தில் விரும்பிப் படித்து வந்த ‘மன்னன்’ மாத இதழில் வெளிவந்த கவிதை இது. எழுதியவர் பெயர் அப்போதுதான் பதிந்தது. அதற்கு முன்பான அவரது படைப்புகள் கண்ணுக்குத் தெரியவில்லை. 'ம. நவீன், லூனாஸ்' என்ற பெயரில் வரும் படைப்புகள் மீது அதன் பிறகு ஈர்ப்பு ஏற்பட்டது.

நவீன் குறித்தான சில தகவல்கள் எனக்குக் கிடைத்தப்படியே இருந்தன. படித்துக் கொண்டே பகுதி நேர ‘மன்னன்’ இதழின் பணியாளர் அவர். அதன் பிறகு நிருபர். அதன் பிறகு துணை ஆசிரியர் என அத்தகவல்கள் கூடிக்கொண்டிருந்தன. ஏதாவது ஒரு தலைப்பில் பொதுமக்களைச் சந்தித்து அடிக்கடி பேட்டி எடுக்கும் அவர் பாணி தொடர்ந்து மன்னனில் இடம்பெற்றுக் கொண்டிருந்ததன. அவ்வாறான ஒரு பேட்டியில் சில புகைப்படங்களுடன் கருத்துகளும் ஒரு சமயம் இடம் பெற்றிருந்தது. கடைசியாக ஒரு பெண்ணின் படத்தையும் அவள் சொன்னக் கருத்தையும் பதிவு செய்தவர் இவ்வாறு முடித்திருந்தார்... "விடைப்பெறும் போது அந்தப் பெண்ணின் கண்களிலும் அவள் அவ்வப்போது காதுகளின் ஓரம் செருகிக்கொண்ட காற்றில் பறந்த முடிகளிலும் சிக்கிக் கொண்டிருந்தது என் மனம்." அதுவரை அப்படியும் ஒரு பேட்டியை முடிக்க முடியுமா என்பதை நான் அறிந்திருக்கவில்லை. படித்ததும் கிடையாது... நானும் ரசித்தேன் என் தந்தையும் ரசித்தார்.

‘மன்னன்’ இதழில் நவீன் எழுதிய ‘பருவகாலப் பறவைகள்’ தொடர் கதையைப் படித்தவர்களின் நானும் ஒருவன். அதில், MARLBORO என்ற வார்த்தைக்கு ஓர் இளைஞன் சொல்லும் பதிலை ரசித்தேன். பள்ளிப்பருவ மாணவர்கள் குறித்தானப் பார்வை; அது எனக்கும் பொருத்தமாக அமைந்திருந்தது. அந்தத் தொடரில் அருவருக்கத்தக்க வார்த்தைகள் வருவதாக சில மாதங்கள் வாசகர் கடிதங்கள் வந்திருந்தன. ஆர்வத்தைத் தூண்டிய ‘பருவகாலப் பறவைகள்’ பாதியிலேயே காணாமல் போனது போல் உணர்வு. அதன் பிறகு நவீனை மன்னனின் பார்க்க முடியவில்லை.

“அவனை மாதிரி எழுதனும்டா.... நீயும் இருக்கியே” என அப்பா சொல்லும் போது நவீன் மீது கோவம் வரவில்லை. படங்களில் பார்த்து அறிந்த நவீன் போல் என் தலை முடியை மாற்ற முயற்சித்துக் தோல்வி கண்டேன். ஆனால் நவீன் மட்டும் அந்த தலைமுடியை மாற்றவில்லை. மொட்டையடித்தும் அவருக்கு முடி மீண்டும் அப்படித்தான் வளர்ந்திருக்கின்றது. முடிதான் மாறவில்லை அவரின் பார்வையும் எழுத்தும் பலரை மாற்றி வருகின்றது.

அதன் பிறகு 'காதல்' என்ற நவீன இலக்கிய இதழ் ஒன்றை தைப்பூசத் தினத்தன்று ‘தமிழன்பன் தர்மா’ என்ற எழுத்தாளர் அறிமுகம் செய்தார். நவீன்-தான் அதற்கும் ஆசிரியர் என அறிந்து கொண்டேன். மன்னனுக்கும் காதலுக்கும் சில வருடங்கள் இடைவெளி என்பதால் இந்த முறை நவீனின் படைப்புகள் படித்ததும் புரியவில்லை. என் படைப்பும் அப்போதுள்ள 'காதல்' இதழில் வந்திருந்தது. என் பெயர் மட்டும்தான் மாறவில்லை. மற்றதெல்லாம் மாற்றப்பட்டு கருத்து சுருக்கப்பட்டு... வார்த்தைகள் வலுபெற்றிருந்தன. காரணம் தெரியாமல் 'காதல்' இதழ் தொடராமல் போனது.

அதன் பின் வந்ததுதான் வல்லினம். (காதல் குறித்தும் வல்லினம் குறித்தும்... வல்லினத்தில் நவீன் சொல்லியிருப்பதை கவனிக்க... http://www.vallinam.com.my/aboutus.html) ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது பிரம்மிக்க செய்யும் நவீன் படிக்கும் மாணவனாய் இருந்து படைக்கும் படைப்பாளராய் வளர்ந்து வல்லினத்தின் ஆசிரியர் வரை வந்திருப்பது, ஏதோ ஒரு நாளில் அவரின் படைப்புகளை ரசித்த தோட்டபுற இளைஞனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது... அதிலும் அவரை ஆசிரியராக கொண்ட வல்லினத்துக்கு நான் எழுதுவற்கு அவரது படைப்புகள் மீதான வாசிப்பும் காரணம்தான். இன்னமும் என் நினைவில் இருக்கின்றது. ஒருமுறை நவீன் என்னை அழைத்து வல்லினம் இதழைத் தொடர்ந்து வெளிக்கொணர குறிப்பிட்ட சிலரிடம் மாதம் 50வெள்ளி விகிதம் வாங்க நினைப்பதாகக் கூறினார். அப்போது கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் நிலையில்தான் இருந்தேன். கொடுப்பதைப் பற்றி யோசிக்க முடியவில்லை. இன்று வல்லினம் அதையெல்லாம் கடந்து உலகத் தமிழர்களை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்கள் கெடா மாநிலத்தில் எழுத்தாளர்கள் சிலர் ஒன்று கூடுவோம். பாக்கியம், சீ.முத்துசாமி, பே.கா. நாராயணன், பெ. சந்தியாகு, முனியாண்டி ராஜ், எம்.கே. ஞானசேகரன், வெள்ளைரோஜா, மணிராமு, கா. லெட்சுமணன், உதயக்குமார் இன்னும் சிலர் உண்டு. ஒரு சமயம் அதில் புதிதாக நான் ஒருவரை கவனித்தேன். ‘மக்கள் ஓசை’ நாளேட்டில் ஒவ்வொரு ஞாயிறு மலரிலும் அப்போது வெளிவந்திருந்த ‘ஒரு வீடும் சில தொடர்களும்’ என்ற சீரியலைக் குறித்த கட்டுரையைத் தொடர்ந்து அவர் எழுதி வருவது தெரிந்தது. புதியவர் சுவாரஷ்யமாக எழுதிவந்தார். சில கட்டுரைகளுக்குப் பிறகு, கோட்டு போட்ட ஒரு மாணவனின் படம் அவர் கட்டுரைகளில் வந்தது. இந்த சின்ன பையனா இதெல்லாம் எழுதுவது...? அதன் பிறகு அந்த மாணவனின் படைப்புகள் அதிகம் கவனம் பெற்றது.

எங்களின் ஒன்றுகூடும் எழுத்தாளர் நிகழ்ச்சி ஒன்றில் சீ. முத்துசாமி அந்த இளைஞனை எங்களுக்கு அறிமுகம் செய்தார். போட்டோவில் பார்த்ததைவிட முகம் இளமையாய் இருந்தது. அப்பாவித்தனமான முகத்தைக் கொண்ட இவரின் கையா இந்தப் படைப்புகளையெல்லாம் எழுதியது என யோசித்தேன். அதன் பிறகு ஏற்பட்டச் சந்திப்பின் போது நாவல் எழுதும் போட்டி குறித்து பேசினோம். அந்த இளைஞன் மட்டும் அதில் அதிக அக்கறை காட்டி சீ. முத்துசாமியிடம் நாவல் குறித்து கேள்விகளைத் தொடுத்தான். அவரும் அந்த இளைஞனுக்கு புரியும் வகையில் நேரம் எடுத்து அது குறித்தான தகவல்களைக் கொடுத்தார்.

அந்த இளைஞனின் முதல் நாவலுக்குத்தான் அந்த ஆண்டில் மலேசிய எழுத்தாளர் சங்கமும் ASTRO வானவில் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. தற்போது கரிகாற்சோழன் விருதும் அந்த ‘நகர்ந்துக் கொண்டிருக்கும் வாசல்கள்’ என்ற நாவலுக்குத்தான் கிடைத்தது. ஆம் அவர்தான் பாலமுருகன் கேசவன். கெடா சுங்கைப் பட்டாணியில் நான் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் கூட்டத்தில் அப்பாவியாய் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தவரின் பயணம் இன்னும் வளரும் என்பது அவரின் தற்காலப்படைப்புகள் சொல்கின்றது. எனக்குள் என்ன வருத்தம் என்றால் அப்போது நான் பார்த்த அந்த அப்பாவி முகத்தை பாலமுருகன் தொலைத்துவிட்டதுதான். அவர் சார்ந்த வாழ்க்கையும் அவர் சந்தித்தவைகளும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நவீனை ரசித்தது போல் என்னால் பாலமுருகன் கேசவனைப் ரசிக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவர் மீது எனக்கு பொறாமையும் உண்டு. அந்தப் பொறாமைதான் அவரின் படைப்புகளை ஆழ்ந்து படிக்கவைத்து என் வாசிப்பை ஆழமாக்குகின்றது. அந்தப் பொறாமை பற்றி அவரிமும் சொல்லியிருக்கின்றேன். நல்லவேளை அவர் என்னையும் என் பொறாமையையும் புரிந்து கொண்டார். அவருக்கு அன்று அறிவுரை சொல்லிய எங்கள் ஊர் பெரிய பெரிய படைப்பாளர்களை இன்று காணவில்லை. இவர் மட்டும் ஒவ்வொரு விடியலையும் எழுத்துகளுடன் தொடர்கின்றார். என்னையும் உடன் அழைக்கின்றார்.

ம. நவீன், கே. பாலமுருகன் இந்த இருவரும் என் பயணத்தில்; இன்றளவும் எனக்கு மறைமுக நம்பிக்கையை விதைக்கின்றார்கள். 2006 ஆண்டில் அப்போது ம. நவீன் அவரின் இலக்கிய நண்பர்கள் குழுவுடன் கெடா மாநிலத்திற்கு வந்திருந்தார். சிலமுறை இப்படி வந்திருக்கிறார். ஆனால் இந்த முறை அவர் மனுஷ்ய புத்திரனை அழைத்துவந்திருந்தார். அப்போதைய காந்தி நினைவு மண்டபத்தில் இரவு பொழுது அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

மனுஷ்ய புத்திரனுக்காக் காத்திருந்த நேரம் வழக்கம் போல ஆளுக்கு ஆள் வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்நேரம் நேரம் வாசலில் கார் வந்து நின்றது. இதுவரை புகழப்பட்ட மனுஷ்ய புத்திரன் சக்கர நாற்காலியில் உள்ளே வந்தார். லேசான சலசலப்பு; என் மனதிலும். பேசினார்கள்; கேள்வி கேட்டார்கள்; கருத்தும் பகிர்ந்தார்கள்; நான் மட்டும் அவரது கால்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். (காரணம் தெரியாமல்.....!)

நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இருந்தும் எல்லாரும் பேசிக் கொண்டும் தேநீர் பருகிக் கொண்டும் இருந்தார்கள். நான் சிலருடன் புத்தகங்களைப் பார்க்கச்சென்றேன். அப்போதுதான் நவீனைப் பார்த்து மேற்சொன்ன அவர் கவிதையை அவரிடமே சொல்லி என்னை அறிமுகம் செய்தேன். புத்தகங்களின் அருகில் நவீன் நின்றதால்... தைரியம் வந்தவாரு புத்தகங்களை பார்க்கலானேன்.

உடனிருந்த நண்பர் மணிராமு இரண்டு புத்தகங்களை வாங்கினார். என்னிடம் பணம் குறைவதை கவனித்த அவர்; கொடுத்து உதவினார். கையில் எடுத்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் வைக்க மனமில்லை. ‘மர்மக்கதைகள்’ என இருந்தது. அப்போது ஆவிகள் குறித்து பல புத்தகங்களை வாங்கி தகவல்களைத் திரட்டி வந்தேன். எப்படியாவது ஆவிகளுடன் பேசும் ‘மீடியம்’ ஆக வேண்டும் என்பது என் ஆசையும் கூட.

விலையும் மலிவு என்பதால், மனுஷ்ய புத்திரன் எழுதிய ‘எப்போதும் வாழும் கோடை’, ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்’, நா.முத்துகுமார் எழுதிய ‘அ’னா ஆ’வன்னா’ புத்தகங்களை வாங்கினேன். அதுவரை அப்பா மூலம் கேட்டறிந்த சுஜாதாவின் புத்தகம்தான் அந்த ‘மர்மக்கதைகள்’. சுஜாதாவின் திரைக்கதை பயிற்சி புத்தகத்தை அன்றுதான் தவறவிட்டேன். இன்றுவரை தேடிக்கொண்டிருக்கின்றேன். வாங்கிய புத்தகங்கள் அனைத்திலும் மனுஷ்ய புத்திரனிடம் கையொப்பம் வாங்கினேன். அந்த புத்தகங்களை அவர் கால் மீது வைத்து கையொப்பம் இட்டுத் தந்தது எனக்கு பகீர் என்று இருந்தது .

அது எனது பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுஜாதாவின் மர்மக்கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். நாற்காலி நுனிவரை பதட்டத்தில் இருந்துப் படித்ததில்லை. ஒவ்வொரு கதையின் முடிவும் ‘அட’ சொல்ல வைத்தது. சில கதைகளை இரண்டு மூன்று முறை படித்து விளங்கிக்கொண்டேன். 20 வயதில் அந்த புத்தகத்தால் சுஜாதா மீது ஈர்ப்பு கொண்டு சுஜாதா என்ற பெயர் உள்ளதையெல்லாம் படிக்கத்தொடங்கினேன். அதுவரை என்னைக் கவர்ந்த இந்திரா சௌந்திரரராஜன், அர்னிகா நாசர், வி. ரவிச்சந்திரன் போன்றவர்களை விட சுஜாதா என்னிடம் நெருங்கிவிட்டார். 2006-ல் சுஜாதாவின் புத்தகத்தை வாங்காமல் இருந்திருந்தால் இன்று சுமார் நூறு சுஜாதா புத்தகங்களை நான் சேர்த்திருக்க முடியாது.

2008-ல் அறிவிப்பாளர் தேர்வுக்கு; முதல் கேள்வியாக வந்தது. நீங்க எந்த எழுத்தாளரின் புத்தகங்களைப் படிப்பீங்க..? ஏன்...? மற்றவர்களுக்கு அவருக்கும் என்ன வித்தியாசம்...? சுஜாதா என்பதை பதிலாக சொன்னதும் கேள்விகேட்டவர் புருவத்தை உயர்த்தினார். வேலை கிடைத்த மூன்றாவது வாரம் என் எழுத்தாளர் மண்ணை நீங்கினார். அறிவிப்பாளர் பணிக்கு நான் வந்த ஆண்டுதான், உலகப் பணியை சுஜாதா துறந்தார். இருவருக்கும் இம்மாதத்தோடு மூன்றாண்டுகள் ஆகின்றன. வேலையால் தலைநகருக்கு வந்த பிறகுதான் சுஜாதாவைப் பற்றி அதிகம் படித்தும் தெரிந்தும் கொண்டேன். ஒரு படைப்பாளனால் எப்படி இத்தனைவிதமான படைப்புகளையும் விமர்சனங்களையும் எழுத முடிகின்றது...? என வியந்தேன்.

ஒரு முறை பாலமுருகன் கேசவன் என் அறையில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்து, சுஜாதாவை மட்டும் படிக்காமல் மற்றவர்களையும் படியுங்கள் தம்பி என்று கட்டளையிட்டார். கோவம் கொஞ்சமாக வந்தது. ஆனாலும் அவ்வப்போது என் வாசிப்பில் பலர் வந்திருப்பதையும் வந்து போவதையும் அவர் அறிந்திருந்தார்.

சுஜாதாவின் படைப்புகளில் இருந்த சுவாரஸ்யத்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தன் எழுத்துகளால் உருமாற்றியும் என் வாசிப்பிற்கு உருவேற்றியும் வருகின்றவர் எஸ்.ராமகிருஷ்ணன். விகடனின் வெளிவந்த கடைசி சில வார ‘சிறிது வெளிச்சம்’ கட்டுரையைத் தேடித்தேடி முழு புத்தகமாக வாங்கி படித்து வாழ்வில் நான் சந்தித்திராத இருட்டுகளை கண்டுகொண்டேன். அதனைத் தொடர்ந்து அவரின் ‘துணையெழுத்து’ கட்டுரைகளை படித்தேன். இப்போது அவரின் ‘கேள்விக்குறி’ படித்து வருகின்றேன்.

என் தொடர் வாசிப்பில், சுஜாதா ஏற்படுத்திய பிம்பங்களை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து இன்று வேறு கோணத்தை எனக்கு கொடுத்திருக்கின்றன. இது சுஜாதாவை குறைத்து மதிப்பிடும் நோக்கத்தில் கோர்த்த வார்த்தைகள் அல்ல. இன்றும் சுஜாதா என் மானசீக குருவாகத்தான் இருக்கின்றார். சுஜாதா என்ற மூன்றெழுத்தும் அதைத் தொடர்ந்த எனது வாசிப்பும் என் பயணத்திற்குக் கச்சா பொருள். பள்ளிப்பருவம் முதலே புத்தகங்கள் மீது ஈடுபாடு கொண்டிருந்தேன். பாட புத்தகங்களை விட மற்றதைத்தான் தேடித்தேடி வாங்கி வாசித்தேன். திருக்குறள் முதல் சிலர் எழுதிய ‘தெரு’க்குறள் வரை அடக்கம் பெற்றன என் அலமாரியில். பணம் இல்லாத போது; பார்வை மட்டும் கொண்டேன். இன்னமும் என் அலமாரியில் என் பள்ளி நூல்நிலையப் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றை அவர்கள் இரவல் கொடுக்கவுமில்லை... நான் இரவல் வாங்கவுமில்லை. ஆனால் என் வாசிப்பிற்கு திருட்டெல்லாம் புண்ணியமாகிப்போனது.

சுஜாதாவின் சுவாரஷ்ய எழுத்துகளின் தொடக்கம்தான் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் தீவிர எழுத்துகள் மீது என் நாட்டத்தை செலுத்தியிருக்கின்றது.

சுஜாதா என்ன பெரிய இலக்கியவாதியா...?

இப்படி யாரும் கேட்டால்...

“அதெல்லாம் எனக்குத் தெரியலை... சுஜாதாவின் படைப்புகளை படித்திருக்காமல் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பயணிப்பவனின் பக்கத்தைக்கூட என்னால் எழுத முடிந்திருக்காது என்பது மட்டும் உண்மை."


நன்றி
இதழ் 27
மார்ச் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக