Pages - Menu

Pages

மார்ச் 19, 2012

அப்போதைய அவனும் இப்போதைய இவனும்




என்னைப்போல் ஒருவன்
அல்லன் அவன்
அப்படியொரு சந்திப்பு
இதற்குமுன் உண்டு

அப்போதைய அவன்
கறுப்பு
குட்டை
தூக்குப்பல்
மடங்கியிருக்கும் முதுகு
முட்டைக்கண்
வார்த்தைக்கு வார்த்தை
பல்லில் தேங்கியது நாக்கு
தொங்கியிருக்கும் மூக்கு
என்
ஒவ்வொரு அழகுக்கும்
முரண் அவன்


அருவருப்பாகத்தான் இருந்தது
அவனின் அறிமுகம்
ஆச்சிரியங்களின் இறுதி நிலை
அருவருப்புத்தான் போலும்

யாரும் யாருக்கும்
சொல்லாமலேயே
யாரொடும் யாரும்
கலந்து பேசாமலேயே
கண்ணில் பட்டவன் அவன்

உரையாடிய ஒவ்வொரு வார்த்தையும்
ஆபாசத்தின் உச்சமாகவே
தோன்றியது

ஜீரணிக்க முடியாத
காம வர்ணனைகளை
முதல் சந்திப்பின்
முக்கியமின்றியே
வெட்கமின்றி பேசினான்

விடைகொடுக்கவும் வழியில்லை
அவன் பேச்சு அவ்வளவு சுவாரஸ்யம்
பேசப் பேச
மூளைக்குள் திரைப்படம் போலவே
காட்சியுருவங்கள்
வந்து வந்து ஆடையவிழ்த்து
அழைப்பிதழ் கொடுக்கின்றன

ஆணான ஆடையற்ற உருவும்
பெண்ணான ஆடையற்ற உருவும்

என்போன்றே முகம் காட்டின

இத்தனைக்கும் நான் உத்தமன்

இனியும் தொடர முடியாத
என் போன்றோன் அவன்

கையில் கிடைத்த
பெயரற்ற ஒன்றை
அவன் மீதேறிந்தேன்

உடைந்தான்
சுக்குநூறானால்
என் போன்றவன்
இப்போது
என் போன்றவர்களானான்

இனியும் அங்கிருக்க
இயலாத நொடியை
உணர்ந்தவனாய்
வெளியேறினேன்

அடுத்த அறை
அடுத்த பார்வை
அடுத்த ஒருவன்

நிலைக்கண்ணாடியில்
உட்புகுந்தேன்

இப்போதும்
என்னைப்போல் ஒருவன்
அவன் அல்லன்
இவன் வேறொருவன்




- தயாஜி -






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக