நாய் கடிக்கும்தான். ஆனால் அந்த நாயும் கடிக்கும் என அன்றுதான் தெரிந்தது. கடித்துவிட்டது. ஆம் அதே நாய்தான். அந்த நொண்டிக்கால் நாய்தான். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சர்யமாகதான் இருக்கிறது உடன் வலியும். போயும் போயும் அந்த நொண்டிக் கால் நாய்.
உள்ளதை உள்ளபடி நொண்டிவிடுகிறேன்! இல்லையில்லை சொல்லிவிடுகிறேன். நாய்கள் என்றால் எனக்கு சிறு வயது முதல் விருப்பம். அப்போது எனக்கு வயது 10 அல்லது பத்துக்கு மேல் இருக்கும், நிச்சயம் அதற்கு கீழ் இருக்காது. இந்த நிச்சயத்துக்கு காரணம் இருக்கிறது. எங்கள் தோட்டத்தில் பக்கத்து வீட்டில் முஹமட் ரஹிம் இருந்தார். எங்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் நல்லதொரு தொடர்பு இருந்ததால் நாங்கள் நாயை வளர்க்கவில்லை. நாய் குரைக்கும் சத்தம் அவர்களுக்கு ஆகாது என அப்பா சொல்லியிருந்தார். அவர்களும் நம் வீட்டிற்கும் வர தயங்குவார்கள் என்பதால் ஒருசேர நானும் தங்கையும்கூட அப்பாவின் பேச்சிற்கு கட்டுபட்டோம். முஹமட் ரஹிம்-மின் அப்பா என் அப்பாவின் அந்த கால ஆசிரியர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பத்து வயதில் வீடு மாறினோம். தோட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட மலிவு விலை வீட்டிற்கு சென்றோம். முன்பு இருந்த வீட்டில் குப்பைகளை ஒதுக்குபுறத்தில் உள்ள குப்பை தொட்டியில் போடுவோம். மூன்று நாள்களுக்கு ஒரு முறை லாரியில் ஒருவர் வந்து குப்பைகளை எடுத்துச் செல்வார். அவருக்கு நாங்கள் அனைவரும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் கட்டணம் செலுத்துவோம். கட்டணம் என்றால் இப்போது கொடுப்பது போல இல்லை. முடிந்தவர்கள் ஐந்து ரிங்கிட் கொடுப்பார்கள். முடியாதவர்கள் ஒரு ரிங்கிட்டேனும் கொடுத்திடுவார்கள். அங்கே இருந்தவரை அவராக வந்து பணத்தை வாங்கியதில்லை. மாதம் ஒரு முறை தோட்டத்து பெரியவர்களாய் சேர்ந்து கொடுப்பார்கள்.
இங்கே மலிவு வீட்டின் அருகிலேயே குப்பை தொட்டியை வைத்துவிட்டார்கள். வாரம் ஒருமுறை குப்பை லோரியுடன் நான்கு பேர் வருவார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டியில் இருக்கும் குப்பைகளை லோரியில் போடுவார்கள். அது என்னவென்று தெரியவில்லை. அந்த குப்பை லோரி சரியாக எங்கள் வீட்டின் வாசலில் நின்றுதான் குப்பைகளை அரைக்கும்.
சுமார் முன்று நிமிடமே ஆனாலும், அந்த அரைத்தலில் வெளிவரும் வாடை இருக்கிறதே. இப்போது நினைத்தாலும் வயிற்றில் ஏதோ சத்தம் கேட்கிறது. சில சமயங்களில் அந்த குப்பை லாரி கிளம்பியவுடன் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு சென்று பார்ப்பேன். சின்னசின்னதாய் புழுக்களை பார்த்து தலையே சுற்றும். தங்கைதான் அதை சுத்தம் செய்வாள். அண்ணனாய் பிறந்ததில் இப்படி சில வசதிகளும் இருக்கிறது.
சுத்தம் செய்ய தங்கை இருந்தாலும் அந்த நாற்றம் என் மூக்கையும் தாக்கியது. அதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த யோசனை. வீட்டில் ஒரு நாயை வளர்ப்பது.
என் நண்பன் ஒருவன் சொன்னான் அவன் வீட்டில் நாய் இருக்கிறதாம். வாரம் ஒரு முறை குப்பை லாரியுடன் வருபவர்கள் நாய்க்கு பயந்து குப்பையை எடுத்து லாரியை சீக்கிரமே கிளப்பிவிடுவார்களாம். ஆக நாங்களும் நாயை வளர்க்க ஆரம்பித்தால், குப்பை லாரி எங்கள் வீட்டின் முன் நிற்காது. நிற்காத போது, எப்படி எங்கள் வீட்டின் முன் குப்பைகளை அரைப்பார்கள். இனி வாடை, புழுக்களுக்கு அவசியம் இருக்காது. அதுமட்டுமில்லாமல் நாங்கள் வாங்கிய மலிவு வீடுகள் வரிசயையில் எல்லாம் தமிழர்களே இருந்தார்கள். முன்போல மலாய்க்கார நண்பர்கள் மருந்துக்குக்கூட இல்லை. ஒருவேளை பூமி புத்ரா என்பதால் அவர்களுக்கு வேறு இடம் கொடுத்திருக்கலாம்!.
தேவையில்லாத போது யார்யார் விட்டிலோ குட்டிப் போட்டிருக்கும் நாய்கள். தேடும் போது ஒன்றுக்கூட கண்ணில் படவில்லை. பார்க்கப்படுவதெல்லாம், சொறி நாய்களும் தெரு நாய்களும்தான்.
நாய் வளர்ப்பது என முடிவெடுத்த பிறகு, அழகான நாயைத்தானே வளர்க்கவேண்டும். கண்டகண்ட நாயை வளர்ப்பது எப்படி தகும். அதற்கு முதலில் வளர்க்கப் போவது பெண் நாயா..? அல்லது ஆண் நாயா..? என முடிவெடுக்க வேண்டும். யோசிப்பதற்குள் தங்கை நாயைக்கு பெயர் வைத்துவிட்டாள்.
‘பூஜா’. நாங்கள் தேடி அல்லது வாங்கி வளர்க்கப்போகும் பெண் நாய் குட்டியின் பெயர். பெயர் வைத்தாகிவிட்டது நாய்தான் வந்தபாடில்லை.
கொஞ்சம் இருங்கள் நாய்கடிக்கு மருந்து கட்டியிருக்கிறேன். காலின் கட்டை இறுக்கமாக கட்டிவிட்டேன் என நினைக்கிறேன். வலிக்கிறது. கட்டை கொஞ்சமேனும் தளர்த்தி கட்டுகிறேன். இம்மாதிரி அடிபட்ட அல்லது கடிபட்ட இடத்தில் இறுக்கமாக கட்டக்கூடாது. ரத்த ஓட்டத்தை பாதிக்கும். பிறகு அந்த இடம் செயல்படாமல் கூட போய்விடும் அபாயம் இருக்கிறது.
இப்போது விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன். சரி எங்கே விட்டேன்..? ஆமாம். ‘பெயர் வைத்தாகிவிட்டது நாய்தான் வந்தபாடில்லை’... இங்கிருந்துதானே.....?
எங்கள் வீட்டின் பின் வரிசைகளின் எப்போதும் நான் சென்றதில்லை. இல்லை என்பதைவிட அதற்கான தேவை இருந்திருக்கவில்லை.
தோட்டத்து வீட்டில் இருந்த பொழுது, வீட்டின் முன்புறமும் பின்புறமும் குட்டி தோட்டம் ஒன்றை நாங்கள் எல்லாரும் வைந்திருந்தோம். முன்புறம் அழகழகாய் பூக்கும் பூந்தோட்டம். பின்புறத்தில் காய்கறி தோட்டம். இதில் இன்னொன்றை சொல்லியாகவேண்டும். பூந்தோட்டம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும், காய்கறி தோட்டம் மட்டும் நிச்சயம் வீட்டுக்குவீடு மாறுபட்டிருக்கும். நாங்கள் பப்பாளி வளர்த்தால், பக்கத்துவீட்டு முஹமட் ரஹிம் வாழை வளர்ப்பார், அவரின் அடுத்த வீட்டு தங்காகுஞ்சி கத்தரிக்காயை வளர்ப்பார் , அவரின் அடுத்த வீட்டு ‘நாசமானிபோனியா’ - நேசமணி பொன்னையாவை இப்படித்தான் அடையாள அட்டையில் சொல்லியிருந்தார்கள். நாங்களும் அப்படியே கூப்பிட்டு பழகிவிட்டோம்.
இப்படி ஆளுக்கு ஆள் ஒரு வகை காய்கறிகள் பழ வகைகளை விதைப்போம்; வளர்ப்போம்; பயிறுடுவோம் ; தேவையெனில் நாங்கள் பகிர்ந்துக் கொள்வோம். பணம் அநாவசியமாய் பட்டது.
இப்போது வாங்கியிருக்கும் - வேறு வழியில்லை என்ற போர்வையில் விற்பப்பட்ட இந்த மலிவு வீட்டின் பின்புறம். அதற்கு முன் முன்புறம் பற்றி சொல்லிவிட்டால் நல்லது. ஒரு ‘மைவி’ காரை நேராக நிருத்தலாம். கார் கதவை முழுதாய் திறக்க முடியாது - சுவர் இடிக்கும் . பாதி திறந்த கார் கதவின் வழியே உடலை வளைத்து நெளித்து குனிந்து நிமிர்ந்து வெளியே வர முடியாதவர்கள் காரை வீட்டின் வெளியே வைத்து விடுவார்கள் - குப்பை தொட்டி அருகில். குப்பை லோரி வந்துச் சென்றவுடன் காரும் கொஞ்ச நேரம் குப்பை வாடையை கார்கள் சுமக்கும்.
இப்போது வீட்டின் பின்புறம் குறித்து சொல்லிவிடுகிறேன். வாந்தி வருவது போல் இருந்தால் நான் பொறுப்பல்ல.
பின்வாசல் கதவைத் திறந்தவுடன் குட்டி சாக்கடை அமைந்திருக்கும். குப்பைத் தொட்டியில் போட வெண்டிய சில சாக்கடையில் மிதந்து செல்லும். பேருக்குத்தான் புது வீடு, மலிவு வீடு, பாதுகாப்பான வீடு; சுத்தம் மட்டும் இல்லை. தோட்டத்தில் இருந்தவர்கள்தான் இங்கும் இருக்கின்றார்கள் ஆனால் அங்கு அவர்கள் இப்படி செய்திருக்கவில்லை.
இங்கே வந்த பிறகு, சமையல் அறை சன்னலை திறந்தால் சாக்கடை வசதியாக இருப்பதால் என்னவோ..? உண்ட மிச்ச மீதி பொருள்களை குப்பையில் போட கஷ்டப்பட்டு, சன்னலைத் திறந்து சாக்கடையில் கொட்டி விடுகிறார்கள். சின்ன சாக்கடை என்று செல்லியிருந்தேனே, ஆகையால் இந்த உணவுகள் ஆங்காங்கே அடைபட்டு சாக்கடை நீர் தேங்கி விடும். உடன் நாற்றம் . அதோடு நின்றிடவில்லை இந்த செயலில் விளைவு. தேங்கியிருக்கும் உணவுகளில் பல சமயங்களில் புழுக்களை நானே பார்த்திருக்கிறேன். குண்டு குண்டாய் குலுங்கி குலுங்கி அவை நகரும். வெள்ளையாய் , தலைப் பக்கம் மட்டும் கறுப்பாய் வீங்கிய வயிறுடன் இருக்கும். தேங்கிய உணவுகளில் வந்துப் போகும் ஈக்களில் வாரிசுதான் இந்த புழுக்கள் என்றாலும்; புழுக்கள் ஈக்களாகியது இன்றுவரை நான் கண்டதில்லை. பட்டாம்பூச்சியாகும் புழுக்களை படமாகவும் பாடமாகவும் சொல்லிக் கேட்டதுண்டு. ஈக்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.
இப்படிபட்ட பின்புறத்தில்தான், அந்த நொண்டிக் கால் நாய் சுற்றித் திரியும்.
அந்த நாயை முதன் முதலில் பார்த்தது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. ஒரு நாள் நல்ல மழை. வீட்டின் பின்புற சாக்கடையில் நீர் ஓடாமல் அப்படியே தேங்கி, சாக்கடையை விட்டு வெளிவர ஆரம்பித்தது. சாதாரணமாகவே வாடையின் வீச்சம் தாங்காது. சாக்கடையைவிட்டு வெளிவந்தால் சொல்லத் தேவையில்லை. சாக்கடையில் தேங்கியிருந்த அசிங்கங்கள் எல்லாம் வெளிவந்தன. அசிங்கங்கள்..! ஆமாம் அம்மா அப்படித்தான் சொன்னார்.
எந்த வடிவத்திற்குள்ளும் அடங்காமல் இருக்கும். கருப்பென்றால் கருப்பல்ல. கருப்பையும் தாண்டியக் கருகருப்பாய் இருக்கும். சில சமயம் வடிவத்தை கண்டுக் கொள்ள முடியும் அதுவும்; நீரின் மேல் மிதக்கும் போதுதான். கல்லெறிந்தாலோ நீரை ஆட்டினாலோ அந்த வடிவத்தை அவை கலைத்துவிட்டு வேறுமாதிரி காட்சிக் கொடுக்கும். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் எங்களுக்கு குறிப்பாக அம்மாக்களுக்கு நேரமோ விருப்பமோ இருப்பதில்லை. ஒரே வார்த்தை, அசிங்கம். ஆம் அசிங்கம். நாங்களும் அதை அப்படித்தான் சொல்லுவோம்.
மழைப்பொழுதில் வெளியேறிய அந்த வடிவமற்ற அசிங்கங்களை சுத்தம் செய்யும் போதுதான் நொண்டிக்கால் நாயை பார்த்தேன். அடைமழை லேசாக ஓய்ந்திருந்தது. இந்த நேரம்தான் சாக்கடையை இலகுவாக சுத்தம் செய்ய முடியும். அதிக மழைப்பொழுதும், மழையற்ற பொழுதும் சாக்கடையை சுத்தம் செய்ய இயலாது. காரணம், அதிகம் மழையென்றால் தானாகவே சாக்கடை சுத்தமாகிவிடும். மழையில்லாத பொழுதென்றால் சாக்கடையை சுத்தம் செய்ய அந்த வாடை வீச்சத்தை பொருத்துக் கொள்ள வேண்டும். அதோடு சில சமயம் சாக்கடை அசிங்கங்கள் நம் மீது தெளித்து பலமுறை குளிக்கவைக்கும்.
லேசான மழையென்றால் சாக்கடை நீர் ஓட்டம் இருக்கும். நீண்ட குச்சியையோ அல்லது எதையாவது எடுத்து சாக்கடையில் வைத்து அதன் நீர் ஓட்டத்துக்கு ஏற்றார்போலவே குச்சியை குத்திவிட்டுக் கொண்டிருந்தால் சாக்கடை சுலபமாக சுத்தமாகும். இன்னொரு முக்கியமான ஒன்று என்னவென்றால் சாக்கடை நீர் மேல் பட்டாலும் மழைநீரில் தானாக போய்விடும், இந்த நேரத்தில் வாடையும் வீசாது.
அப்படி சுத்தம் செய்யும் வேலையாக நான் பின்புறம் சென்ற போதுதான் அந்த நொண்டிக்கால் நாய் கண்ணில் பட்டது. காரணமின்றியே என் பின்னால் வந்து நின்றுக் கொண்டிருந்தது.
“சூ..... ஏய்..ச்சூ... ஏய் ஏய்.....” எப்படி விரட்டியும் அந்த நாய் நகரவேயில்லை. நொண்டிக் கால் நாய் என்பதால் தைரியமாக அதை விரட்ட ஆரம்பித்தேன் என நினைக்கிறேன். உண்மைதான் நாய் நொண்டி என்பதால்தான் தைரியமாக என் காலைச் சுற்றிய அதன் முகத்தைக் கூட பார்க்காமல் ஓங்கி உதைத்தேன். உதைவாங்கிய நாய் விநோத சத்தத்துடன் ஓடியது.
பிறகு மனம் கஷ்டமாக இருந்தது. அந்த நொண்டிக்கால் நாய் சமீபத்தில்தான் குட்டி ஈன்றதாம். தகவல் சொன்ன நண்பனிடம் அவை இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டு நாய் குட்டிக்காகச் சென்றேன். எங்கள் வீட்டுக்கு நாய்குட்டி தேவையாக இருக்கிறதே. ஆனால் எப்படி அந்த நொண்டிக்கால் நாயை பார்ப்பேன். நான்தான் என் காலை சுற்றிய அந்த நாயை காலால் உதைத்திருக்கிறேனே. அது சரி யாருக்கு தெரியும்; அந்த நொண்டி நாயும் குட்டியோடிருக்கும் என.
நண்பன் சொன்ன இடத்தில் ஒரே ஒரு நாய் மட்டும்தான் இருந்தது. ஓடக்கூடிய நாய்தான் அது. ஆனால் என்னைப் பார்த்ததும் ஓடாமல் தலையை திருப்பிக் கொண்டது. குட்டிநாய் என்பதால் தைரியமாக காதை தூக்கினேன். ரோசக்கார நாய்தான். ஒற்றைக்கையால் குட்டி நாயின் முதுகை அழுத்திப் பிடித்து தூக்கினேன். ஆச்சர்யம். பெண் நாய்தான். பூஜா என்ற பேருக்கு ஏற்றார் போல அமைந்திருக்கிறது. தாய் நாய்தான் இல்லையே, குட்டியை எடுத்துக் கோண்டு போகலாம் என நாலா புறமும் பார்த்தேன். ஒன்றுமில்லை. கீழே வைத்த நாயை தூக்க முயன்று அது முடியாமல் நாய் திணறிக் கோண்டு காலில் விழுந்தது. காலில் அடுத்த நொடி ‘சுருக்’கென்றது.
காலைக் கடித்த அந்த குட்டி நாயும் சத்தம் எழுப்பியவாரு நொண்டி நொண்டி நடந்து அதன் இடத்தில் போய் படுத்துக் கோண்டது. குட்டி நாயின் விநோத சத்தம், தூரத்தில் எங்கோ எதிரொலித்தது. அந்த சத்தத்தை ஏற்கனவே கேட்டதாய் நினைவு.
- தயாஜி -
தயாஜி..ஹஹஹஹஹ
பதிலளிநீக்குyes.... அக்கா...... ஏதாவது சொல்லனுமா.?
நீக்குஆமா உங்க வீட்டிலும் நாய் குட்டி வளர்க்கறதா கேள்விப்பட்டேனே......?