Pages - Menu

Pages

ஏப்ரல் 25, 2011

நானும் கடவுள்



மனிதனை சிலையாக்குவது சாத்தியமா..? விஞ்ஞானப்படி விளக்கம் கிடைக்குமா..? ஒருவேளை........... உடம்பில் யாரும் வர்மத்தை பயன்படுத்தியிருப்பார்களோ..? நரம்பு ஏதும் கோளாறா..? மருத்துவர்கள் முதல் வியாதிக்காரார்கள்வரை இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிறகென்ன... மனிதனை சிலைபோல நின்றவாக்கிலேயே படுக்க வைத்திருக்கின்றார்கள். அந்த மனிதன் யார் என்பதைவிட முக்கியமான ஒன்றை உங்களிடம் சொல்கின்றேன். நான் சொல்லப்போவது மூட நம்பிக்கையோ மாய மந்திரமோ இல்லை என்பதை உங்களிடம் முதலில் உறுதி செய்துக் கொள்கின்றேன்.



இதையெல்லாம் சொல்வதற்கு நான் யார்..? நான் கடவுள்..! நம்பிக்கையில்லையா..? எனக்கும்கூட நம்பிக்கை வந்திடாது இப்படி யார் சொல்லியிருந்தாலும். ஆனால் இப்போது நான் சொல்வது என் சொந்த அனுபவத்தில் இருந்து. கடவுளின் வேலை என்ன என்பதனை என்றைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா..? கடவுளின் தேவை என்ன..? கடவுளுக்கானத் தேவைதான் என்ன..? உங்களிடம் பதில் இருக்கின்றதா..? பரிட்சையில் பாஸாக்குவதும், கடன் தொல்லையிலிருந்து மீட்பதுதான் கடவுளுக்கு நீங்கள் தரும் வேலையாக இருக்குமோ..?
இத்தனைக் கேள்விகள் இந்த கதையில் எதற்கு என யோசிக்காதீர்கள்; தெரியாமல் எதையும் பேச நான் மனிதன் இல்லை. முன்பே சொன்னது போல் நான் கடவுள். நீங்கள் என்னை நம்பவில்லை என்பது, உங்களின் உயர்த்தியப் புருவம் மூலமும் நையாண்டி சிரிப்பின் மூலமும் தெரிகின்றது.



கடவுளாவதெல்லாம் ரொம்ப சுலபமான ஒன்றுதான். வழிமுறையும் இருக்கின்றது. வழிநடத்ததான் யாருமில்லை. சில நித்தியானத்தர்களுக்கும் எனக்கும் சம்பதமில்லை; என் வீடியோ வரும்வரை.!



நம்ம கதைக்கு வருவோம், மருத்துவமனையில் சிலை போல உறைந்து நிற்கும் மனிதனைப் பற்றி உங்களிடம் சொன்னால்தான் ‘நீங்களும்’ என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வீர்கள். நீங்களும் என நான் சொல்வதற்கு காரணம்; என்னை முதல் முதலாக கடவுள் என நான் உணர்ந்துவிட்டேன். உண்மையை சொல்லப்போனால் அந்த மனிதன் சிலையாவதற்கு இந்த கடவுளாகிய நான்தான் காரணம்.



உங்களுக்கு அவசர வேலை எதுவும் இப்போது இல்லையென்றால்; நடந்ததை சொல்கின்றேன் கேளுங்கள். என் அறையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையைச் சார்ந்தது. பள்ளி நாள்களின் படித்த புத்தகங்களைவிட ; பள்ளி வாழ்க்கைக்கு பிறகு நான் படித்த புத்தகங்கள்தான் அதிகம். தனியான அறை ஒன்றில் தனியாக வாழ்வதால் துணையாக இந்த புத்தகங்கள் வந்து சேர்ந்துவிட்டன. அப்படி வந்த ஒரு புத்தகம்தான் என்னை கடவுளாக்கியது.



வெறுமனே, கடைக்கு போனேன். புத்தகம் வாங்கினேன். வீட்டிற்கு திரும்பினேன், என சொல்வது முறையல்ல. அந்த புத்தகம் என்னிடம் எப்படி சேர்ந்தது என குழப்பம் எனக்கும் இருக்கின்றது.



மாலதி.



என் அத்தை மகள். ஒரு முறை அவளோடு பேசிக்கொண்டிருந்த சமயம் எங்கள் பேச்சு; புத்தகங்கள் பக்கம் திரும்பியது. அத்தை குடும்பத்தில் இவள் ஒருத்திதான் என்னோடு பேசுவதற்கு கொஞ்சமேனும் நேரம் ஒதுக்குவாள். நான் படித்த புத்தகங்கள் பற்றி கேட்டறிந்து; அவளே படித்ததுபோல் சக தோழி முதல் ஆசிரியர்கள் வரை பேசுவாள். விடுங்கள். அத்தை மகள். மன்னிச்சிடுவோம்..!



மாலதியின் தோழி வீட்டருகிள்; பழைய புத்தகக்கடை இருக்கின்றதாம். வெறும் புத்தகக்கடை என்றாலே எனக்கு பொருக்காது.. மாலதி சொன்னது பழைய புத்தகங்களை வாங்கி விற்கும் புத்தகக்கடையாம். நமது பழைய புத்தகங்களை அந்த கடையில் விற்கலாம். அவர்கள் அதனை சில மாற்றங்கள் செய்து குறைந்த விலைக்கு விற்பார்கள்.இந்த மாதிரி புத்தகக்கடைக்கு நான் சென்றதில்லை; ஆனால் கேள்விப்பட்டுள்ளேன். பல அரிய புத்தகளை அங்கு நாம் வாங்கலாம். ஒருவருக்கு தேவையில்லாமல் போவது மற்றொருவரின் தெடலுக்கு காரணமாக இருக்கலாம். இது வாழ்க்கைத் துணைக்கு மட்டுமல்ல; வழித் துணையாக வரும் புத்தகங்களுக்கு, பொருந்தும்.



விடுமுறை நாள் ஒன்றில் மாலதியும் நானும் அந்த புத்தகக்கடைக்குச் சென்றோம். கடையில் பழைய புத்தகங்கள் என்றாலும் உள்ளே எல்லாம் புதிதாக இருந்தது. சீனரின் கடை அது. குட்டைப் பாவாடையுடன் இருந்த அந்த வெள்ளைத்தோல்காரி ஏனோ தெரியவில்லை என்னையும் மாலதியையும் இன்முகத்துடன் வரவேற்றாள். கையில் எதுவும் வாங்காமால் போனால் இதே இன்முகம் இருக்குமா...?



வருசையாய் அடுக்கப்பட்டிருந்தன புத்தகங்கள். இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என புத்தகங்கள் என்னைப் பார்த்துக் கேட்பது போலவே இருந்தன. இது மாலதிக்கு விளங்கியிருக்க நியாயமில்லை. ஆங்கில, மலாய், சீன மொழிகள் என குறிப்பிட்டு ஓவ்வொரு அலமாரியிலும் புத்தகங்கள் அடுக்கப்படிருந்தன. கடையை இரண்டு முறை சுற்றி வந்தும் தமிழ் புத்தகம் என் கண்ணுக்குத் தெரியவில்லை. பலதரபட்ட பழைய , புதிய (பார்ப்பதற்கு புதிய) புத்தகங்கள் இருந்தன. மாத வார இதழ் தொடங்கி; பள்ளி பாட புத்தகங்கள் வரை தகுந்த இட்த்தில் இருந்தன. தேடுவதற்கு இலகுவான வழிதான் இது.



முன்றாவது சுற்றுக்கு கிளம்பத் தயாராகின்றேன்; மாலதி அழைத்து,
“பசிக்குது மாமா... சாப்பிட போலாமா...மணி ஆகுது...” என்றாள்.
“ஆமா... அரைமணி நேரத்துக்கு மேல ஆச்சி... வா போகலாம்...இங்க தமிழ் புக்கே இல்லை...”என்றேன்.



நான் நின்றுக் கொண்டிருந்த அலமாரியிலிருந்து வெளியேறத் தொடங்கி இரண்டாவது அடியை வைக்கவும் என் பின்னால் புத்தகம் விழவும் சரியாக இருந்தது. தமிழ் புத்தகம். இங்குதான் இவ்வளவு நேரம் தேடினேன். அப்போது கிடைக்காத புத்தகம் இப்போது எப்படி விழுந்த்து..? இந்த கேள்வியை அப்போது நான் யோசிக்கவில்லை.. ஒருவேளை யோசித்திருந்தால் நான் கடவுளாகியிருக்க முடியாதோ என்னமோ..?



விழுந்த புத்தகத்தை எடுத்தேன். ரொம்ப பழைய புத்தகம்தான்.மஞ்சள் நிறம். கடைசி சில பக்கங்கள் கிழிந்திருப்பது தெரிந்தது. முதல் பக்கத்தை திறந்தேன். ‘வினோத ஜாலக்கண்ணாடி’ என எழுதியிருந்தது. கடைக்கு வந்து வெறும் கையோடு வெளியேற யோசித்திருந்தேன். இந்த புத்தகத்தை வாங்கிச் செல்லலாம். மாலதி மீண்டும் அழைப்பதற்கு முன்னமே நான் அவளிடம் சென்றுவிட்டேன்.



“என்ன மாமா , தமிழ் புத்தகமே காணோம்... ஐ.. கைல என்ன மாமா...! எங்கிருந்து எடுத்திங்க..?”
“மாலதி.. நான்தான் எப்பவும் சொல்லுவேன்ல.. சில புத்தகங்களை நாம் தேடுவோம் ;சில புத்தகங்கள் நம்மை தேர்ந்தெடுக்கும்.. அப்படித்தான் இந்த புத்தகமும்... உனக்கு கிடைக்கல எனக்கு கிடைச்சிருக்கு.... சரி வா; பசிக்குதுன்னு சொன்ன...பணம் கட்டிட்டு சாப்டு வீட்டிக்கு போகலாம்”
சாப்பாட்டைப் பற்றிப் பேசியதும், மாலதி முகம் மலர்ந்தது.



புத்தகத்தை பணம் செலுத்தும் இடத்தில் கொடுத்தேன்.
“இந்த புத்தகத்தை எங்கிருந்து எடுத்திங்க..?”
“அதோ அந்த அலமாரியில் இருந்துதான் எடுத்தேன் ‘ஆண்டி’ விலை எவ்வளவு..? புத்தகத்தில் ஒன்னும் போடக் காணும்”
“இது இங்குள்ள புத்தகமில்லை.. நாங்க தமிழ் புத்தகத்தை இதுவரைக்கு வாங்கினது இல்லை.. இந்த கடைக்கு நீங்க முதல் தமிழ்காரங்க வரிங்க..”
“இல்லை ஆண்டி, இங்கிருந்துதான் எடுத்தேன்....!!!! ”
இந்த உரையாடல் எனக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது. அந்த கடைக்கார சீனப் பெண் யாருக்கோ தொலைபேசியில் அழைத்து சீன மொழியில் பேசி அசட்டு சிரிப்பு சிரித்தாள்.பின் என்னைடம் இது இங்குள்ள புத்தகம்தான்; தான் கடைக்கு புதுசு அதான் தெரியவில்லை; விலை 10ரிங்கிட் என்றாள். அவள் தொலைபேசியில் சிரிக்கும் போதே யூகித்தேன் இவள் கடைக்கு புதியவள் என்ற பதிலை.!.



பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கினேன்.கடையில் சாப்பிடும் போது மாலதியிடம் நடந்ததைப் பற்றி சொன்னேன். நான் ஏமாந்து விட்டதாகச் சொன்னாள். உண்மையில் நான் கடவுளாக அது கட்டணம் என்று எனக்கே அப்போது தெரியாது,
.................................................................................................................................



அன்று இரவு; வழக்கம் போல் படுக்கும் முன் ஒவ்வொரு புத்தகங்களாக எடுத்துப் பார்த்து வந்தேன். நினைவு மதியத்தில் வாங்கிய புத்தகத்தில் திரும்பியது. ஆனால் வைத்த இடம் நினைவில் இல்லாமல் போனது. இதுவரைக்கு இப்படி நடந்ததில்லை. எதை மறந்தாலும் புத்தகம் வைத்த இடத்தை மறக்கமாட்டேன். மறுமடியும் தேடிக் கிடைக்காத்தால்; மாலதியிடம் விசாரிக்க கதவு பக்கம் சென்றேன். ஏதோ சத்தம். அட ஆமாம் அந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. அங்குதான் நான் அமர்ந்தும் நடந்தும் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். எங்கிருந்து விழுந்திருக்கும். முகம் வியர்க்க ஆரம்பித்தது.



எனது கண்ணாடி அலமாரி மேஜையில் இருக்கும் முருகன் படத்தை பார்த்தேன். அங்கிருக்கும் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டேன். புத்தகத்தை எடுத்தேன். கட்டிலில் அமர்ந்தேன். முதல் பக்கத்தை திறந்தேன்;ஒன்றுமில்லை. அடுத்த பக்கம்;ஒன்றுமில்லை;முன்றாம் பக்கம்; ஒன்றுமில்லை.முன்பு நான் திறக்கும் போது இரண்டாவது பக்கத்தில் அதன் தலைப்பு இருந்தது. இப்போது இல்லை.



என்னை அறியாமல் ஒவ்வொரு பக்கமாய் திருப்பிக் கொண்டே இருந்தேன். பத்தி பத்தியாக எழுதப்படிருந்தது. சிவப்பு மையால் யாரோ அதில் நட்சத்திரம் வரைந்து எதையோ எழுதியிருந்தார்கள். ஒரு பக்கத்திற்கு பிறகு என்னால் அடுத்த பக்கத்தைத் திறக்க முடியவில்லை. அந்த தலைப்பின் வசிகரமா இல்லை என் இயலாமையா தெரியவில்லை!



அந்த வசிகர தலைப்பு இதுதான் ‘...கணத்தை நிறுத்தி கடவுளாகு...’ அதன் அருகில் ; நான் கடவுள்; நான் கடவுள்; என 29 தடவை எழுதப்பட்டிருந்தது. ஆர்வமாய் படித்தேன். புரியாத வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் போலதான் தெரிந்தது. புரியவில்லை. அதை 108 முறை சொல்லவும் என இருந்தது. நானும் சொன்னேன்...... 108 தடவைக்கு மேலாகச் சொன்னேன். தலையில் கிரிடமும் வரவில்லை...என்னைச் சுற்றி புகை மூட்டமும் எழவில்லை. ஆனால் புத்தகத்தில் நான் கடவுள் என எழுதப்பட்டிருந்த எழுத்துகள் ஒவ்வொன்றாக மறைந்தன. உண்மை; ஒவ்வொரு எழுத்தாக பின்னால் இருந்து மறைந்துக் கொண்டே வந்தது. கடைசி எழுத்து மறைந்த நேரம் சட்டென விளக்கெல்லாம் அணைந்துவிட்டது. சம்பந்தமில்லாமல் புத்தகத்திலிருந்து விசித்திர ஒளி ஒன்று வெளியெறியது.



எந்தப் புரிதலுமின்றி சுவரையேப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ;மாலதிதான் தெளியவைத்தாள். அத்தை அழைப்பதாகச் சொன்னவள் மாடியிலிருந்து வேகமாக இறங்கி ஓடினாள். கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பார்த்தேன். அதில் முன்பு கையெழுத்தால் எழுதப்பட்டிருந்த சிவப்பு நிற எழுத்துகள் இப்போது இல்லை.
எழுத்துகள் எங்கே... அந்த ஒளி எங்கிருந்தது... மாலதி என்னை குலுக்கும்வரை நான் என்ன ஆனேன்....



கார் சத்தம் கேட்கவும் கீழே இறங்கி அத்தையிடம் விசாரித்தேன். மாலதி உட்பட அவளின் தங்கை தம்பிகள் இருவரும் மாமாவுடன் வெளியில் சென்றுள்ளார்களாம்; அத்தை மட்டும் வழக்கமான தொடர் நாடகத்தில் மூழ்கியிருந்தார். ஒரு வழியாக தொடர் நாடகம் முடிந்தது. என் குழப்பம் மட்டும் தொடர்ந்தவண்ணம் இருந்தது.



மீண்டும்;
எழுத்துகள் எங்கே... அந்த ஒளி எங்கிருந்தது... மாலதி என்னை குலுக்கும்வரை நான் என்ன ஆனேன்....அந்த புத்தகத்தில் உள்ளதென்ன மாய வார்த்தைகளா...?

“என்ன மணி, ஏதோ யோசனையில் இருக்க போலிருக்கு.... பாரு உனக்கும் நாடகம் மேல ஆர்வம் வந்திருச்சி.... ”
“அத்தை; அப்படியில்லை.... இந்த நாடகத்தில் அப்படி என்ன இருக்குன்னு.... வெளிய கூட போகாம பார்த்துகிட்டு இருக்கிங்கன்னு யோசிச்சேன்...”
“அதுவா... அந்த கொலைகாரன் யாருன்னு இன்னிக்கு காட்டுவாங்கன்னு காத்திருந்தேன்; பாரு இன்னிக்கும் தொடரும் போட்டுடாங்க...”
இன்று மட்டுமில்லை இதோடு எட்டாவது வாரமாக அத்தை காத்திருக்கின்றார். அந்த கொலைகாரனைத் தெரிந்துக்கொள்ளவதற்கு. நாடக இயக்குனருக்கே இன்னும் தெரியவில்லை... இவர்களுக்கு மட்டும் எப்படி தெரியும். அத்தையுடன் எனது பேச்சு தொடர்ந்தது. வழக்கத்திற்கு மாறாக அன்று நானும் அத்தையும் அதிகமாக கைகளை ஆட்டி பேசிக்கொண்டிருந்தோம். எப்படி எங்கள் பேச்சு விரல் சொடுக்குதல் வரை வந்தன்னுத் தெரியலை....
“அத்தை இதெல்லாம் விரல் சொடுக்கறதுக்குள்ள செய்திடலாம்...”
“முதலாவதா உனக்கு விரல் சொடுக்கத்தெரியுமா.... இதோ விரல் சொடுக்கினா இந்த மாதிரி சத்தம் வரனும்.... எங்க செய் பார்க்கலாம்....”



உண்மையில் அந்த அளவுக்கு என் விரல் சொடுக்களில் சத்தம் வாராதுதான் ஆனாலும்; நம்பிக்கையுடன் அத்தையின் முகத்திற்கு நேராக விரலைச் சொடுக்கினேன். அவ்வளவுதான் அத்தை அப்படியே சிலைபோல மாறிவிட்டார். அசைவற்று இருந்த அத்தையை எப்படி எப்படியோ கூப்பிட்டேன் குழுக்கினேன்;பயனில்லை. பயம் என் உடல் முழுவதும் பரவியது..... மீண்டும் அந்த புத்தகத்தில் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையில் மாடிக்கு ஓடினேன். மறுபடியும் புத்தகத்தைக் காணவில்லை...! கீழே கார் சத்தம். மாமாவும் பிள்ளைகளும் வந்துவிட்டார்கள். வாசற்கதவை திறக்கும் சத்தம்.



ஓடி அத்தையை மீண்டும் முடிந்தவரைக் குலுக்கினேன். மின்னல் யோசனையில் அத்தை முன்னே என் கைவிரலைச் சொடுக்கினேன். மாமா கதவை திறந்தார்.
“முதலாவதா உனக்கு விரல் சொடுக்கத்தெரியுமா.... இதோ விரல் சொடுக்கினா இந்த மாதிரி சத்தம் வரனும்.... எங்க செய் பார்க்கலாம்....”
மீண்டும் அத்தை அசைய ஆரம்பித்துவிட்டார். அதோடில்லாமல் முன்பு பேசிய அதே வார்த்தைகளை கொஞ்சமும் மாறாமல் கேட்கின்றார். மாமா வந்த்தும் அவர் கையில் இருந்த பொருட்களை நானும் அத்தையும் வாங்க சென்றோம். அத்தை பிள்ளைகளும் ஆளுக்கொரு பொருளைக் சாப்பீடவாரே கைவீசி உள்ளே வந்தனர்.
ஆக; நான் கணத்தை நிறுத்தும் கடவுளாகிவிட்டேன். நான் கடவுள்.,... ஹ்ஹ்ஹ்ஹா... நான் கடவுள்.

என் அறை. கட்டில் மேல் கால் மேல் போட்டு படுத்திருந்தேன். இருக்கும் இடத்தை விட்டு ஆடாமல் அசையாமல் விரல் சொடுக்கல் வழி தலைமேல் சுற்று காத்தாடியை சுற்றவும் நிறுத்தவும் செய்துக்கொண்டிருந்தேன். என்னால் இப்போது கணங்களை என் கைக்குள் நிறுத்த முடியும். மீண்டும் நான் என் கையால் கணங்களை விடுவிக்க முடியும். தலையில் கிரிடமும் காலுக்கு கீழ் புகையும் தேவையில்லாமலே நான் கடவுளாகிப்போனேன். அந்த புத்தகத்தில் வேறு எதும் இருக்கின்றதா எனத் தேட புத்தகத்தைக் காணவில்லை...அது சரி இனி அந்த புத்தகம் எனக்கு அநாவசியம். நான்தான் கடவுளாகிவிட்டேனே.
கடவுளாகிய நான் கல்லாகியிருந்தால் பிரச்சனை இருந்திருக்காதுதான். ஆனால் நான் செயல்பட்டுவிட்டேன். மனித புத்தியை என்ன செல்வது..?
என் விரல் சொடுக்கில் என்னவெல்லாமோ செய்ய நினைத்த நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணாடியைப் பார்த்து விரலைச் சொடுக்கினேன். ம்.... கண்ணாடியில் தெரிந்த என்னையே நான் சிலையாக்கிவிட்டேன்..! இதோ இப்போ என்னை சுற்றி இத்தனைப் பேர் அதிசயமா பார்க்க நின்ற மாதிரியே படுக்கையில் வைத்து தள்ளிக்கிட்டு போறாங்க.. பாவம் டாக்டர் என்ன செய்யப்பொறாரோ..? அந்த புத்தகம் யார் கைல கிடைக்குதோ தெரியலையே... எனக்கு விடுதலை கிடைக்காதா..? என்ன இருந்தாலும்ங்க எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அது என்னான்னா ?
மனிதனை சிலையாக்குவது சாத்தியமா..? விஞ்ஞானப்படி விளக்கம் கிடைக்குமா..? ஒருவேளை............



தயாஜி

1 கருத்து:

  1. nanba,
    andha vinodha jalakkannadi puthgam endha padhippagam matrum endha ooril vaangiyadhu enbathai patri inge thagavla anuppavum.

    Ippadikku nanban,
    Ravi

    பதிலளிநீக்கு