Pages - Menu

Pages

செப்டம்பர் 11, 2025

- ஊழல் வினை -


ஊழல்வாதிகளுக்கு
எடுக்கவும் பதுக்கவும் தெரிகிறது
அனுபவிக்க வாய்ப்பதில்லை...

உணர்ந்த மக்களுக்கு
எதிர்க்கவும் எரிக்கவும் வாய்க்கிறது
பயன்படுத்த தெரிவதில்லை....

செப்டம்பர் 10, 2025

- ஊமைகள் -


ஆமையோட்டில்
அழகாய்
வரைந்து கொடுக்கிறார்கள்
ஓவியங்களை

வரைந்தவர்களுக்கும்
வாங்கியவர்களுக்கும்
அது
மகிழ்ச்சி
கொண்டாட்டம்
கௌரவம்
அடையாளம்
நினைவுச்சின்னம்

சுமந்து கொண்டிருக்கும்
ஆமைகளுக்கு

அது
நிகழ்கால சுமை
வருங்கால ஊனம்
நிரந்தர துயரம்....

செப்டம்பர் 09, 2025

- அதிலொரு ஆனந்தம் -


எங்களைப் பேச
சொல்லாதீர்கள்
எங்களைச் சிரிக்க
சொல்லாதீர்கள்
எங்களைச் சிந்திக்க
சொல்லாதீர்கள்
எங்களை எழுத
சொல்லாதீர்கள்

பின்னர்
நீங்களே எங்களைக்
கொன்றுவிடுவீர்கள்

அதிலொரு ஆனந்தம்
உங்களுக்கு....

செப்டம்பர் 08, 2025

- எதற்கு வேண்டும் கவிதை ? -


கவிதை எழுத
இனி கஷ்டப்பட
தேவையில்லை...

எதை
எழுதி கொடுத்தாலும்
கவிதை என
விற்றுவிடுகிறார்கள்...

நல்ல கேமரா காட்சி
ரம்யமான பின்னணி இசை
சிரித்தபடி பேசும் முகம்...

மற்றபடி
கவிதை புத்தகங்கள்
விற்க
எதற்கு வேண்டும்
கவிதை...

செப்டம்பர் 07, 2025

- ருசிக்கும் உதிரம் -



முட்களைத் தின்னும்
ஒட்டகத்திற்கு
வாயில் ருசிப்பது
தன் உதிரம்தான் என
தெரியாது சுவைப்பது
போலத்தான் இங்கு

தீவிர இலக்கியவாதிகளின்
நண்பர்கள்

சம்பந்தமே இல்லாமல்
அவர்களும் தீவிர
இலக்கியவாதிகள் போல
நடமாடுகின்றார்கள்

இக்கவிதையில்
சம்பந்தமே இல்லாமல்
வந்த ஒட்டகமும்
அதன் உதிர ருசியும் போல...