பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

கிடக்கும் மனிதனில் நடக்கும் பிணம் நான்






நடைப்பயணம்

வழி நெடுக்க
பிணங்கள்

நடமாடியும்

நடனமாடியும்

அறிமுகமற்ற

ஆடையற்ற

ஆட்கள் மன்னிக்கவும் பிணங்கள்

அக்குல்களில் வாடையுடன்
வரவேற்புக் கைகளுக்கு
இடையில்

நான்

ஆற்றைக் கடக்காமலே
முதலையின் முதுகில் கால் வழுக்கினேன்

காப்பாற்றி கரைசேர்க்கிறது
பிணம் ஒன்று

ஏறக்குறைய என் சாயல் கொண்ட
பிணமது

நானாகவும் இருக்கலாம்

நாங்கள் கைகுழுக்கினோம்

இந்த முறை அக்குல் வாடை
பழகிவிட்டது

எனக்கும் வாடை
வீசத் தொடங்கியது

நடந்துக் கொண்டிருக்கும்
பிணங்களின் வருசையில்

காலி இடமொன்றுத்
தெரிய...

பிணமான நானும்
இணை சேர்ந்தேன்

எல்லாம் சரி

எப்போது நான் பிணமானேன்

பயணத்தின் பொழுதா

முதலை மேல் வழுக்கிய பொழுதா

என்போல் பிணம் கைகொடுத்த பொழுதா

அக்குல் வாடையை ஏற்ற பொழுதா

காலி இடத்தில் இணைந்த பொழுதா

பதில் அல்லது பதில்கள்

தெரியும்வரை
விழித்தல் கூடாது

இடையில்
விழித்தாலோ

உடல்
அசைந்தாலோ

வாடை
மறைந்தாலோ

மீண்டும்
மனிதனாவேன்

பயமாய்
இருக்கிறார்கள்

மனிதர்கள் (மட்டுமே)

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

    அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.
    படித்தும் வேலை இல்லாதவன் எங்கும் வேலை செய்வான் தானே. நானும் அப்படித்தான். ஒருவேளை நான் படித்தவன் என்பதால் கூட வேலையில்லாதவனாக இருக்கலாம்.  ஆனால் வேலை அவசியம். என் நிலை அப்படி. முன்பெல்லாம் கேள்விகளுக்கு பதில் சொன்னால்தானே வேலை கொடுப்பார்கள். இப்போதும் அப்படித்தான் என்கிறீர்களா. சரி சொல்லுங்கள் ஆக கடைசியாக நீங்கள் எப்போது வேலை கேட்டீர்கள். அதான் நேர்முகத் தேர்வுக்கு சென்றீர்கள். ஓராண்டுக்கு முன்பு? ஈராண்டுக்கு முன்பு? ஐந்தாண்டுக்கு முன்? இருக்கலாம். எப்படியும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் இருக்கலாம். சரியா. என்னமோ நேற்று வேலைக்கு சென்று, பதிகளைச் சொல்லி, வேலை கிடைத்ததும், இன்று வேலைக்கு கிளம்பும் தோணியில் நீங்கள் பதில் சொல்லியிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
   நான் இன்றைய நாளோடு இரண்டாவது ஆண்டாக நேர்முகத் தேர்வுக்கு செல்கிறேன். எப்படி அவ்வளவு துல்லியக் கணக்கு என்கிறீர்களா..? யோசிக்கிறீர்களா..? காலையில்தான் அப்பா பஜனை பாடினார். “இன்னையோடு ரெண்டு வருசமா தண்டச்சோறு சாப்டறடா..” என்றார். பதில் ஏதும் பேசவில்லை. கேள்வி மட்டும் கேட்க நினைத்தேன். வேலை இல்லாதவன் என்ற ஒரு காரணத்துக்காக, வாசலில் யாரும் வந்திருந்தால் நான் தான் போய் பார்க்கனும். தபாலைக் கூட நான் தான் வாங்கனும். கூரைக்கு கீழ் சுற்று காத்தாடி முதல், தரை மேல் தூசியிருந்தாலும் நான் தான் வசைப் பாடப்படுவேன்.
அப்பா,
“ஏண்டா சும்மாதானே இருக்கே , அந்தா காத்தாடியை சுத்தம் செய்யேன்”
அம்மா;
“ஐய்யா இப்பதான் பார்த்தேன், மிளகாய் முடிஞ்சிருச்சி.. பக்கத்து கடைக்கு போய் வாங்கிட்டு வந்திடறயா..? சமைக்கனும்... சீக்கிரம்ம் வந்திடு..” (பக்கத்து கடை என்பது, வீட்டில் இருந்து அரை மணிநேரம் நடக்கவேண்டும் அதிலும் நான் நடந்தே போகவேண்டும்)
அண்ணன்;
“இந்த இந்த சட்டையை அயன் செய்திடு, அன்னிக்கு மாதிரி அங்கொன்னும் இங்கொன்னும் மாதிரி செய்துடாத.. எனக்கு வேலைக்கு மணியாகுது..”
    இந்த அண்ணன்களே இப்படித்தான். அதிலும் எங்க அண்ணன் ஒரு படிமேல. எல்லாரும் ஏமாந்த மொளகா அரைப்பாங்கன்னுதானே  சொல்லுவாங்க, எங்க அண்ணன் மொளகா.. பருப்பு... காய்கறி... இப்படி எதுஎதையோ அரைச்சிடும். அப்படியே நங்கென தலையில் கொட்டதான் ஆசை. முடியாது. வேலை கிடைக்கும்வரைதான் அப்பு உனக்கு மரியாதை. வேலை மட்டும் கிடைக்கட்டும் அப்பு உனக்குதான் முதல் ஆப்பு. அடுத்த ஆப்பு எங்க அப்பாவுக்கு. என்னடா இவன் ஆப்பு கீப்புன்னு அசிங்கமா பேசரானேன்னு நெனைச்சிடாதிங்க. இதுக்கு என் மனசாட்சி. யார் மனசாட்சிதான் நாகரிகமா பேசியிருக்க சொல்லுங்க.
      இன்றும் வேலைக்கு சென்றேன். வேலைக்கு என்றால் வேலைக்கு அல்ல, வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு. எப்படியும் வேலை கிடைச்சிடும். எப்படின்னு கேட்கறிங்கலா? எல்லாமே நம்பிக்கைதான். இதை வச்சித்தானே தன்முனைப்பு அந்த முனைப்புன்னு நாட்டுல நிறைஅய் பேரு வேலை செய்ஞ்சு சம்பாதிக்கறாங்க. உடனே கோவப்பட்டு போய்டாதிங்க மீதி கதையை யார் படிப்பா..?
    வழக்கமான நடைபாதையில்தான் அன்றும் சென்றுக் கோண்டிருந்தேன். பாதைதான் பழையது. இங்கு காலை வேலையில் வந்தும் பறந்து இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் புதியவை. ஏன் முதல் பார்த்த பறகைளை மறுநாள் பார்க்க இயலவில்லை. ஒரு வெலை மனிதர்களை ஏமாற்ற பறவைகளும் மாறுநாள்களில் மாறுவேடம் போட்டு உலாவுகிறதோ. இருக்காது, பறவைகள் எல்லாம் நம்ம அளவுக்கு இல்லை. அவை இன்னமும் நல்லவையாகத்தான் இருக்கும் @ இருக்கனும். பறவைகள் என்றது ,எப்போதோ படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் மற்றொருவரைக் கேட்கிறார்,
“இந்த வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருது தெரியுமா..?”
“தெரியலையே..”
“இதுகூடவா தெரியலை, வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் மட்டும் இல்லை, எல்லா பறவைகளும் முட்டையில் இருந்தான் வருகின்றன...”
   படித்ததும் சிரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. ஆனாலும் நான் சிரித்து வைத்தேன். இல்லாவிட்டால் வேலையில்லாதர்கள் எப்போதுதான் சிரிப்பது. வீட்டில் சிரிக்கவிட்டால்தானே.
    புதிது புதியாய் வந்திருக்கும் பறவைகளை பார்த்துக் கொண்டே நடப்பதில்தான் எத்தனை சுகம். ஆனால் இன்று பார்வைக்கு அந்த சுகம் முழுமையாகக் கிடைக்கவில்லை.
     ஏதோ காகிதத்துண்டு என் காலடியில் விழுந்ததை எப்படித்தான் பார்த்தேன். தெரிடவில்லை. ஆனால் பார்த்தேன். கையில் எடுக்கும் முன் என் கையில் வைத்திருக்கும் என வண்ணவண்ண சான்றிழ்தல்களை இருக்கமாக பிடித்துக் கொண்டேன். நான் கீழே குணியும் போது என் சான்றிதழ்கள் எதிர்பாராவிதமாய் பறக்கவும், அதை எடுக்கவும், எனக்கு ஒரு பெண்ணின் உதவி கிடைக்கவும், நான் இளிக்கவும், பதிலுக்கு அவளும் சிரிக்கவும், எங்கள் காதல் முழைக்கவும் இப்படியெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் . ஒருவேளை என் போன்ற அழகான வாட்ட சாட்ட வாலிபனுக்கும் நடக்கலாம்தானே. அதான் ஒரு முன்னெச்சிரிக்கை. வேலை கிடைக்கும்வரை காதலும் வேண்டாம்... மோதலும் வேண்டாம்.
    நல்லவேலையாக என் சான்றிதழ்களை பிலாஸ்டிக்கில் கோப்பில் வைத்திருந்தேன். இல்லையென்றால் எப்போதோ என்  விரல் வியர்வை, சான்றிதழ்களை வீணாக்கியிருக்கும்.
   காலில் பட்ட காகித்தை எடுத்துப் பார்த்த்தில் இன்ப அதிர்ச்சி. ‘வேலைக்கு ஆள் தேவை’ எனும் விளம்பரம். யாரோ வெட்டியிருக்கிறார்கள் . ஆனால் தவறவிட்டுவிட்டார்களே. ஒருவேளை எனக்காகக் கூட வெட்டியவர்கள் இதனை தவறவிட்டிருக்கலாம்.
   என்ன வேலை, அட அறிவியல் கூடத்தில் வேலையா..? உடல் முழுக்க வெள்ளை அங்கியை போட்டுக் கொண்டு ஒரு மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் கால்சட்டைப் பாக்கேட்டுக்குள் விட்டுக் கொண்டு கூன் விழுந்த மாதிரி வேலை செய்யவேண்டுமே. கண்ணாடியென்றது இன்னொரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
   ஒருத்தருக்கு காதை வெட்டினா கண்ணு தெரியாதாம் அது என்ன? தெரியலையா.. அதாங்க விடையை முதல்லயே சொல்லிட்டேனே.. நீங்க போய் முதல்ல எழுதன தலைப்படி படிச்சி அதான் விடைன்னு புரிஞ்சிக்காதிங்க. அவ்வளவௌ மேல எல்லாம் போக வேண்டாம். இந்து ஜோக்குக்கு மேல போய்  மூக்கு கண்ணாடின்னு இருக்கும் பாருங்க அதை படிச்சிட்டு வாங்க. அதான் விடை. அதுசரி இது என்ன விடுகதையா நகைச்சுவையா? தெரியலை வேலையில்லாததால எதுஎதையோ படிச்சி சிரிக்கும்படி என் நிலமை ஆகிடுச்சி பார்த்திங்கலா. இனியும் அது தொடராது. ஏன்னா எனக்குத்தான் வேலை கிடைக்கப் போகுதே. ஆனா அந்த வெள்ளை அங்கியும் மூக்கு கண்ணாடியும் இருக்கே.....
    அதிலும் எனக்கு வெள்ளையங்கியும் பழைய தாத்தா காலத்து மூக்கு கண்ணாடியையும் கொடுத்தால், பொறுத்தமாக இருக்கும்மோ இருக்காதோ.
     ஒன்னு செய்யலாம். அறிவியல்காரர்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. இவர்கள் ஜீன்ஸ் டீ-சர்ட் எல்லாம் போட்டுக் கொண்டும் ஏன் பணியன் கூட போட்டு கொண்டு வேலை செய்யலாம் என புரட்சி செய்திடவேண்டியதுதான். என்ன ஒன்னு தனியா செய்தா எடுபடாது. கூடாவே ஐந்து பேரை சேர்த்துக்குவோம். அப்பறம் ஆளுக்கு ஒரு கட்சியா, என்ன சொன்னேன் ஆளுக்கு ஒரு கட்சியா சொன்னே..! அதை மறந்திடுங்க. ஆளுக்கு ஒரு காட்சியா பிரிஞ்சி போய்ருவாங்க. நேய் வருவதற்கு முன்பே பூனை ஒடிஞ்ச கதைதான். ஆமா பூனையா சொன்னேன் இல்லையில்லை, பூனையில்லை ஒடிஞ்சது பானை.
     அறிவியல் கூடத்தில் வேலை செய்வதில் சம்பளத்தையும் தாண்டிய லாபமும் இருக்கிறது. எனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த நோய் வந்தாலும் நானே மருந்து கொண்டுவந்து கொடுத்திடுவேன். அதிலும் எங்க அண்ணனுக்கும் எங்க அப்பாவுக்கும் வாயே திறக்க முடியாத அளவுக்கு ஏதாவது மருந்து இருக்கா பார்க்கனும். எனக்கும்கூட அடிக்கடி சளி பிடிச்சி ஒழுகுது . மூக்கு சளியை பற்றிகூட ஒரு ஜோக் படிச்சிருக்கேன். சொல்லவா..? வேணாம்ங்க. பாவம் நீங்க. ரொம்பதான் பாடாய் படுத்தறேன் போல. சரி ஜோக்கை விடுங்க. வேலைக்கு வருவோம். சாதாரண வேலையா இது; அறிவியல் கூடத்தில் வேலை.
    ஒருவேளை அறிவியல் கூடத்தில், குப்பை அள்ளும் வேலையோ...? ச்செ ச்சே அதெல்லாம் இருக்காது. இருந்துட்டா என்ன செய்றது? எங்க வேலைன்னு மட்டும் சொல்லுவோம். என்ன வேலைன்னு சும்மா எதையாவது சொல்லிவைப்போம். வந்து பாக்கவா போறாங்க. நாட்டுல அவங்கவுங்களுக்க அவுங்கவுங்க வேலை. அதுவும் இப்போ அங்கயும் இங்கயும் மாறிமாறி கூட்டம் போடறாங்க.. அதுவும் ஒரு வேலையாகிப் போச்சி இப்போ. அதுக்கும் பணமெல்லாம் கொடுக்கறாங்களாமே..? எனக்குத் தெரியலை.
      எப்படியும் இந்த வேலை எனக்குத்தான் என நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த இரண்டாண்டுகளும் ஒவ்வொரு நேர்முகத் தேர்வுக்கு இப்படித்தான் நினைத்துக் கொண்டு சென்றேன்.கிடைக்கவில்லை. இப்போது மட்டும் எப்படி கிடைக்கும் என நான் இப்படி நம்புகிறேன். ஏதாவது காரணம் இருக்குமோ?
    இருக்குமோ இருக்காதோ... நாம் முயலத்தானே வேணும்.
    அய்யோ, எங்கே இந்த கடித்தில் தொலைபேசி எண்களைக் காணவில்லையே. ஹப்பாடா.. இருக்கிறது ஆ... என்ன இது ஒரு எண் குறைகிறதே. ஏன்யா இந்த விளம்பரத்தை வெட்டின மூதேவி, ஒரு கடித்தையே உன்னால ஒழுங்கா வெட்ட முடியலையே, உன்னையெல்லாம் அறிவியல் கூடத்தில வேலை சேர்த்தா என்ன ஆகுமோ..  அதான் கடவுளா பார்த்து, இல்லையில்லை கடவுளைப் பற்றி பேசக்கூடாது. அறிவியலைப் பொருதவரை எதுவும் அவன் செயல் இல்லை, எல்லாமே அவனவன் செயல்தான்.
   யோசிப்போம்.
    அட ஆமாம்ல்ல, கடைசி எண்தானே இல்லை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை இருப்பதே ஒன்பது எண்கள்தானே . ஒவ்வொரு எண்ணையும் கடைசி எண்னாக வைத்து அழைத்துப் பார்க்கலாமே. யோசிக்கிறீர்கள்தானே ஒன்றில் இருந்து ஒன்பது வரை ஒன்பது எண்கள் இருந்தாலும், கடைசியாக இருக்கும் பூஜ்ஜியத்தையும் சேர்க்கவேண்டுமே. என்ன..? பூஜ்ஜியமா..! தமிழ்த்தாயே ஐ ம் சாரி, பூஜ்ஜியம் என சொல்லிவிட்டேன். நியாயமாக சுழியம் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். ஒன்ஸ் எகைன், ஐ சாரி மை டியர் தமிழ்த்தாயே. 
   எப்படியும் உடனே அழைத்துப் பேச வேண்டும். வேலை கிடைப்பது என்ன சும்மாவா. அதுவும் அறிவியல் கூடத்தில் வேலை. இப்போதே கற்பழிக்காத பொது தொலைபேசியைத் தேடவேண்டும்.
    இவ்வளவு பேசறவன்கிட்ட போன் இல்லையான்னு யோசிக்காதிங்க. பழைய மோடல் நோக்கிய போன். இருக்கு. அதாங்க தரையில் விழுந்தாலும் தரையை சிமண்டை உடைத்து , அப்படியே இருக்குமே அந்த போன்தான். என்ன போனிருக்கு, பணமில்லை. வேலைவெட்டி இல்லதவனுக்கு சோறும் போனுமே தண்டம் எதுக்கு போன்ல காசு என சொல்லித்தான் போனை கொடுத்தார் அப்பா. அவர்கள்தான் தேவையென்றால் என்னை கூப்பிடுவார்கள். நான் யாரைக் கூப்பிட்டு வேலை சொல்வது..? என் பேச்சைத்தான் கேட்பார் யாருமில்லையே.
    கையில் இருக்கும் சில்லறைக் காசுகளை பயபத்திரமாக பயன்படுத்த நினைத்தேன்.
    அதிஸ்டம்தான் இரண்டாவது அழைப்பே கிடைத்துவிட்டது.
“ஹல்லோ”
    பெண்குரல் கேட்டது. பெண்ணாகவும் இருக்கலாம். சார் எனவும் கூப்பிடாமல் மேடம் எனவும் கூப்பிடாமல் சமாளிப்பது சிரமம்தான். குரலைக் கேட்டாலே தெரிந்திடுமே என்கிறீர்கள்தானே. அது சரி நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இப்போதெல்லாம் குரலுக்கும் உடலுக்கு சம்பந்தமில்லை. இதை வைத்துக் கூட நிறைய பட ஜோக்குகள் வருகின்றன. எனக்கு எழுதத் தெரிந்த அளவுக்கு படம் வரையத் தெரியாது. அதனால் அந்த பட ஜோக்கை உங்களுக்கு காட்ட இயலவில்லை.
    நாளைக்கே நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டுமாம். அவர்களே காரை அனுப்பிவைப்பார்களாம். மீண்டும் அவர்களே கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்களாம். வேலை கிடைத்தாலும் வேலை கிடைக்காவிட்டாலும் இப்படி செய்வார்களா என கேட்டுத் தெளிந்துக் கொண்டேன். இல்லையென்றால், யார் நடந்து வருவார்கள். அவர்கள் சொல்ன்ன முகவரியே எனக்கு புதிதாக இருக்கிறது. எவ்வளவு தூரமோ என்னமோ.
    மறுநாள் காலை, மடிப்பான சட்டையின்றைப் போட்டுக் கொண்டேன். குறுக்கும் நெடுக்கும் வீட்டு வரவேற்பறையில் நடந்துக் கொண்டிருந்தேன்.
அம்மா;
“எங்கய்யா காலையிலேயே...?”
“வேலைக்கு”
அப்பா;
“எங்கடா..?”
“வேலைக்கு...”
அண்ணன்;
“என்ன சார் காலையிலேயே கலக்கலா இருக்கிங்க...”
“வேலைக்கு...”
    வேலைக்கு என்ற ஒன்றைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை. சொல்லவும் தோணவில்லை.
   சொன்ன நேரத்தில் கார் வந்தது. எதிர்ப்பார்க்கவில்லை. உயர் ரக கார். வீட்டில் எல்லோரும் என்னையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கம்பீரமா நடந்து காரின் பின் சீட்டில் ஏறினேன். அப்பதானே நமக்கு கௌரவம். நல்லவேலை டிரைவர் ஒன்னும் சொல்லவில்லை. வீட்டாரின் விரிந்த கண்களை இதுநாள் வரை நான் கவனித்திருக்கவே இல்லை. ஆமாம், அவர்களின் முகம் பார்த்து பேசினால்தானே கண்ணை பார்க்க முடியும். கார் சென்று மறையும் வரை அவர்களின் விரிந்தக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய கண்கள்தான். ஒன்னு தெரியுமா, நான் போட்டிருக்கும் சட்டை, என் அண்ணனுடையது. காலையில் நான் கொடுத்த அதிர்ச்சியில் அண்ணன் அதை கவனிக்கவில்லை. இதை கணித்திருந்தால் அவனுடைய கால்சட்டையையும் போட்டிருப்பேன். ஏமார்ந்தேன்.
     காரில் நான் மட்டும் இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன். டிரைவர் எந்த ஒரு அசைவோ பேச்சோ இல்லாமல் காரை ஓட்டிக் கோண்டிருந்தான்.
     என்ன இது , டிரைவர் அல்ல இது டிரைவி.!
     பெண்தான் காரை ஓட்டுகிறாள். நல்லவேலையாக அவள் சட்டை பட்டன் திறந்திருந்ததைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். அவளின் மூக்கை போலவே கண்ணும் கூர்மைதான். இல்லையென்றால் கண்ணாடியைப் பார்த்தே தன் சட்டையை சரி செய்துக் கொண்டாள்.
     ச்சே என்னை, என்ன நினைப்பாள் அவள். முதல் சந்திப்பிலேயே இப்படியே நடப்பது. இதில் என் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஆமாம். எனக்கு நீல வண்ணம் மிகவும் பிடித்தமான ஒன்று. யார் அவளை அந்த வண்ணத்தில் உள்சட்டை போடச் சொன்னது. அதான் வண்ணம் என்னை இழுத்துவிட்டது.
     அது சரி, ஏன் பெண்னை அனுப்பியிருக்கிறார்கள். ஒருவேளை ஒழுக்கத்தை பரிசோதிக்கவா? இந்த பெண் இதை சொன்னால் எனக்கு அந்த அறிவியல் கூடத்தில் வேலை கிடைக்காமல் போய்விடுமே. என்ன செய்வது.  முதல் சோதனையிலேயே தோல்வியா எனக்கு. இந்த வேலையும் எனக்கு கிடைக்காதா.
    வேலை மட்டும் கிடைக்கவில்லையென்றால், இனி திரும்பி வீட்டிற்கு செல்லவேக் கூடாது.
     கார் அதன் வேகத்தை குறைக்காமல் சென்றவண்ணமே இருக்கிறது. அவள் சட்டையை சரி செய்ததோடு சரி, வேறெதையும் சட்டை செய்யவில்லை. அவள் என்ன இயந்திரமா..? ச்சே இது என்ன சுஜாதா கதையா, இயந்திர மனிதர்கள் வந்து போக.
    கார் நின்றது. அறிவியல் கூடமா இல்லை ஆவிகள் கூடமா எனத் தெரியவில்லை. தனியாக ஒரு தொழிற்சாலை. பக்கத்தில் வேறேதும் இல்லை. மருத்துக்கு மரங்கள் மட்டுமே. மரங்களா எனவும் என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மரங்கள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தன.
    இந்த இடம் குறித்து கேட்கலாம் என்றுதான் காரோட்டிய பெண்ணைத் தேடினேன். இல்லை. வந்திரங்கிய உயர் ரக கார். இல்லை. அதற்குள் எப்படி புறப்பட்டிருக்க முடியும். தெரியவில்லை. புரியவுமில்லை. தொழிற்சாலையின் நடைபாதை தெரிய நானாகவே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தேன். முழுவும் விளக்குகள். வெளியில் இருப்பதைவிட உள்ளே அதிக வெளிச்சமாக இருந்தது.
     அறைக்கதவின் மூன் வருசையின் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அந்த நிசப்தத்தில் என காலடி ஓசை சத்தமாகக்  கேட்டது. அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தவாறு இருந்தான். எனக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
    ஆனால் அவன் இப்படி நிமிர்ந்து நிமிர்ந்து உட்காரவேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவனாக இதனை வேண்டுமென்று செய்வது போல உணர்கிறேன். அதான் சொல்லுவார்களே இம்மாதிரி நேர்முகத் தேர்வுக்கு செல்கிறவர்கள், நேரான பார்வையும் நிமிர்ந்து உட்காரும் பாணியும் அவர்களின் ஆளுமையைக் காட்டுமென; அதாகக் கூட இருக்கலாம். ஏன் இவன் அதையே இப்படி கோமாளித்தனமாகச் செய்கிறான்.
      அந்த நாற்காலிக்கு அருகில் இருக்கும் கதவை பற்றி ஏதும் சொன்னெனா..? இல்லையென்றால் இப்போது சொல்கிறேன். அந்த நாற்காலி அருகில் கதவு இருக்கின்றது. கதவின் மேல் கருப்பாய் ஏதோ பூச்சி இருக்கிறதே, என்ன பூச்சி அது. பல்லி இப்படி இருக்காதே, பட்டாம்பூச்சிக்கு சிறகு இருக்குமே.. அட இது சிலந்தி. உயிரோடு இருக்கிறதா இல்லையா. ஒருவேளை ஒட்டிகையோ.
     மணிசத்தம் கேட்டது. நிமிர்ந்து நிமிந்து உட்கார்ந்த மனிதன், அதான் அந்த கோமாளி மனிதன் உள்ளே சென்றான். அதில் பாருங்கள். மணி அடித்ததும் அவனாக எழாமல், யாரோ தள்ளியது போல முன்னோக்கி எழுந்தான்.
      தூரத்தில் மீன் தொட்டி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். சரி வெறுமனே உடார்ந்திருக்காமல், எழுந்து அந்த மீன்களை பார்க்கலாம் என நடக்கத் தொடங்கினேன். அந்த இளைஞன் உடார்ந்திருந்த நாற்காலையைத் தாண்டித்தான் செல்லவேண்டும். ஆனால் செல்லவில்லை. நின்றுவிட்டேன். அடுத்த அடியை என்னால் வைக்க முடியவில்லை.
     சொன்னால் நம்புவீர்களாக் கூட தெரியவில்லை. நாற்காலி நடுவுல் குழியாக இருக்கிறது. இல்லை , இல்லை. இது குழியல்ல ஏதோ நூலால் மட்டுமே தைத்தது போல இருக்கிறதே. அதுவும் இல்லை இது சிலந்தி வலை. இந்த சிலந்தி வலை எப்படி அந்த இளைஞனின் பாரத்தைத் தாங்கியது.
     காரணமின்றியே கையை வைத்து அழுத்தினேன். ம்... தொடுதல் சிலந்தி வலையைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் வலை கிழியவில்லையே. எப்படி. இந்த வலை என் கை அழுத்தத்தை தாங்குவது ஆச்சர்யமா இருக்கிறதே. ஐயோ..! என்ன இது என்னால் என் கையை எக்க முடியவில்லையே. விரல்கள் வலையில் ஒட்டிக் கொண்டதே. ம்...ம்..... வரமாட்டேன் என்கிறதே. என்ன செய்ய..?
     அந்த இளைஞன் எப்படி உட்கார்ந்திருந்தான். ஒருவேளை இதில் மாட்டிக் கோண்டுதான் பல முறை எழ முயன்றானோ? அதே வரிசையில் இருக்கும் என்னிடம் கூட அவன் உதவி கேட்கவில்லையே?
    அப்பா.....ஒருவழியாக கையை எழுத்து விட்டேன். கையில் அந்த சிலந்தி வலையில் அச்சி அப்படியே இருந்தது. சில அடிகள் முன் வைத்து மீன் தொட்டிக்கு சென்ற எனக்கு இன்னொரு ஆச்சர்யம். அந்த மீன் தொட்டியில் மீனுக்கு பதில் சில சிலந்திகள் இருக்கின்றன. மீன் தொட்டிகளில் எலி வளர்த்த காலம் மாறி இப்போ சிலந்திகளையெல்லாம் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா.
   ஆனால், ஆனால், ,ஆனால். இந்த சிலந்திகளின் முகம் மனித முகம் போல இருக்கின்றன. இது என்ன பைப் துவாரத்தில் இருந்து புதிய சிலந்தி ஒன்று வந்து விழுகிறதே. அது, அது, அது அந்த புது சிலந்தியின் முகத்தைப் பாருங்களேன். எனக்கு நன்றாய் தெரிந்த முகம் போல இருக்கிறது. எப்போது பார்த்தேன் தெரியவில்லையே... எப்போது, எப்போது, எப்போது....? ஆம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. முன்பு பார்த்த இளைஞனின் முகம் இது. அதான் நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தானே அதே இளைஞன்.
     இந்த அறிவியல் கூடத்தில் தவறாக ஏதோ நடக்கிறது. அப்படித்தான் என் உள் மனது சொல்கிறது. ஒருவேளை, வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் செய்து, இவங்களே கூட்டி போகிறார்கள், யாருக்கும் இடம் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நானும் இப்படி ஒர் சிலந்தியாகிடுவேன்.
    கூடாது. என்னால் இப்படி சிலந்தியாகி, மீன் தொட்டியில் எல்லாம் இருக்க முடியாது.
   அய்யோ! மீண்டும் மணி சத்தம் கேட்கிறது. அந்த கதவு திறக்கப்படுகிறது. இனி ஓட வேண்டும். ஓடத் தொடங்கினேன். ஓடும்போது திறந்திருக்கும் கதவை எட்டிப்பார்த்தேன். எப்படி சொல்வதென தெரியவில்லை. ஒரு மாதிரி நிழல்போல பெரிய என்னமோ ஒன்று நின்றுக் கோண்டிருந்தது. இனியும் தாமதிக்க கூடாது.
    ஆசைபட்ட வேலையும் கோவிந்தா.
    இனியும் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று, எனக்கு கிடைத்த இந்த வேலை அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு நினைக்கறேன். கதை எழுதலாம்னு சொல்லும் போது இன்னொரு நகைச்சுவையும் நினைவுக்கு வருகிறது. சொல்லவா...
     இது சிரிக்க மட்டும், தவறியும் சிந்திச்சிங்கன்னா என் மேல கோவப்படுவிங்க. அப்பறம் என்னை பற்றிய புகார்களை தேடுவிங்க. அதனாலதான் சொல்றேன். இது சிரிக்க மட்டும். இருவர் இப்படி பேசுகிறார்கள்;
“அண்ணே நானும் எழுத்தாளராகனும். அதுக்கு நான் என்ன அண்ணே செய்யனும்”
“ஓ, அதுக்கு நிறைய வாசிக்கனும், பலரில் எழுத்தாளுமையை புரிஞ்சிக்கனும்”
“அண்ணே, நிறைய வாசிக்காமலும், யாருடைய எழுத்துகளையும் படிக்காமலும் , எழுத்தாளராக முடியாதா..?”
“ஏன் முடியாது. நிச்சயமா முடியும்”
“ஹையா... அண்ணே அதை சொல்லுங்கன்னே. நானும் எழுத்தாளராகிடறேன்”
“உங்க முடிவுல உறுதியா இருக்கிங்கலா தம்பி”
“கண்டிப்பா”
“அப்படின்னா. இருக்கற ஏதாவது ஏதாவது எழுத்தாளர் சங்கத்துல மெம்மராகிடுங்க.”
“நெஜமாவா”
“பின்ன, பொய்யா சொல்றேன்”
“அண்ணே, என்னை வச்சி காமிடி கீமிடி செய்யலையே..?”
“அவ்வ்வ்வ்வ்வ்”

     சரி, என்னோட கதையின் முதல் வரியை சொல்லவா; அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.

          
   

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து மஹாத்மன் எழுதியிருக்கும் கட்டுரை)

பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன்.
இதுவொரு மனப்பிறழ்வுக்கானவனின் கதை என்பதை ஒரு முறை வாசித்து முடியும் போது புரிந்துவிடக்கூடிய விஷயம். அடுத்து இதுவொரு பலான – ஆபாசம் நிறைந்த கதையோ என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க இயலாத ஒன்றுதான்.
 
என் 20-23 வயது வரை கிள்ளான் பட்டணத்தின் மத்தியில் குளிரூட்டி உணவகத்தில் வேலைசெய்யும்போது ‘கண்டதையும் படிக்க வேண்டும்’ என்று முற்பட்டதினால் எதிர்ப்புற பெட்டிக்கடையில் ‘மஞ்சள்’ புத்தகக் கதைகளை வாங்கிப் படித்தேன். ஆங்கிலம் கலந்த தமிழ் நடையோடு இருக்கும் இச்சிறுகதையானது ஏறக்குறைய அந்தப் புத்தகங்களின் சாயலைக் கொண்டிருக்கின்றது.
 
கவனிக்க: சாயல் மட்டும் தான்.
 
மிகவும் வெளிப்படையானத் தன்மை, மிகச் சாதாரணமான சொல்லாடல், உத்திகளுக்கும் வாக்கிய இறுக்கங்களுக்கும் மெனக்கெடல் இல்லாத கதையமைப்பு ஆகியவை இக்கதையானது ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற முத்திரையை பெற்றுவிட்டது.
 
சரி,போகட்டும்.
மனப்பிறழ்வு அல்லது மனநோய் என்பது பலவகையானது. நமது அன்றாட வாழ்க்கையில் லூசு என்று அரை லூசு என்றும் முழு லூசு என்றும் ஒரு நட்டு கழன்றுவிட்டது என்றும் ஒருவருக்கொருவர் சொல்வதைப் பார்க்கின்றோம். பில்லி சூனியம்,செய்வினை, ஏவுதல் என்பது மந்திர தந்திரங்களிலும் நடு ஜாம சுடுகாடு பூசையிலும் கல்லறைகளின் மீதும் மண்டையோடு-நரபலி –செத்த ஆவிகளோடு செய்யபடுவதின் மூலம் உண்டாகும் மனப்பிறழ்வு ஒரு வகை

*தஞ்சோங் ரம்புத்தான் மனநல காப்பகத்தில் இவ்வகையான மன நோயாளிகளே 1987 வரை அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதன் பிறகு மனநல பாதிப்பின் தடம் மாறியது. கணக்கு வழக்கில்லாமல் விகிதாச்சாரம் எகிறியது.
 
குடும்பத்தால் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் மனநல சிகிச்சைப் பெற்றுக்கொண்டவர்கள் வெகு சிலரே.பெரும்பான்மையோர் வீட்டில் உள்ளோரை ஏமாற்றி அல்லது ஒருவித நாடகமாடி வீட்டை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்கு மாற்றலாகி {குறிப்பாக தலைநகருக்கு}வந்து தங்களின் மனப்பாதிப்பினால் நிலையான ஒரு வேலையில் இருக்க முடியாமலும் கீழ்ப்படிந்திருக்க இயலாமையினாலும் வீடற்றவர்களாக நாதியற்றவர்களாக கடைவீதி ஐந்தடிகளிலும் ‘மேபெங்க்’ படிக்கட்டுகளிலும் டத்தாரன் மெர்டெக்கா சதுக்கத்திலும் இரவு நேரத்தை கழிக்கும் இவர்களில் சிலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாவதால் வாழ்வு சிதிலமடைந்திருக்கின்றது.
 
ஒரு காரியத்தை குறித்தும் தீவிரமாய் ஈடுப்படுகிறார்கள். இதனால் பல முக்கியக் காரியங்களை கவனிக்க முடிவதில்லை. ஈர்ப்பில் வந்த இலயிப்பும் திளைப்பும் அதிகமாகி மாற்றம் ஏற்படுகிறது. மனத்தடுமாற்றம் தீவிரமாகி ஒரு கட்டத்தில் மனப்பிறழ்வை உண்டாக்கி விடுகின்றது.
இந்த மனப்பிறழ்வை தாங்கிக்கொள்ள முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றார்கள். சிலர் தாங்களாகவே வெளியேறுகிறார்கள். சிலர் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள். ஒரு லாபத்திற்காகவோ சுயநலத்திற்காகவோ அவமானத்திற்குள்ளாவோம் என்ற பயத்தினாலோ அடிஉதை கிடைக்க நேரிடும் என்பதாலோ மவுனிகளாகிவிடுவோரும் உண்டு.சொந்த வீட்டில் உள்ளோரே சமயத்தின் பேரில் ஒருவரை நிர்ப்பந்தித்து செய்யச் சொன்ன காரியங்கள் நிமித்தம் மனப்பிறழ்வுக்குள்ளான கதை எனக்குத் தெரியும்.அவர் ஒரு பெண்.
 
தயாஜியின் கதையில் வரும் கதாநாயகனின் மனப்பிறழ்வு யாரும் அறியாதது.இது ஒரு விதம்.இந்த விதம் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இனமத வேறுப்பாடின்றி எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது. பத்திரிகை செய்திகளே இதற்கு ஆதாரம்.ஆனால் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். ‘என் வீட்டில் இப்படி கிடையாது’ என்று அடித்துப் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ‘உவே?’ என்று வாந்தியெடுத்த நபரின் வீட்டிலும் அவருக்குத் தெரியாமல் இது நடக்கலாம்.நாம் நமது பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியுமா என்ன? மகாத்மா காந்தியே தன் பிள்ளை விஷயத்தில் இடறியிருக்க நாம் எம்மாத்திரம்?

எல்லா மத வேதங்களிலும் இந்த இடறல்கள் உண்டு .ஆழமான விவரிப்பு இல்லையெனும் ஒரு வரி அல்லது ஒரு வாக்கியம் போதுமே,யூகித்தறிய.
 
இணையத்தளம் வழி ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஆபாச அவலங்களுக்குள்ளாகி சிக்கி வெளிவரத் தெரியாமல் தடுமாறி தடம் மாறிபோய் தங்களத் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம்/கடவுள் கூட காப்பாற்ற முடியாமல் போகிறது.

ஒரு வெளிப்படையான,அப்பட்டமான கதை இது என்ற போதிலும் கதாநாயகனின் மனப்பிறழ்வுக்கான முதன்மை காரணமாக பாலியல் சினிமா திகழ்கிறது.சிறுவயது முதலே இதிலேயே நாட்டம் கொண்டி இலயித்து திளைக்கிறான்.அடிக்கடி கழிவறைக்குப் போகிறான். கழிவறையே கதியென ஆகிறான். மனதளவில் கழிவறை இவனை சிறைப்படுத்தி விடுகிறது. இதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.கழிவறையின் அசுத்தங்கள், துர்நாற்றம் இவன் மனதிற்குள் புகுந்து மனப்பிரம்மையின் முரண்பட்ட வெளிப்பாடுகளை இவனுக்கு காட்டுகின்றன. விடுபட முடியாத கருந்துளை இருளுக்குள் அகப்பட்டவனின் இயலாமை அடையாளமாக தன்னை மீறி சிறுநீர் கழித்து நொந்துக்கொள்கிறான். மனநோயாளிகள் இடம் பொருள் ஏவல் என்று எதனையும் பார்க்கமால் நடந்துக்கொண்டிருக்கும் போதே சிறுநீரை கழித்துவிடுவார்கள்.
 
தன்னை விடுவிப்பதற்கு எட்டுபேரை அடையாளங்கண்டு அழைக்கின்றான். கதை முழுக்க தனக்குத் தானே பேசிக்கொள்ளும் ஒரு மனநோயாளியின் வாக்குமூலங்கள் ஆகும். முதலில் அழைத்த நபர் அம்மா. அம்மாவிடம் தனது தப்பிதங்களுக்காக மனதார மன்னிப்பு கேட்கிறான்.பிறகு வரிசையாய் நண்பர்கள், ஆசிரியர், நண்பனின் தங்கை, நண்பனின் காதலி என்று போய் காளியிடம் வந்து நிற்கிறது.
நான் எதிர்ப்பார்க்காதது. மனம் திக்கென்றது.
 
தமிழ் சினிமாவையும் மலேசிய சிறுகதையும் உள்வாங்கிய மனம் இப்போதெல்லாம் கதையோட்டத்தையும் முடிவையும் சுலபமாக யூகிக்க முடிந்ததினால் காளி வந்தவுடன் திக்பிரமை உண்டானது.வேறு தெய்வங்கள் என்றால் பரவாயில்லை. ஏன் காளி? யோசித்தது மனம். எல்லா தெய்வங்களும் கைவிட்ட பிறகு இறுதியாய் போய் நிற்பது காளியிடம். காளிக்கு ‘மாயா’ என்றொரு பெயரும் உண்டு. எல்லா மாய கிரியைகளையும் நிர்மூலமாக்கும் வல்லமை படைத்தவள். மனப்பிறழ்வு என்பது ஒரு மாயை உலகம்.
 
வீட்டிற்கு அருகில் இருந்த ஒரே கோயில் காளி கோயில். விபரம் தெரிந்த நாற்முதற்கொண்டு அத்தெய்வத்தை வணங்கிய பக்தன். வளர்ந்து மீசை முளைத்த காலத்தில் காளியை காதலியாக பார்த்தவன். பக்தி கசிந்துருகி காதலாகியிருக்கிறது. எல்லாம் சரிதான். இடையில் வந்த பாலியல் சினிமா பழக்கம் பக்தனுக்கு காமக்கண்களைக் கொடுத்துவிட்டதால் காமவிகாரமாகிவிட்டது. காளி கொல்லுவாள் என்ற பய உணர்ச்சியே இல்லாத பக்தன். அல்லது, பாலியல் சினிமாவில் தீவிரமாய் இருக்கும் போது குற்றவுணர்ச்சியின் கரணமாக கோயிலுக்குச் செல்லுவதை நிறுத்திவிட்டிருக்கிறான். மனப்பிறழ்விலிருந்து காப்பாற்றப்பட தன்னுடைய தெய்வமான காளியை நினைந்து வேண்டும்போது காளியை மயான சூலியாகப் பார்க்காமல் தனக்கே முழு உரிமையும் உண்டென்ற உறுதிமனப்பான்மையில் “காளி !என் காதலி!…இங்கே வாடி” என்கின்ற அழைப்பு எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. பெண் பக்தைகளான ஆண்டாளுக்கும் ராதைக்கும் ஓர் ஆண் தெய்வம் காதலனாக எப்படி அமைந்ததோ அப்படியே இவனுக்கும் பெண் தெய்வமான காளி காதலியாகிறாள்.
“உன்னை நான் உனக்கே வேறுமாதிரி காட்டுகிறேன்” என்ற இவனின் துடிப்பு எனக்கு பிரமிப்பை கொடுத்தது. ஆங்காரி,பயங்கரப் பார்வை ,நாக்கை வெளியே நீட்டி சூலத்தை ஆத்திரத்தோடு ஏந்தியிருப்பவள், மண்டையோடுகளை கழுத்தில் அணிந்திருப்பவள் காளி என்ற உருவகத்தை மாற்றி அன்பே வடிவமாய் அன்பைப் பொழியும் காதலியாய் மாற்றும் முயற்சியில் மனம் ஏங்கித் தவிக்கிறது. இவன் தன்னுடைய பலவீனங்களை, மனத்தடுமாற்றத்தை, மனப்பிறழ்வை ஏந்திக்கொண்டு காளியிடம் சரண் அடைகிறான். என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. மனம் நடுங்குகிறது. அதன் விளைவாக சிறுநீர் வெளியேறுகிறது.
 
பிரமாதம்!!
 
இறுதியில் யார் யாரை பழிவாங்கியது என்ற கேள்வி தனியாய் கேட்டு நிற்கிறது. காளி அருகில் வருகிறாள் என்றதோடு கதை முடிகிறது. காளி பழிவாங்குவதற்கு வருகிறாளா அல்லது காதலியாக வருகிறாளா என்பது தெரியாமல் போகிறது. சிறுகதை இலக்கணத்திற்கேற்ப முடிக்கப்படுகிறது கதை.
இறுதியாக, இப்படி அப்பட்டமான – வெளிப்படையான – எதிர்மறையான – முகஞ்சுளிக்க வைக்கும் சிறுகதை நமக்குத் தேவைதானா என்பது தான்.சமூகத்தில் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இதைவிட மிக மிக மோசமான சம்பவங்கள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கின்றன. பாலியல் ரீதியான வக்கிரம் ,வன்கொடுமைகள் நம் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் நடக்கின்றன. பத்திரிகை செய்திகளோடு நாம் நம்மை கோடு தாண்டாதவர்களாக தமிழ் இலக்கியத்தில் இருத்திக் கொள்ளப் போகிறோமா என்ற கேள்வியை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.
 
தயாஜி செய்த மூன்று தவறுகள்:
 
1} புத்தக உரிமத்திற்காக எழுத்தாளர் சங்கத்தை எதிர்த்து கலகக் குரல் எழுப்பியது.

2}ஆர்.டி.எம்- யில் இருந்து கொண்டு இப்படிப்பட்டக் கதையை எழுதியது

3}மலேசியா நாட்டில் இக்கதையை வெளியிட்டது.
 
 
- மஹாத்மன்
 
நன்றி வல்லினம்

எளிய கேள்விகளும் எளிய பதில்களும்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கே.பாலமுருகன்)
 
 
புனைவுகள் குறித்த அபத்தமான கருத்துகள் பல்வேறு தரப்பிடம் இருந்து வருகின்ற சூழலில் வல்லினத்தின் சிறுகதை பொறுப்பாசிரியர் கே.பாலமுருகன் பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்.
 
ஒரு இலக்கிய படைப்பில் கூறப்படும் கருத்தை ஒட்டியே அதை படைத்த படைப்பாளின் குணமும் இருக்கும் என்று கூறப்படுகிறதே, இது சரியா? உதாரணமாக போதை பழக்கத்துக்கு அடிமையானவனின் வாழ்க்கையை கூற முனையும் படைப்பாளியும் ஒரு போதைபித்தனாக இருப்பான் என்று கூற முடியுமா?
 
எப்பொழுதுமே கலை மீதான ஆதிக்கம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்து வந்துள்ளன. மேட்டுகுடி மக்கள் இதுதான் கலை என பொதுப்பரப்பில் அளவீடு செய்வதும் அதை விளிம்புநிலை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான கலை என்பது உயரிய விசயங்களை மட்டும் பேசுவது எனத் தீர்மானிக்கிறார்கள். ஆகவே அதனை எதிர்த்து எழுதத் துவங்கும் படைப்பாளி அதுவரை இலக்கியம் கண்டிராத நிலப்பரப்பிற்குள் நுழைகிறான். சமூகம் கண்டுக்கொள்ளாமல் விட்ட மனிதர்களை அதாவது சொல்லப்படாத மனிதர்களை நோக்கி தன் படைப்புகளைக் கவனப்படுத்துகிறான். இதுவரை சென்றிறாத இடத்தைத் தேடிச்செல்லும் பயணியைப் போலத்தான் இலக்கியவாதியும். மேடையில் இராவணன் வேடத்தை அணிந்து நடிக்கும் நடிகரின் தீவிரமான கலை ஈடுபாடு இறுதியில் அவனுக்கு எதைக் கொடுக்கின்றது? பார்வையாளர்கள் அவனுடைய இராவணன் வேடத்தின் மீது அதிக வெறுப்பும் கோபமும் கொண்டு அவனை நோக்கி சப்பாத்துகளை எறிகிறார்கள். அவன் உண்மையில் இராவணன் கிடையாது, ஆனால் அவனுடைய ஈடுபாடான நடிப்பு மக்களை நம்ப வைக்கின்றது. அது மேடை என்பதன் இடைவேளியைத் தகர்க்கின்றது. ஆகவே, போதைப்பித்தர்கள் பற்றி எழுதும் ஒரு படைப்பாளியின் கூர்மையான எழுத்து அவனும் அப்படிப்பட்டவன்தான் என வாசகனை நம்ப வைத்து அவன் மீது கோபம் வர வைப்பது என்பது வெற்றியே. எம்.ஏ இளஞ்செல்வனின் கதைகளைப் படித்துவிட்டு அவரை அடிப்பதற்காக வீடுவரை சென்றவர்களும் இருக்கிறார்கள். இது வாசகனின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. எது போலி எது உண்மை என கலையில் பிரித்தறிய முடியாமல் போகிறது? இதுதான் இலக்கியம் எனத் தீர்மானிக்க முயலும் அனைவருமே கலையின் முதலாளிகளாகத் தங்களை நிறுவிக்கொள்ளவே நினைக்கிறார்கள்.
 
மேலும் போதைப்பித்தன் மெனக்கெட்டு தன் வாழ்வை இலக்கியமாகப் படைப்பான் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பது வேடிக்கையானது. அதையும் தாண்டி ஒரு காலக்கட்டத்தில் அவன் தன் வாழ்வை எழுதினாலும் அது கண்டனத்திற்குரியதோ அல்லது தீண்டத்தகாத இலக்கியமும் அல்ல.
ஓர் இலக்கிய படைப்பு எளிய வாசகர்களாலும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும் அப்படி அமைந்தாலே அது நல்ல இலக்கியம் என்று கூறுவதும் சரியா?
 
யார் அந்த எளிய வாசகர்கள் எனக் கூற முடியுமா? எந்தவகையில் அவர்கள் எளிய வாசகர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? எளிமை என்பதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இப்படி எடுத்துக்கொள்ளலாம், வாசிப்பை விரிவுப்படுத்தாமல் ஒரே இடத்திலேயே தேங்கிவிட்டவர்களை எளிய வாசகர்கள் எனச் சொல்லலாமா? அல்லது அம்புலிமாமா, பீர்பால் கதைகள் எனச் சிறுவர்களுக்கான எளிய கதைகளை மட்டுமே வாசித்து அங்கேயே தங்கிவிடும் பெரியவர்களா? இரண்டு தரப்பினரும் சமூகத்தில் ஆரோக்கியமானவர்களா? வாசிப்பு என்பது அடுத்தக்கட்ட தேடல்களை நோக்கி வளர வேண்டும் என்பதே ஆரோக்கியம். புதுமைப்பித்தனை நான் படிக்க மாட்டேன் காரணம் என்னால் நா.பார்த்தசாரதியை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என ஒரு வாசகன் தன்னைப் பூட்டிக்கொள்வது நியாயமானதா? இல்லையென்றால் அதுபோன்ற எளிய வாசகர்கள் பற்றி ஒரு படைப்பாளனும் சரி இலக்கியமும் சரி அக்கறைக்கொள்வதில்லை.
 
இன்னொன்று முக்கியமான விசயம், எல்லாம் மனிதர்களின் அறிவுநிலையும், புரிதலும், ஆர்வமும், கல்வியறிவும், ஈடுபாடும் மொழியறிவும் ஒரே மாதிரி இருக்கின்றனவா? அப்படி இல்லாதபோது எப்படி அவர்களை எல்லோரையும் ‘எளிய வாசகர்கள்’ எனும் ஒரே அடையாளத்திற்குள் வைத்துத் திணிக்க முடியும். அம்புலிமாமாவைத் தாண்டாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு அம்புலிமாமா இரகத்திலான இலக்கியத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஏதும் உண்டா? அவர்களை வளரவிடுவதில் யாருக்கு என்ன பிரச்சனை? அவர்களுக்காகக் கவலைப்படுகிறோம் என்கிற பெயரில் அவர்களைத் தத்துக்குட்டியாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நாம் இன்னும் பகுத்தறிவை இழந்துவிடவில்லை. அல்லது ஒரு பக்க மூளையோடு பிறப்பதில்லை.
 
இன்னும் எளிமையாகச் சொல்வதானால், ஒரு தீவிர வாசகனுக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுமே இலக்கியம் படித்தவன் எளிய வாசகன்தான். பல்கலைக்கழகத்தில் படித்தவனுக்கு படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படிப்பவன் எளிய வாசகன், படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படித்தவனுக்கு நாளிதழில் மட்டுமே சிறுகதைகளையும் கவிதைகளையும் வாசிப்பவன் எளிய வாசகனாகத்தான் இருப்பான். இதில் எந்த நிலை எளிய வாசகர்களுக்கு ஓர் எழுத்தாளன் இயங்க வேண்டும். யாரை மனதில் கொண்டு எழுத வேண்டும். அப்படி ஒருவன் இந்த ரக மக்களுக்கு எழுதுகிறேன் என புனைவு செய்தால், அவன் நல்ல ஆசிரியராக இருக்கலாம்; எழுத்தாளனாக முடியாது.
 
ஓர் இலக்கிய படைப்பு குடும்பத்தில் அனைவராலும் ஒன்றாக வாசித்து மகிழத்தக்கதாக அமைவது அவசியம் என்றும் அதுவே தமிழ் இலக்கிய கோட்பாடு என்றும் கூறுவது சரியா?
 
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சினிமாவில் குழந்தைகள் சினிமா, ஆய்வு சினிமா, சிறுவர் சினிமா, அரசியல் சினிமா, கலை சினிமா, பிராந்திய சினிமா என இன்னும் பல வகைகள் இருப்பதைப் போல இலக்கியத்திலும் பலவகைகள் உள்ளன. சிறுவர் சிறுகதைகளைப் பெரியவர்கள் விரும்பி வாசிக்க இயலாது. அவர்களால் அதிக ஈடுபாட்டுடன் அதில் இலயிக்க முடியாது. அவர்களின் வயதிற்கும் அனுபவத்திற்குமேற்ற பெரியோர் கதைகளையே அவர்களால் மகிழ்ச்சியுடன் வாசிக்க முடியும். அதே போல ஒரு வண்ணதாசனின் சிறுகதையையோ அல்லது ஜெயகாந்தனின் நாவலையோ ஒரு 12 வயது சிறுவன் வாசித்தால் அவனால் அதற்குள் நுழையவே முடியாது. இந்த வேறுபாடுகூட தெரியாவிட்டால் என்ன தலைமைத்துவப்பண்பு நம்மிடம் இருக்கிறதாக நாம் நம்புகின்றோம்? இன்றைய நிலையில் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்ட தமிழ்ச்சினிமாவை முதலில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடிகிறதா? அதிலுள்ள இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் ஆபத்தானது இல்லை என்று யார் முடிவு செய்கிறார்கள்? அடுத்ததாக நடிகைகளின் தொப்புளையும் தொடையையும் காட்டும் ஞாயிறு தமிழ்ப்பத்திரிகைகள் இன்று பள்ளிகளில்கூட வாசிக்க வைக்கிறார்கள். இதை அவர்கள் பார்த்துப் பாதிப்படைய மாட்டார்கள் என எந்த மனநல மருத்துவர் உத்தரவு அளித்துள்ளார்? குடும்பத்துடன் அமர்ந்து செய்யக்கூடிய வேலையையும் இலக்கியத்தையும் ஒன்றாக்கி பார்க்க முனைவதே என்னைப் பொறுத்தவரையில் தவறுத்தான்.
 
ஒரு இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் அல்லது இலக்கிய விமர்சனத்தின் நோக்கம் என்ன?
 
எந்தவொரு கலை விமர்சனமும் படைத்தவனின் சொந்த வாழ்வைப் புண்படுத்தாத வகையிலே அமைந்திருக்க வேண்டும். அவனுடைய வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அளவிற்கு அவன் ஆபத்தானவன் அல்ல. தன் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். அவனுடைய தர்க்கத்தில் குழப்பங்கள் இருப்பின் அதனை விவாதத்தின் மூலம் முன்வைப்பதே ஆரோக்கியமான விமர்சனம், அவனைத் தண்டித்து அவமானப்படுத்தி குற்றவாளியாகக் காட்ட வேண்டும் எனும் வகையில் முயன்றால் அது விமர்சனமல்ல, பழிவாங்கல் ஆகும்.
 
 தமிழ் இலக்கியத்திற்கு என்று எல்லைகளை வகுத்துக் கொண்டு எழுத முடியுமா?
 
அப்படி இதற்கு முன் நினைத்திருந்தால் தமிழ் இலக்கியம் இத்தனை தூரம் உலகம் கவனிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்காது. தமிழில் இத்தனை நாவல்கள் படைப்புகள் தோன்றியிருக்காது. கலைக்கு ஏது வரையறை, அளவீடு, கணம், நீளம், பரப்பளவு? அது என்ன திடப்பொருளா?
 
சமுதாய / பண்பாட்டு விழுமியங்களை தன் எழுத்தில் ஒரு படைப்பாளி விமர்சிக்கவோ மாற்று கருத்தை முன்வைக்கவோ கூடாதா?
 
அதை விழுமியங்கள் என யார் தீர்மானித்தது? பரதம் உயர்ந்த கலை என்றால் நரிகுறவர்களின் தெருக்கூத்து தாழ்ந்த கலையா? ஏன் மேட்டுகுடி மக்கள் ஆர்வம் கொண்டு ஈடுபடும் கலைகளை பண்பாட்டு நிறுவனங்கள் வளர்த்தெடுத்து அதனைக் கொண்டாடுவதற்கு முனைகிறப்போது, தெருக்கூத்தும், பாவைக்கூத்தும் அழிந்து வருகின்றன? அப்படியென்றால் ஒரு சமூகத்தில் எது விழுமியங்களாக இதற்கு முன் தீர்மானிக்கப்பட்டுள்ளது? அதனை மறுபரீசீலனை செய்வதும் அதனை மீள்மதிப்பீடு செய்வதும் எப்படிக் குற்றமாகும்?
 
-கே.பாலமுருகன்
 
நன்றி வல்லினம்

கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை ஒட்டி , எழுதிய கட்டுரை )

நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள்.
” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது.
 
இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன்.
“மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய் இல்லையா? விபச்சார விடுதிகள் இல்லையா?”
 
கலாச்சாரம் கட்டிக் காக்கும் மலேசியா என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கலாம். உளவியல் அடிப்படையில் பல மன சிக்கல்கள் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தாய்மைக்கு மதிப்பளிக்கும் சமுதாயமாக நாம் இருகின்றோம் என்றால் ஏன் கண் முன் தெரியும் விபச்சார விடுதிகளுக்கு எதிராக கோஷம் போடுவதில்லை.
 
தாய்மை உன்னதமானது என்று போற்றுகிறோம். ஆனால் சிசு கொலையைப் புரிவதும் தாய்மைதானே? லெஸ்பியன் எனும் பெண்களோடு பெண்கள் உறவு, ஹோமோ எனும் ஆண்களோடு ஆண்கள் உறவு, குறைந்த வயது கொண்டவர்களோடு உறவு, மிருகங்களோடு உறவு என்று கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் மலேசியாவில் இது போன்ற உறவுகள் நடந்துள்ளது என்பதை நாம் அறிந்திருக்கவில்லையா என்ன?
 
சமீபத்தில் தகப்பனும் மகளும் காதலன் காதலியாக இருந்தார்கள் என்ற செய்தி நாளேடுகளில் பிரசுரமானதைக் கலாச்சார சிதைவு என்று ஏன் அதனைக் கட்டிக் காப்பவர்கள் கூச்சலிடவில்லை. இது போன்ற செய்திகளை பிரசுரம் செய்யாதீர்கள். இது நமது கலாசாரத்துக்கு எதிரானது என்று ஏன் நல்லவர்கள் பத்திரிகைகளுக்கு எதிராக அறிக்கை விடவில்லை.
 
நடந்த சம்பவத்தைப் பதிவாக்குவது நாளேட்டின் கடமை. சமூகச் சிக்கல்களில் உழன்று தவிக்கும் உள்ளங்களின் அலைக்கழிப்பை பொதுவுக்கு கொண்டுவருவது எழுத்தாளனின் கடமை. அதனை வாசித்து விமர்சனங்களை முன் வைப்பது வாசகனின் கடமை.
 
கடவுள் முதன் முதலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அறிவு, அடுத்தடுத்து மனிதனின் இனப்பெருக்கம் அவர்களுக்குள்ளேயே நடந்த உறவில் பெருகியது என்பதை சொல்லப்போவோமானால் நம்மை மனநோயாளி என்றும், கலாச்சாரத்தை சிதைக்க வந்தவன் என்றும் பெயர் சூட்டிவிடுவார்கள் “நல்லவர்கள்”
 
மகளைக் கெடுக்கும் தந்தை, தாயை கொலை செய்யும் மகன்,மாணவனை வல்லுறவுக்கு ஈடுபடுத்திய ஆசிரியை, பேத்தியை வாய்வழி உறவுக்கு ஈடுபடுத்திய தாத்தா என்றெல்லாம் பல சம்பவங்களை நாளிதழில் படித்துப் பழகிப் போன நமக்கு, தாய் குளிக்கும் போது எட்டிப்பார்த்த மனசிக்கல் கொண்ட மகன் என்று புனைவு மொழியில் ஒரு சம்பவம் அச்சில் ஏற்றிவிடும்போது மனம் ஏற்றுக் கொள்ளாமல் வாந்தி எடுக்கிறது. நாம் வாந்தி எடுப்பதால் அந்தச் சம்பவம் அசிங்கமான கற்பனை என்றும் ஒதுக்கிவிடவும் முடியாது. இதை மனச் சிக்கலின் ஒரு கூறாகவும், பாதிக்கப்பட்டவனை ஒரு நோயாளியாகவும் நாம் கவனிக்கவேண்டியது அவசியம்.
 
கோலாலம்பூரிலிருந்து வந்த ஒரு சிநேகிதி என்னிடம் ஒரு சம்பவத்தைச் சொன்னாள். அதாவது உடன் பிறந்த அண்ணனும், தங்கையும் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்கிறார்கள் என்று. இந்த கதையைக் கேட்டதும் எனக்கு வாந்தி வருவதுபோல்தான் இருந்தது. ஆனால் இந்தச் சம்பவம் உண்மையாக இந்த மலேசிய மண்ணில் நடந்துள்ளதே! எப்படி?
 
சிறுவயதில் அவர்கள் அனுபவித்த, பார்த்த சில நேரடிச் சம்பவங்கள் அவர்களின் பழக்கத்துக்கு வந்து பிறகு அதுவே அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் திருமணம் செய்யும் கட்டாயத்துக்கு வந்துவிட்டது என்று அந்த சிநேகிதி என்னிடம் சொன்னாள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து பிள்ளையையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள. இரவு நேரத்தில் முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதால் விளக்குகளை அனைத்துவிட்டுத்தான் கூடுவார்களாம். இதனை அந்தப் பெண்ணே என் சிநேகிதியிடம் கூறியுள்ளதாக எனக்கு கூறப்பட்டது.
 
அவர்கள் யார் என்று அவர்களைத் தேடுவதைவிட இதுபோன்ற பல மன சிக்கல்கள் நமது சமூகத்தில் உள்ளன என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலாச்சாரம் என்று பேசி நடப்பதை ஒதுக்கி வைப்பதற்கு முன், ஆதிகால மனிதனாக இருந்தவனுக்குக் காட்டுமிராண்டித்தனம் உடலில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் நடக்கமுடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத, வரம்புக்கு மீறிய பல சம்பவங்கள் உலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். சமயம் மனிதனை தெய்வமாக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், சில சமயங்களில் சமய வாதிகளும் காவிகளை காமத்துக்கு காவு கொடுத்திருப்பதையும் நாம் படித்திருக்கிறோம், காணொளியிலும் கண் வலிக்கப் பார்த்திருக்கிறோம். ஆலய கர்ப்பக் கிரகத்தில் உடலுறவு, எத்தனயோ “ஆனந்த” சாமியார்களின் உல்லாச நேரங்கள் ஒளிப்பதிவு, என்று பல “கச முசா” செய்திகளை நாம் கசக்கி கசக்கி படிக்கவில்லையா?
 
அன்று பார்த்த நிர்வாணப் படங்கள், கேட்ட நிர்வாணக் கதைகள், யாவற்றையும் மனதில் ஒளித்துவைத்துக் கொண்டு மணி அடிப்பதில் தப்பு கிடையாது. ஆனால் மணி அடிப்பவர்கள் தங்களை புனிதமாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்ததை பிறர் செய்யும் போது உடனே உத்தம நீதிமன்றத்தில் ஆயுட்கால நீதிபதியாக அமர்ந்து கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதைத்தான் பொறுக்கமுடியவில்லை.
 
மனதாலே ஒரு பெண்ணை தவறாக நினைத்தாலே அவன் மனதால் விபச்சாரம் செய்கிறான் என்று ஏசுநாதர் கூறி இருக்கிறாராம். இதன் அடிப்படையில் “நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது என்னையும் சேர்த்து.
 
 
-இரா.சரவணதீர்த்தா
 
நன்றி வல்லினம்

படைப்பாளி தண்டிக்கப்படலாகாது


(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து ஸ்ரீவிஜயா எழுதியிருக்கும் கட்டுரை)


கடந்த சில வாரங்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை அனைவரும் அறிந்ததுதான். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடப்போவதில்லை.
 
ஒரு சிந்தனை எழுத்து வடிவம் பெறுகிறபோது அது வாசிப்போரை கலவரமடையச்செய்யும் என்பதனைப் பல பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருந்ததை வாசித்துள்ளேன். இருப்பினும், அதை இன்று உணர்கிறேன்.
 
பாதிப்புகள் வரும் என்பதால் பாதித்த விஷயத்தைத் தொட்டு ஒரு படைப்பாளி எழுதக்கூடாதா என்ன? உண்மையைச் சொல்வதில்தான் ஓர் படைப்பு வெற்றியடைய முடியும். உண்மைக்கு அரிதாரம் பூசி நாசுக்காகச் சொல்லாமல் அதை அப்படியே சொல்லிச்சென்றவிதம் பலரை பதற்றங்கொள்ளவைத்துள்ளது. சமூதாயத்தில் நடக்காத அவலமா இது? எங்கோ ஒரு மூளையில் எவனோ ஒருவன் செய்தான் என்பதனை இனி யாரும் இதுபோல் செய்துவிடக்கூடாது என்கிற சிந்தனையில் எழுதப்படுகிற பாடம்தான் இலக்கியப்பணி. இன்னமும் ஒழுக்கச்சீல பாடம் நடத்துவதற்கு இலக்கியத்துறை ஒன்றும் பாலர் பாடசலையல்ல. அந்த நோக்கோடு நாம் இந்தச் சிறுகதையை நோக்கியிருந்தோமென்றால் இவ்வளவு பதட்டநிலை வந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த எழுத்துப்பாணி தமிழ்நாட்டு பிரபல எழுத்தாளர்களின் பாணி. அந்த பாணியை இலக்கியத்தில் குறைந்த ஞானமுள்ள ஓர் இளைஞன் கையாள்கிறபோது இதுபோன்ற இக்கட்டான சூழல் வருவது சகஜமே. வாசகர்களை விடுங்கள். பத்திரிகை ஆசிரியர்கள் என்கிற முறையில் பரந்த வாசிப்பு அனுபவம் இருக்கின்ற பட்சத்தில், இதுபோன்ற படைப்புகள் உலக அளவில் ஆங்கிலம் தமிழ் மலாய் என பல மொழிகளில் அதிக அளவில் வந்துள்ளதை உணராமல், உலகத்தில் யாருமே இப்படிச்சொல்லவில்லை என்கிற ரீதியில் தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியா? இந்தச் சமூதாயத்தின் பார்வை எந்த அளவிற்கு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா?
 
நான் எழுதினேன். எனது சிந்தனை சரியில்லை. எனக்கு எழுதுவதற்கு தடை என்று எதாவதொரு சட்டதிட்டங்களைக் கொண்டுவாருங்களேன். அதை விடுத்து வேலை இடத்தில் வேட்டு வைக்கப்பட்டு, அதையும் கருத்தில் கொண்டு ஒரு நிறுவனம் அவனின் வேலையைப் பறிக்கின்ற பணியை செம்மையாகச் செய்துள்ளார்களே… ஓர் இலக்கியப் படைப்பை இலக்கியப்படைப்பாகவே விமர்சித்து கருத்து மோதல்களைச் செய்வதைவிடுத்து, அதை எழுதியவருக்கு வேலை போகின்ற அளவிற்கா செயல்படுவது!
 
ஓர் இலக்கியப் படைப்பாகப்பட்டது களிமண் போன்றது. எழுதுகிறவர் என்ன சொல்லி எந்த சிந்தனையில் எழுதினாலும் வாசகன் என்பவன் அதை நல்ல நோக்கோடு நல்ல சிந்தனையோடு வாசித்துப் பழகவேண்டும். சிலவேளைகளில் படைப்பில் சொல்லப்பட்ட விஷயம் நம் வாழ்வோடு எப்படி பின்னிப்பிணைந்துள்ளது என்று வாசகனாகப்பட்டவன் யோசிக்கவேண்டும். சினிமா பார்க்கின்றோம், நல்லதை ஏற்போம் கெட்டதை விட்டுவிடுவோம் என்கிற ரீதியில்தானே திரையறங்குகளிலோ அல்லது தொலைக்காட்சியின் முன்னிலையிலோ அமர்கிறோம். குலுக்கல் நடனமோ அல்லது முதலிரவு காட்சிகள் வருகின்றபோது கண்களையா மூடிக்கொள்கிறோம்! சரி சினிமாவை விடுங்கள், பத்திரிகைகளில் வரும் அந்தரங்கம் என்கிற கேள்விபதில் அங்கத்தில் (எல்லா பத்திரிகைகளிலும் பெரும்பாலும் இந்த அங்கம் இருக்கும்) சில கேள்விகளை சென்சார் செய்கிறேன் என்று சொல்லிய பின்பும் வரும் சில கிளுகிளுப்பு விஷயங்கள், அப்போது மட்டும் எழுத்துகளையும் கருத்துகளையும் மனோத்தத்துவ ரீதியில் நோக்கவேண்டும் என்று வாசனுக்கு அறிவிப்பு செய்கின்ற பத்திரிகை ஆசிரியர்கள் தனி ஒரு எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக ஆட்களைத் திரட்டி விமர்சித்து கொண்டிருக்கிறது என்கிற வினாவிற்குத்தான் பதில் இல்லை.
நல்ல விஷயங்கள் எவ்வளவோ எழுதியுள்ளோம். ஒருவர் வாசித்திருக்கமாட்டார். விமர்சனம் என்று வரும்போது, வருகிறவர்கள் போகிறவருகிறவர்கள், அறவே இலக்கிய வாசிப்பில் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்கிறேன் பேர்வழி என புழுதிவாரிக்கொண்டிருப்பது இந்த சமூதாயத்தின் சாபக்கேடு.
 
`நீ எத்தனை முறை நல்ல எழுத்துகளை நல்லமுறையில் வாசித்து விமர்சித்துள்ளாய்? இப்போது மட்டும் மோசமான எழுத்து என்று உன் கருத்தைக் கூறவந்துவிட்டாய்? என்று பத்திரிகை ஆசிரியர்களே அந்த கடிதத்தின் கீழ் சூடுகொடுப்பதைப்போல் ஓரிருவரிகள் எழுதி, கருத்து எழுதியவரை கேள்விகேட்டால்தான், அறவே இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் கருத்துச்சொல்ல வந்துள்ளேன், என்று இலக்கிய வட்டத்திற்குள் மூக்கை நுழைக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் இஷடம்போல் கருத்து கூறுவதால்தான் நமது சமூகத்தில் நல்ல படைப்புகள் இன்னமும் வரவில்லை. இனியும் வராது. தி.ஜா எழுதிய `அம்மா வந்தாள்’ என்கிற நாவலை வாசித்தவர்கள், தாய்மை களங்கப்படுத்தப்பட்டது என்கிற வெட்டி வியாக்கியானமெல்லாம் செய்துகொண்டிருக்கமாட்டார்கள்.
எழுத்தாளன் மனப்பிறழ்வு நிலையில் படைப்புகளைக் கொடுப்பான். வாசகன் தான் சீர்தூக்கிப்பார்த்து வாசித்து சல்லடை செய்துகொள்ளல் வேண்டும்.
 
எழுத்தாளர்களுக்கு சமூதாயத்தின் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஓர் எழுத்தாளனை இவ்வளவு மோசமான நிலைக்குத்தள்ளுவதற்கு இந்த சமூதாயமும் பத்திரிகையும் துணைபோனதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது.
 
இலக்கியத்தால் வாழ்ந்தான் என்பதைவிட இலக்கியத்தால் வீழ்ந்தான் என்கிற சரித்திரத்தை நம் நாட்டு வருங்கால இலக்கியம் சொல்லும்.
 
வானொலி தொலைக்காட்சிகளைப்பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல, அப்போதெல்லாம் எந்த அறிவிப்பாளரும் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் வானொலிக்கே சம்பந்தமில்லாத ஓர் விஷயத்தால் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளருக்குப் பணி நீக்கம்.! காரணம் அவர் எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் இச்சமூகத்திற்கு இளக்காரம்.
 
இலக்கியத்தில் எவ்வளவோ போராட்டங்கள் வந்திருப்பினும் சம்பந்தமேயில்லாமல் வேலை நீக்கம் ஏற்பட்டதாக இதுவரையிலும் கேள்விப்படவில்லை. அந்தப் படைப்பாளியின் வேலைக்கு பிரச்சனை வரவேண்டிய அளவிற்கு என்ன அவமானம் நிகழ்ந்துவிட்ட்தென்றுதான் இன்னமும் புரியாத புதிர். செவிசாய்க்கவேண்டிய விவரங்களுக்குப் பாராமுகமாக இருந்துவிட்டு, எங்கேயோ தேள்கொட்டினால் எங்கேயோ நெரிகட்டிக்கொள்ளும் என்பதைப்போல கேழ்விரகில் நெய்வடிகிறதென்று மதிகெட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவை நினைத்து நிலைகுலைந்துபோனேன்.
இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.
 
ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.
 
அதற்காக தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது.
 
ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்கு அக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.
 
எல்லா எழுத்தாளர்களாலும்… அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்?
ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.
 
இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.
படைப்பு விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். இருப்பினும் படைப்பாளி தண்டிக்கப்படலாகாது.
 
-ஸ்ரீவிஜயா
 
நன்றி வல்லினம்

வாயில் விழைச்சு - பெருமாள் முருகன்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை, சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டபோது படித்த கட்டுரை. இக்கதை குறித்த கேள்விகளுக்கும் இது போன்ற புனைவுகளுக்கும் ஏற்றதாய் அமையும் என்று இக்கட்டுரையை இங்கே மீண்டும் பதிகிறேன்.)


ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிறுவனங்களில் ஜனவரி தொடங்கி மார்ச் வரை நிதிக் கணக்குகள் முடிக்கப்படும் காலம் என்பதால் முசுவாக இருப்பார்கள். அதுபோலக் கல்வி நிறுவனங்களில் இது கருத்தரங்கக் காலம். முன்பு பல்கலைக்கழகங்களில்தான் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெறும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் நிதி உதவி செய்வதால் கல்லூரிகளிலும் இன்று ஆய்வுகள் பெருகிவிட்டன. ஆகவே எங்கு நோக்கினும் கருத்தரங்க ஆரவாரங்கள். 
 
இப்போதெல்லாம் கல்வி நிறுவனங்களில் நவீன இலக்கியம் பற்றிய பேச்சுகள் நடப்பது அரிது. எப்போதுமே அப்படித்தான் என்பது நம் வரலாறு என்றாலும் இப்போது சுத்தமாக இல்லை. தொல்காப்பியம் தொடங்கி ஆறாம் நூற்றாண்டு வரையான பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கே அந்நிறுவனம் நிதி உதவி செய்கிறது. ஆகவே எல்லா ஆய்வாளர்களும் பழந்தமிழ் இலக்கிய விற்பன்னர்களாகி வருகின்றனர். நானும்கூட. சமீபத்தில் நான் கவனம் எடுத்துக்கொண்டு வாசித்த நூல் ‘ஆசாரக்கோவை.’ இந்நூல் பற்றிக் கவனம் உருவாக இரண்டு நண்பர்கள் காரணம். திருச்சி, ஈவெரா அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராரசிரியராகப் பணியாற்றும் முனைவர் க.காசிமாரியப்பன் ஒருவர்.
 
சென்னை, நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் இரா.இராமன் மற்றொருவர். இருவரும் ஆசாரக்கோவை பற்றி வெவ்வேறு கோணங்களில் கட்டுரை எழுதியுள்ளனர். அவர்களது கோணம் பற்றி இப்போது விவாதிக்கப் போவதில்லை. ஆசாரக்கோவையில் நமக்குத் தேவையான செய்திகள் சில உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. பன்னிரண்டு நீதிநூல்களுள் ஒன்றாக ஆசாரக்கோவையையும் சேர்க்கிறார்கள். ஆனால் நீதி சொல்லும் நூலல்ல இது. ஆசாரம் என்னும் சொல்லுக்குப் பல பொருள்களை அகராதிகள் தருகின்றன. தமிழ் லெக்சிகன் தரும் பொருள்களுள் சில: சாஸ்திர முறைப்படி ஒழுகுகை, நன்னடை, வழக்கம், தூய்மை ஆகியன. இன்றைய வழக்கிலும் ஆசாரம் பயன்படுகிறது. ‘அவுங்க ரொம்ப ஆசாரமானவிங்க’ என்றும் ‘அது ஆசாரமான குடும்பம்’ என்றும் சொல்லும் வழக்கம் இருக்கிறது. பழமைப் பிடிப்பு அல்லது பழைய முறைகளைக் கடைபிடிப்பவர்கள் என்னும் அர்த்தம் இங்கு வருகிறது. நம் அன்றாட நடவடிக்கைகளை சாஸ்திர முறைப்படி அமைத்துக்கொள்வதற்குப் பெயரே ஆசாரம். சாஸ்திரம் என்றால் எது? சமஸ்கிருதத்தில் பலவகைச் சாஸ்திரங்கள் இருக்கின்றன என்று அறிகிறோம். தமிழிலும் ‘சைவ சித்தாந்த சாத்திரங்கள்’ உள்ளன.
 
சாஸ்திரம் என்பது குறிப்பிட்ட விஷயம் பற்றிய விதிமுறைகளைத் தரும் நூல். தினசரி வாழ்வில் உடலைத் தூய்மையாக வைத்திருப்பது தொடங்கி பல்வேறு ஒழுங்கு முறைகளின் தொகுப்புக்கு ஆசாரம் என்று பெயர். ‘ஆசாரக்கோவை என்னும் தொடர்க்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம்’ என்று மர்ரே ராஜம் பதிப்பின் முன்னுரை கூறுகின்றது. அது ஆசாரக்கோவையின் பொருள் பற்றிக் கூறுவதாவது: பொதுவகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பலவாம். வைகறைத் துயில் எழுதல் முதல் காலைக்கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப்படுகின்றன. மேற்கொள்ளத் தக்கன இவை, விலக்கத்தக்கன இவை எனச் சில ஆசாரங்களை விதித்தும் சிலவற்றை விலக்கியும் செல்லும் முறை கவனிக்கத்தக்கது. (ப.273) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலேயே காலத்தால் பிற்பட்டது ஆசாரக்கோவை. சமஸ்கிருத சாஸ்திரங்கள் சிலவற்றின் கருத்துத் தாக்கங்கள் இதில் இருக்கின்றன என்றும் இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுவோர் உள்ளனர். சுக்ரஸ்மிருதிக் கருத்துக்களின் தொகுப்பே ஆசாரக்கோவை என்பது செல்வகேசவராய முதலியாரின் கருத்து. ‘இந்நூல் வடமொழி நூலின் வழித் தோன்றியது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை’ என்பார் வையாபுரிப்பிள்ளை.
 
இவற்றைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெறவில்லை என்றே சொல்லலாம். நீராடல், பல் துலக்குதல் உள்ளிட்டவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்நூல் கூறுகின்றது. எந்தெந்தச் சமயங்களில் நீராட வேண்டும்? தெய்வ வழிபாடு, தீக்கனா காணல், தூய்மை குன்றல், வாந்தி எடுத்தல், மயிர் களைதல், உண்ணல், அதிக நேரம் தூங்கல், உடல் உறவு, கீழ்மக்களைத் தீண்டல், மலசலம் கழித்தல் ஆகிய பத்துச் சந்தர்ப்பங்களிலும் அவசியம் நீராட வேண்டும். அம்மணமாக நீராடக் கூடாது. ஓராடை உடுத்தே நீராட வேண்டும். ஈராடை அணிந்தே உண்ண வேண்டும். உடுத்த ஆடையை நீருள் பிழியக் கூடாது. ஓராடையோடு அவைக்குச் செல்லக்கூடாது என்றெல்லாம் ஆடை உடுப்பது பற்றிச் சொல்கிறது. இப்படிப் பல ஆசாரங்கள். அவற்றைக் கடைபிடித்தவர் ஒருகாலத்தில் இருந்திருக்கக்கூடும். இன்றும் அப்படியான ஆசார சீலர்கள் இருக்கலாம். சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இத்தகைய ஒழுங்கு முறைகள் பொருந்தலாம். அல்லது நாள் முழுக்க இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பின்பற்றுவது எளிதாகலாம்.
 
அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுபவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட இயலாது. கீழ்மக்கள், புலையர் ஆகியோரைத் தீண்டக் கூடாது என்பது பற்றிச் சொல்வதோடு பார்ப்பாரின் உயர்வுகளைத் தொடர்ந்து பேசுவதையும் காணலாம். சுவாரசியமான பல பதிவுகளும் அக்காலச் சமூகப் படிநிலைகள் பற்றிய பதிவுகளும் காணப்படும் நூல் இது. எத்தகைய இடத்தில் வசிக்கலாம்? இதற்குப் பதிலை எதிர்மறையாக இந்நூல் சொல்கிறது. ‘வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம் இடங்கொள்ளார் ஒள்ளியம் என்பார்’ என்பது பாடல். அறிவுடையவர்கள் ‘தன் மேனி மினுக்குதல்’ செய்து அலங்கரித்துக்கொள்ளும் ‘வண்ண மகளிராகிய’ விலைமகளிர் வசிக்கும் பகுதியில் தம் வாழிடத்தை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார் என்பது பொருள். ஏற்படுத்திக் கொண்டால் ஆணுக்குச் சபலம் தோன்றிவிடுமா? அப்படித் தோன்றுவதைப் பற்றித் தவறில்லை. விலைமகளிரோடு கூடியிருத்தலை ஆணுக்கு முழுமையாக அனுமதித்த சமூகம் நமது. ஆகவே பெண்ணுக்குச் சபலம் ஏற்பட்டுவிட்டால் என்னாவது? ‘பெண்டிர்க்கு உவப்பன வேறாய் விடும்’ என்கிறது கோவை. விலைமகளிரைப் பார்த்து அலங்காரத்திலும் மேனி மினுக்குதலிலும் குடும்பப் பெண்களுக்கும் ஆசை தோன்றிவிடும். அவற்றிற்காகக் குடும்பப் பெண்ணும் சோரம் போக விருப்பம் கொள்வாள் என்பது அதன் உட்கருத்து. ‘புகத் தகா இடங்கள்’ என்று சொல்லும் பாடலொன்றில் ‘சூதர் கழகம்’ குறிப்பிடப்படுகின்றது.
 
சூதாடுவதற்கு என்று தனியிடம் இருந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இப்படிப் பல. அவை ஒருபக்கம் இருக்கட்டும். எப்பேர்ப்பட்ட நூலும் தம் காலத்தின் மீறல்கள் சிலவற்றையேனும் ஆவணமாக்கியிருக்கும். ஆசாரக்கோவையிலும் அத்தகைய பதிவுகள் உள்ளன. ‘எச்சிலுடன் தீண்டலாகாதவை’, ‘எச்சிலுடன் காணலாகாதவை’, ‘எச்சிலுடன் செய்யத்தகாதவை’ எனச் சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றது. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோடு இவையென்ப யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள். பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலோடு தீண்டலாகாது என்பது இதன் பொருள். எச்சிலுடன் காணத் தகாதவை எவை? எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் நாயிறுநாய் அத்தக வீழ்மீனோடு இவ்வைந்தும் தெற்றென நன்குஅறிவார் நாளும் விரைந்து. புலையர், நிலா, சூரியன், நாய், வீழும் நட்சத்திரம் ஆகியவற்றை எச்சிலோடு காணக்கூடாது என்பது இப்பாடலின் பொருள். எச்சிலோடு ஒன்றனையும் ஓதக் கூடாது, வாயால் ஒன்றனையும் சொல்லக்கூடாது, தூங்கக் கூடாது என்று சொல்லும் பாடல் ஒன்றும் உள்ளது.
இந்தப் பாடல்களில் எல்லாம் எச்சில் என்று சொல்லப்படுபவை எவை? எச்சில் பலவகைப்படும் என்கிறது ஆசாரக்கோவை. அவற்றுள் நான்கு எச்சில்கள் முக்கியம். அவற்றைக் கூறும் செய்யுள்: எச்சில் பலவும் உளமற்று அவற்றுள் இயக்கம் இரண்டு இணைவிழைச்சு வாயில் விழைச்சுஇவை எச்சில்இந் நான்கு. இயக்கம் இரண்டு என்று குறிப்பிடுவது மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஆகும். மலம் கழித்த பின்னும் சிறுநீர் கழித்த பின்னும் நீராட வேண்டும். அப்போதுதான் எச்சில் நீங்கும். மலம் கழித்த பின் நீராட சொல்வதேனும் சரி. சிறுநீர் கழித்த பின் நீராட வேண்டும் என்றால் எத்தனை முறை தினம் நீராடுவது? இணைவிழைச்சு என்பது புணர்ச்சி. அதாவது உடலுறவு. உடலுறவு கொண்டால் அது எச்சில். நீராடி எச்சிலை நீக்கலாம். நான்காவதாகச் சொல்லப்படுவது ‘வாயில் விழைச்சு’ என்பதாகும். அது என்ன வாயில் விழைச்சு? இதற்குப் பழையவுரை ‘வாயினால் வழங்கிய விழைச்சு’ என்று குறிப்பிடுகிறது. புன்னைவனநாத முதலியார் எழுதியுள்ள உரையில் அவர் பழையவுரையைப் பின்பற்றி ‘வாயினால் வழங்கிய விழைச்சும்’ என்று எழுதியுள்ளார். கருத்துரையில் ‘பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க’ என்று கூறுகிறார்.
 
சொற்பொருள் தரும்போது ‘இணைவிழைச்சு – புணர்ச்சி’ என்று எழுதுபவர் ‘விழைச்சு – விருப்பம்’ என்று பொருள் தருகிறார். ‘வாயில் விழைச்சு’ என்பதற்குத் தனியாகப் பொருள் எழுதவில்லை. ‘இணைவிழைச்சு’ என்பதற்கு ‘உடலுறவு’ என்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் பொருள் எழுதுபவர் ‘வாயில் விழைச்சு’ என்பதற்குப் பொருள் தரத் தடுமாறுகிறார். விருப்பம் என்பது எவ்விதம் பொருந்தும்? தமிழ் லெக்சிகன் ‘விழைச்சு’ என்னும் சொல்லுக்குப் ‘புணர்ச்சி’ என்று தெளிவாகப் பொருள் (தொகுதி 6, ப.3724) தருகிறது. விழைச்சு என்பதற்கே புணர்ச்சி என்று பொருள் இருக்கிறது. அப்படியானால் இணைவிழைச்சு, வாயில்விழைச்சு ஆகியவை விழைச்சின் வகைகள் என்று கொள்வதுதான் பொருத்தம். மேலும் இணைவிழைச்சு என்பது போல வாயில்விழைச்சு என்பதையும் ஒற்றைச் சொல்லாகக் கருத வேண்டும். ‘அதரபானம்’ என்றால் எவ்விதம் பொருள் உணர்வது? முத்தம் என்னும் பொருளில் அப்படிச் சொல்கிறாரா? முத்தம் என்றால் தெளிவாக அந்தச் சொல்லையே பயன்படுத்தலாமே. உரையாசியருக்குப் பொருள் புரியாமலில்லை. சொல்லத் தயக்கம். சரி, அகராதிகள் என்ன பொருள் சொல்கின்றன என்று பார்த்தால் பல அகராதிகள் இந்தச் சொல்லையே தலைச்சொல்லாகத் தரவில்லை.
 
சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சொற்களுக்குப் பொருள்தரும் ‘பாட்டும் தொகையும்’ அகராதியில் இச்சொல்லே இல்லை. தமிழ் லெக்சிகன் ‘வாயில்விழைச்சு – உமிழ்நீர்’ எனப் பொருள் (தொகுதி 6, ப.3602) கொடுத்து அதற்கு உதாரணமாக ஆசாரக்கோவையின் இந்தச் சொல்லையே தந்துள்ளது. உமிழ்நீர் என்பது எவ்வகையில் பாடற்பொருளுக்குப் பொருந்தும்? அகராதியின் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் எதையும் மறைக்க வேண்டும் , மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர். அவர் பார்வையில் படாமல் இந்தப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கக் கூடுமோ? வாயில்விழைச்சு என்பது எல்லாருக்கும் தெரிந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம். ஆசாரக்கோவையின் ஆசிரியருக்கு அந்தத் தயக்கம் இல்லை. வாயில்விழைச்சு என்பது வாய்வழிப் புணர்ச்சி அதாவது வாய்வழி உறவு கொள்ளுதல் ஆகும். பேச்சு வழக்கில் இதைக் குறிக்கும் நேரடிச் சொல் ‘ஊம்புதல்’ என்று நினைக்கிறேன்.
 
வேறு சொல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வாய்வழிப் புணர்ச்சி பழமையானது என்பதற்கு ஆசாரக்கோவையே சான்று. அதைத் தவறென அந்நூல் சுட்டவில்லை. அதை ஏற்றுக்கொள்கிறது. அப்புணர்ச்சியை எச்சிலில் ஒன்றாகச் சுட்டுகிறது. எச்சில் என்பதற்கு இங்கு அசுத்தம் எனப் பொருள் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் தீட்டு என்னும் அசுத்தம் எனக் குறிப்பிடலாம். இத்தகைய அசுத்தத்திற்குப் பரிகாரம் நீராடல். வாயில்விழைச்சு முடிந்ததும் நீராடிவிட்டால் தீட்டு கழிந்துவிடும். முதன்மைத் தீட்டுக்களில் ஒன்றாக வாயில்விழைச்சு கருதப்பட்டுள்ளது என்றால் அவ்வழக்கம் பரவலாக இருந்துள்ளது என்றே பொருள். வாயில்விழைச்சில் ஈடுபட்டோர் யார் என எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருபால் புணர்ச்சி, ஒருபால் புணர்ச்சி ஆகிய இரண்டிலுமே வாயில்விழைச்சு நடந்திருக்க வாய்ப்புண்டு. அதை அக்காலச் சமூகம் ஏற்றுக் கொண்டிருந்தது என்பதையே ஆசாரக்கோவை காட்டுகின்றது. இந்நூலில் இன்னொரு குறிப்பிடத்தக்க பதிவும் காணப்படுகின்றது. யார் யாருடன் தனித்திருக்கக் கூடாது என்று ஒரு பாடல் கூறுகின்றது. வருமாறு: ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான். இதற்குப் பழையவுரைகாரர் ‘தாயுடனாயினும் மகளுடனாயினும் தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான்’ என்று எழுதுகின்றார்.
 
புன்னைவனநாத முதலியார் கருத்துரையாக ‘ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது’ என்று கூறுகின்றார். அவர் ‘உறையற்க’ என்பதற்குத் ‘தங்காதிருக்கக் கடவர்’ என்று பொருள் கூறுகிறார். ‘உரையற்க’ என்பதைப் பாட வேறுபாடாகக் கொள்ளலாம் என்பதும் அவர் எண்ணம். அப்படி எடுத்துக் கொண்டால் எவ்வாறு பொருள் கொள்வது? ‘உரையற்க என்ற பாடங்கொண்டு மேற்குறித்தவர்களுடன் தனித்திருந்து உரையாடாதிருக்க எனலுமாம்’ என்கிறார். இது ஒருவகைச் சமாதானம். அப்படிப் பாடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவரே எடுத்துக் காட்டும் காசிகண்டச் செய்யுளடிகள் ஆசாரக்கோவையின் கருத்தைத் தெளிவுபடுத்துகிறது. அது: நற்றாய் புதல்வியுடன் றோன்றிய நங்கையேனும் உற்றோருழியிற் றனியெய்தியுறை தலாகா. இப்பாடலில் ‘உறைதல்’ எனத் தெளிவாகவே குறிப்பிடப்படுகின்றது. தாயுடன் மகன் தனித்திருக்கக் கூடாது. மகளுடன் தந்தை தனித்திருக்கக் கூடாது. உடன்பிறந்தவளுடன் (அக்கா அல்லது தங்கை) சகோதரன் தனித்திருக்கக் கூடாது.
 
தனித்திருந்தால் என்னவாகி விடும்? ஐந்து புலன்களையும் அடக்கி வைத்தல் அரிது. ஆகவே புணர்ச்சி நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்பது கருத்து. இப்பாடல் அக்காலத்தில் இருந்த இத்தகைய வழக்கங்களை எதிர்மறையாகப் பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம். தாயுடன் நிகழும் புணர்ச்சியைக் குறிக்கும் வசையாக இன்றைக்கும் பயன்படுவது ‘தாயோலி’ என்பது. அதேபோல சகோதரியோடு நிகழும் புணர்ச்சியைக் குறிக்க ‘ங்கொக்காலோலி’ என்பது பயன்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகின்றது. இன்றைக்கு அது வசையாக இருப்பதற்கும் அதுதான் காரணம். மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில் அது வழக்காக இருந்திருக்கலாம். பின்னர் அத்தகைய புணர்ச்சிகள் விலக்கப்பட்டிருக்கின்றன. எனினும் விதிவிலக்காகச் சில நடப்பதுண்டு. அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாகத் தனித்திருக்கக் கூடாது என்பதை ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது. மகளுக்கும் தந்தைக்குமான புணர்ச்சி பற்றி வசைச்சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் அத்தகைய புணர்ச்சிகளும் நடந்திருக்கக் கூடும். இன்றும் அப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன. மகளைப் புணர்ந்த தந்தையைக் கொன்ற தாய் பற்றிய செய்தியும் உண்டு.
 
அப்படியான தந்தைகளைக் கைது செய்யும் காட்சிகள் ஆண்டுக்கு ஒன்றிரண்டேனும் அரங்கேறுகின்றன. திருமண வயது கடந்தும் மணமாகாமல் முதிர்கன்னியாகிய மகளும் இளம் வயதிலேயே மனைவியை இழந்துவிட்ட தந்தையும் தாம் பார்த்த திரைப்படக் காட்சியின் தூண்டுதலால் உறவு கொள்வதாகக் கதை எழுதிய பிரபலம் இருக்கிறார். இத்தகைய முறையற்ற உறவுகளையே மூலதனமாக்கி எழுதப்படும் ‘காமக்கதைகள்’ இணையத்தில் அநேகம். புத்தகங்களும் பல. இவற்றுக்கெல்லாம் வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. அதற்குரிய பழஞ்சான்றுதான் ஆசாரக்கோவை.
————-
பயன்பட்ட நூல்கள்: 1. பு.சி.புன்னைவனநாத முதலியார் (உ.ஆ.), ஆசாரக்கோவை, 1971, சென்னை, கழக வெளியீடு, மறுபதிப்பு. 2. மர்ரே எஸ்.ராஜம் (ப.ஆ.), பதினெண் கீழ்க்கணக்கு, 1981, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இரண்டாம் பதிப்பு. 3. ச.வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனைகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் முதல் தொகுதி, 1989, சென்னை, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம். 4. ச.வையாபுரிப்பிள்ளை (ப.ஆ.), தமிழ் லெக்சிகன் தொகுதி 6, 1981, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், இரண்டாம் பதிப்பு.

நன்றி: மணல்வீடு
 
 
நன்றி வல்லினம்

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் – எனது பார்வை


(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை குறித்து கங்காதுரை எழுதிய கட்டுரை)



முதலில் இந்தச் சிறுகதையை எழுதிய நண்பர் தயாஜியை மனதார பாராட்டுகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறுகதை அதிகம் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன் முறை. இம்மாதிரியான கருவை கையில் எடுத்துக்கொண்டு எழுதுவது என்பது சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ள ஒரு ‘தில்’ வேண்டும். அது தயாஜிடம் இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
 
“கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற இந்தச் சிறுகதையை வாசித்தபோது எனக்குள் எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. அதற்கான காரணம் இம்மாதிரியான படைப்புகளை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். மலேசிய இலக்கியச் சூழலில் இம்மாதிரியான கருப்பொருளில் கதைகள் வந்திருப்பது மிகக் குறைவு. அதைவிட இங்கு வாசிப்புப் பழக்கம் என்பது மிகக் குறைவு. ஆக இம்மாதிரியான சிறுகதையை வாசித்திறாத பெரும்பாலோருக்கும் முதலில் ஏற்பட்டது அதிர்ச்சி மட்டுமே. அந்த அதிர்ச்சியில் அவரவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் இச்சிறுகதைக்கு எதிராக பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டன. சிலரின் விமர்சனங்கள் அறிவுநிலையிலிருந்து முன்வைக்கப்பட்டன. சிலரின் விமர்சனங்கள் அடித்து வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் வைக்கப்பட்டன. இன்னும் சிலர் காழ்ப்புணர்ச்சியில் மேற்கொண்ட கீழறுப்பு நடவடிக்கைகள் கழிவறையில் கிடக்கும் மலத்தை விட மோசமாக இருந்தன. முதலில் நம்மவர்கள் ஒரு விசயத்தை எதிர்கொள்ள முறையான அணுகுமுறையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இச்சிறுகதை குறித்து சில எழுத்தாளர் நண்பர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் முன்வைத்தது பின்வருமாறு:
 
“நமக்கு அறிமுகமாகாத இன்னொரு வாழ்வை நுட்பமாக பேசும் மிக முக்கியமான கதை இது. பொருளாதார ரீதியில் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தனிமனித உறவுகளில் எத்தனை பலவீனமானது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்தும் கதையிது”
 
இனி, என் பார்வையில் சிறுகதையின் முக்கிய அம்சம் ஒரு மனப்பிறழ்வாளன் தான் கழிவறையில் சிக்குண்டதாக சொல்லி கதையைத் தொடங்குகிறான். கழிவறையில் நடந்தேறிய அவலங்களை நினைத்துப்பார்த்து அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சம்மந்தப்பட்டவர்களிடம் கெஞ்சி போராடுவதாக கதை அமைகிறது. கதையைப் படித்துவிட்டு பெரும்பாலோர் இச்சிறுகதை கலாச்சாரம் பண்பாட்டு கட்டமைப்பை மீறியுள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் இரண்டு. ஒன்று தாய்மையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், மற்றொன்று தெய்வத்தை இழிவுப்படுத்தியதாகவும் என்பதேயாகும்.
 
எங்கிருந்து வந்தது கலாச்சாரமும் இந்த பண்பாடும்? மனிதன் முதலில் வாழத்தொடங்கியதே காட்டுமிராண்டியாகத்தானே? வரையறையின்றி கிடந்த வாழ்க்கை முறை ஒழுங்குபடுத்தி பின்னர் கலாச்சாரம் பண்பாடு என கட்டமைக்கப் பட்டபோது அதிலிருந்து சிதறிய உதிரி மனிதர்களின் பாலியல் சிக்கல்களைப் பற்றி இச்சிறுகதை பேசுகிறது.
 
சம்பவங்களே இச்சிறுகதையை வளர்க்கின்றன. முதல் சம்பவத்தில் சிறுவன் தான் பார்த்த ஆபாசப் படத்தின் உந்துதலால் தன் தாயை குளிப்பதை எட்டிபார்க்க முயற்சி செய்ததாகக் காட்டப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பலரும் வன்மையாக கண்டித்தனர். தாய்மையின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக புலம்பினர். ஆனால் இச்சம்பவமே கதையின் முக்கிய காட்சியாக நான் கருதுகிறேன். இந்தக் காட்சியில் முக்கிய விடயமொன்று வைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன்.
 
சங்க இலக்கிய பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “ஆசாரக்கோவை” மனித வாழ்க்கையில் பேணப்படவேண்டிய ஆச்சாரங்களைப் பற்றி பேசுகிறது. அதில் தாயுடன் மகன் தனித்திருக்கக் கூடாது. மகளுடன் தந்தை தனித்திருக்கக் கூடாது. உடன்பிறந்தவளுடன் (அக்கா அல்லது தங்கை) சகோதரன் தனித்திருக்கக் கூடாது. தனித்திருந்தால் என்னவாகி விடும்? ஐந்து புலன்களையும் அடக்கி வைத்தல் அரிது. ஆகவே புணர்ச்சி நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லபட்டிருக்கும். தாயுடன் நிகழும் புணர்ச்சியைக் குறிக்கும் வசையாக இன்றைக்கும் பயன்படுவது ‘தாயோலி’ என்பது. அதேபோல சகோதரியோடு நிகழும் புணர்ச்சியைக் குறிக்க ‘ங்கொக்காலோலி’ எனும் வசைச்சொல் பொதுவாக பயன்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகின்றது.

இதையே இச்சிறுகதையின் முதல் காட்சி உணர்த்துவதாக நான் கருதுகின்றேன். சிறுவன் தனித்திருக்கும் வேளையில் ஆபாசப்படங்களைப் பார்க்கிறான். அதன் கிளர்ச்சியில் தன் தாயை குளிப்பதை எட்டிப்பார்க்க நினைக்கிறான். இங்கே இன்னொரு விடயமும் பதிவு செய்யப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அல்லது ஒடுக்குமுறைகள் தொடங்கும் முதல் இடம் குடும்பம். இக்கருத்தை ஒருமுறை கவிஞர் குட்டி ரேவதி “நீயா நானா” நிகழ்ச்சியில் முன்வைத்திருந்தார். நானும் அக்கருத்தை ஆதரிக்கிறேன். பாலியல் சார்ந்த வன்முறைகள் அல்லது ஒடுக்குமுறைகள் சிலருக்கு நேரிடையாகவே நிகழலாம் அல்லது அவர்கள் அறியாதும் நிகழலாம். இக்கதையில் தாய் தனக்கு நிகழ்ந்ததை அறியாதிருந்தாள். அவள் மகனிடம் வெளிப்படுத்திய அன்பும் அதையடுத்து சிறுவன் அடைந்திருந்த மனநிலையும் இச்சிறுகதையில் யதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது.
 
இச்சிறுகதையில் தொடர்ந்து காட்டப்பட்ட சம்பவங்கள் எல்லாமே நம் கண் முன் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பங்களே. காதல் பெயரில் காமத்தை விதைத்து கலவி கொள்வதும், அதை மறைந்திருந்து வேடிக்கை பார்ப்பதும், பதிவு செய்வதும், ஓரினப்புணர்ச்சி கொள்வதும் என எல்லாமே நம் சமூகத்தில் மட்டுமில்லாது எல்லா சமூகங்களிலும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்கள். இதை பற்றி எந்த சமூக இயக்கங்களும் அக்கறை கொண்டதுமில்லை ஆய்வுக்கு உட்படுத்தியதும் இல்லை. எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் சமூகத்தின் ஓர் அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதை எழுத்தாளன் தன் கதைக்குள் கொண்டுவரும்போது சமூகத்தின் உன்னத வாழ்விற்கு களங்கம் விளைவித்ததுபோல கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக இக்கதையில் தெய்வத்தை இழிவுப்படுத்தியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இச்சிறுகதையின் இறுதி சம்பவத்தில் காளியைக் கடவுளாக பாராமல் தன் காதலியாக பார்க்கிறான் மனப்பிறழ்வாளன். காளியால் மட்டுமே அவனை கழிவறையிலிருந்து மீட்க முடியுமென நம்புகிறான். காளியை உரிமையோடு அழைக்கிறான். அழைத்தவன் காமத்தை விதைக்கிறான். காளியைக் காதலியாக நினைத்து அவளோடு காமம் கொள்ள அழைக்கிறான்.

 ///காளி. என் காதலி. மண்டையோட்டு சூளி. இங்கே வாடி. காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்.///
 
எப்படி இந்து கடவுளான காளியை இவ்வளவு ஆபாசமாக சித்தரிக்கலாமென பலர் கொதித்தெழுந்தனர். இதில் வேடிக்கை யாதெனில் ஒரு பெண் தெய்வமான காளியை ஆதி முதல் திறந்திருக்கும் மார்புகளோடு மேற்சட்டை அணிவிக்காமல் பொதுவில் தெய்வமாக வைத்து வழிபடுதலில் உள்ள ஆபாசத்தை விட வேறென்ன ஆபாசமாக இருக்கமுடியும்?இருந்தபோதிலும் எனக்கும், தயாஜி கதையின் முடிவில் சறுக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.
 
இச்சிறுகதையில் கழிவறை பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. கழிவுகளை வெளியேற்றும் இடமான கழிவறையில்தான் எல்லா சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அல்லது ஒவ்வொரு சம்பங்களுக்குப் பின்னும் அவன் ஒளிந்துகொள்ளும் இடமாக கழிவறை அமைகிறது. தயாஜி ஏன் கழிவறையைத் தேர்ந்தெடுத்தார் என்று யோசிக்கும்போது அவர் அதை ஒரு குறியீடாக பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
 
வியர்வை, சிறுநீர், மலம் என உடல் வெளிப்படுத்தும் மலங்கள் வெளியேற்றப்படும் இடம் கழிவறை. அதுபோல் உள்ளத்து உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவற்றைப் பொதுநெறியில் காமம், வெகுளி, மயக்கம் என சொல்லப்படுகிறது. சமயநெறியில் ஆணவம், கன்மம், மாயை என சொல்லப்படுகிறது. இவை வெளியேற்றப்படும் கழிவறை உடல். இப்போது கதை முழுக்க பயன்படுத்தப்பட்ட கழிவறை எனுமிடத்தில் உடலைப் பொறுத்திப் பார்த்தால் இச்சிறுகதை வெறொரு கோணத்தில் பயணிக்கும்.
 
சிறுகதையின் சறுக்கல்
 
தயாஜி எடுத்துகொண்ட கரு கத்தி மேல் நடப்பது போன்றது. கத்தி மேல் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்துவைக்க வேண்டும். அதைபோல இச்சிறுகதைக்கான சொற்பிரயோகம். தயாஜியின் அநாவசியமற்ற சொற்பிரயோகம் இக்கதையின் மீதான முத்திரையை மாற்றியமைத்துவிட்டது. சிறுகதையில் சில இடங்களில் புகுத்தப்பட்டிருக்கும் தேவையற்ற விவரிப்பு வாசகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. எல்லாவற்றையும் யதார்த்தமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு அப்பட்டமாக எழுதுவதை தவிர்த்திருக்க வேண்டும். சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியம் என கருதுகிறேன். அதோடு இச்சிறுகதையில் வடிவமைதி தேவைப்படுவதாகவும் கருதுகிறேன். தயாஜி ஒட்டுமொத்தமாக சறுக்கிய இடம் கதையின் முடிவுதான். தெளிவற்ற ஒரு முடிவு அல்லது முரணான ஒரு முடிவு வாசகர்களை குழப்பிவிடுகிறது.
ஆனால், சிறுகதையின் வடிவம் குறித்து பேசாமல் பெரும்பாலோர் அதை கருத்து ரீதியாக மோதி வீழ்த்த முனைவதுதான் இலக்கியம் எதிர்க்கொள்ளும் பெரிய சவாலாக இருக்கிறது நம் நாட்டில்.
 
-கங்காதுரை
 
நன்றி வல்லினம்

கலைக்கு மரியாதை செய்யத் தெரிந்தவர்கள்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரை)



கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’  என்ற கதையை எழுதியதற்காக தயாஜி மீது கலாசார போலிஸ்களால் தொடுக்கப்படும் தாக்குதலும் தயாஜியை அவர் பணியாற்றிய அரசு நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியது. 
கடவுள் மீதும், பெற்றவர்கள் மீதும், பெற்ற பிள்ளைகள் மீதும் காமுறுவது இலக்கியத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் புதியதல்ல. இல்லாதவொன்றை தாயாஜி சொல்லிவிடவில்லை. அவ்வாறு இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் இல்லாததைத் சொல்ல இலக்கியத்தில் அனுமதியுண்டு. சூரியனோடு புணர்ந்தது மகாபாரதம். சிங்கத்தோடு புணர்ந்து கருவுற்றது மகாவம்சம். தாயை மகன் புணர்ந்தது விவிலியம். இந்த மூன்று இலக்கிய நூல்களும் மூன்று மிகப் பெரிய மத நிறுவனங்களின் வேதநூல்கள்.
 
ஒவியர் எம். எப். உசைன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தது, ‘த டாவின்ஸி கோட்’  நாவலில் ஏசுக் கிறீஸ்துவுக்கு மரிய மதலேனாளோடு உறவிருந்ததாகச் சித்தரித்தது, டென்மார்க் பத்திரிகையொன்று  இஸ்லாத்தின்  இறைவனின் பிரதிமையை வெளியிட்டது, புத்தரின் உருவத்தை சட்டையில் பொறித்தது போன்ற சம்பவங்கள் மத அடிப்படைவாதிகளை மட்டுமே கொதிப்படைய வைத்ததேயல்லாமல் வெகுசனங்களை கலவரப்படுத்தவில்லை. அவர்களிற்கு கலைக்கு மரியாதை செய்யத் தெரியும்.
கடவுளைக் காதலானாகவும் காதலியாகவும் கொண்டாடிய இலக்கிய மரபுதான் நமது. திருவரங்கனை காதலனாக வரித்து நாச்சியார் பல நூற்றாண்டுகளிற்கு முன்பு பாடியதிலிருந்து, இன்றைய கவி வசுமித்ர
‘ஆகச்சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் காளியைத்தான் புணரவேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்..’
 
என எழுதியதுவரை ஏராளம் பெறுமதிமிக்க பெட்டகங்கள் நம்மிடமுண்டு.
 
இராமனைத் தெருத்தெருவாகச் செருப்பாலடித்தார் தந்தை பெரியார். கடந்த ஏப்ரல் மாதம் கத்தோலிக்க ஆர்ச் பிஷப் முன்பு திறந்த மார்பகங்களோடு தோன்றிய பெமன் (FEMEN) போராட்டக் குழுப் பெண்கள் ‘இந்தா வாங்கிக்கொள் இயேசுவின் விந்தை’ எனத் தண்ணீரை அவர்மீது ஊற்றினார்கள். இவற்றோடு ஒப்பிடுகையில் தயாஜி செய்தது காளிக்குச் சாதகமானதே. கலவியிலே மானுடற்கு கவலை தீரும் என்றான் பாரதி. காளிக்கும் தீரும்.
 
நமது முன்னோடி ஜி. நாகராஜன் சொன்னதை இங்கு குறிப்பிடலாம்:
‘நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இது  உங்களிற்குப் பிடிக்காதிருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால்முழுமையும்தான் சொல்லியாக வேண்டும்.’

-ஷோபா சக்தி

நன்றி வல்லினம்

‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ : தீர்ப்பு உங்கள் கையில்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து அ.பாணியன் எழுதிய கட்டுரை)

கடந்த சில வாரங்களை மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை மூடிக்கொண்டிருந்தோம் என்பதே இங்குள்ள இலக்கிய வெளிப்பாடாக இருக்கும் போது பலர் இக்கதையை பற்றி (நல்ல மாதிரியோ வேறு மாதிரியோ) எழுதிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாளிதழ்களிலும் அறிக்கைகள் வந்துள்ளதால் இச்சிறுகதை கூடிய விரைவில் ‘வெள்ளிவிழா’ கொண்டாடக் கூடும். அந்த அபூர்வத்தை நிகழ்த்தி காட்டிய அளவில் ‘கழிறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ (க.ப.வ) வை மனதார பாரட்டலாம். அதோடு மலேசிய வாசகர்களை ஒரு வாரத்திற்கேனும் இலக்கியம் குறித்த தீவிர கலந்துரையாடலுக்குள் தள்ளிவிட்ட வல்லினத்திற்கும் நன்றி பாராட்டத்தான் வேண்டும் 
இச்சிறுகதை குறித்த என் தனிப்பட்ட கருத்துகள் சில உள்ளன. ஆனால் அதற்கு முன் க.ப.வ மீது பல்வேறு சாடல்களை தொடுப்பவர்களின் கருத்தை மதித்து மீள்பார்வை செய்ய வேண்டியது அவசியம். அவர்களின் இலக்கிய ரசனை, எதிர்ப்பார்ப்பு, அவர்கள் வடித்துக்கொண்ட இலக்கிய நோக்கம் போன்ற பல்வேறு கூறுகளை இச்சிறுகதை களைத்துப் போட்டு விட்டது என்றே நான் நினைக்கிறேன். தமிழர் வாழ்வியல், பண்பாடு, ஆன்மீகம் போன்ற பல்வேறு விழுமியங்களின் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக உணரும் பலரின் ஆவேச குரலை நான் மதிக்கிறேன். அது அவர்களின் உரிமை. மலேசிய சூழலுக்கு இப்படிப்பட்ட கதை தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு. நான் அணிந்திருக்கும் ஆடையை திடீரென உருவி என்னை கோவணாண்டியாக்கி விட்டு, பண்டை தமிழர் கோவணம் உடுத்தி வாழ்ந்தவர்களாவர் ஆகவே நான் அதை சினம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற முடியாது. நான் நிச்சயம் கோபப்படுவேன். அது தார்மீக கோபம்.
அந்த அன்பர்களுக்கு, வல்லினம் ஆசிரியர் என்ற நிலையில் நவீன் பொறுப்புடன் கொடுத்த நீண்ட விளக்கம் ஓரளவேணும் புரிதலை கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அந்த விளக்கமும் அவர்களுக்கு ஒம்பாமல் போகலாம். அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் ஒரு இலக்கிய பிரதியின் தரத்தையும் தேவையையும் முடிவு செய்யக்கூடியவர்கள் உண்மையான வாசகர்கள்தான். வெளிச் சக்திகளின் தூண்டுதல் காரணமாக ஒரு வாசகன் தன் மனதுக்கு ஒவ்வாத ஒன்றை இலக்கியமாக அங்கீகரிக்க மாட்டான்.
அடுத்து இன்னொரு சாரார் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று தங்கள் பழிவாங்கும் அரசியலை நிறைவேற்ற இச்சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வல்லினத்தில் வந்த ஒரு சிறுகதை சர்ச்சைக்குள்ளாவதை காரணம் காட்டி இதுநாள் வரை வல்லினம் முன்னெடுத்த எல்லா போராட்டங்களையும் சிறுமைபடுத்தி ஒரு நாளிதழில் செய்தி போடும் கோழை தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பொதுவான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது வாயை மூடிக் கொண்டு யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன; நமக்கு எல்லாரும் வேண்டும், என்று இருந்தவர்கள் இப்போது வல்லினத்தின் யோக்கியதையை பதம் பார்ப்பது கீழ்த்தரமான அரசியல் அன்றி வேறில்லை. நீண்ட காலமாக வல்லினத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்த பலரின் குள்ளநரித்தனம் இப்போது வெளிப்படுவது ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு இக்கதை குறித்த எந்த விளக்கமும் தேவை இல்லை. அவர்களிடம் நம் சொல் எடுபடாது. அதைவிட அவர்களுக்கு இலக்கியம் பற்றியோ சமுதாயம் பற்றியோ எந்த வித உண்மை அக்கரையும் இல்லை.
அவர்களின் நோக்கம் வல்லினத்தையும் அதன் குழுவினரையும் சமுதாய அசிங்கங்களாக காட்டி தங்கள் அசிங்கங்களை மறைத்துக் கொள்வது மட்டும்தான். ஆகவே அவர்களின் முயற்சிகளுக்கு அவர்களிடம் ‘அப்படியே செய்க!’ என்று மட்டும்தான் கூற முடியும்.
சரி இனி க.ப.வ குறித்த எனது கருத்துகள். முதலாவதாக இது ஒரு பின்நவீனத்துவ கதை அன்று. நோன் லீனியராக கதை சொல்லும் உத்தியும் இல்லை. ஆக இது வழக்கமான நேர்கோட்டு எதார்த்தவியல் கதை. ஆனால் கதையில் களம் இல்லை. கதை முழுதும் ஓரங்கவுரை புலம்பலாக அமைந்துள்ளது. கதை எடுத்துக் கொண்ட கருவும் மிகவும் பழமையானது. செயலுக்கு ஏற்ற பலாபலன்களே நமக்கு கிட்டும் என்பதையே இக்கதையும் கூறுகிறது. அதாவது இருவிணை தத்துவத்தையே இக்கதையும் வழிமொழிகிறது.
அடுத்து, இக்கதை காமத்தை வலியுறுத்துகிறது என்று சொல்வது அடிப்படையிலேயே பிழையான கருத்து. உண்மையில் இக்கதை காமத்திற்கு எதிரானது. காம உணர்வை அருவருப்பானதாக காட்டும் பழம்போக்கை மீறாத பழமைவாத கதை. காமத்தை மலத்தோடு ஒப்பிடும் ‘சமண மத’ கொள்கையை வலியுறுத்தும் இக்கதை ‘மலரினும் மெலியது காமம்’ என்ற தமிழ் சூழலை புறக்கணிக்கிறது என்பதே உண்மை. காம வலையில் சிக்குதலும் கழிப்பறையில் சிக்குதலும் ஒன்றே என்னும் போதனையையே இக்கதை செய்கிறது. எளிமையாக சொல்வதென்றால் புகழ் பெற்ற பழைய ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்பட பாணியை ஒத்த கதையே இச்சிறுகதை. அப்படத்தை இக்கதையின் ‘தெளிந்த’ முன்மாதிரியாக கூறலாம். காமத்தின் தூண்டுதலால் முறையற்று செயல்பட்டவன் இறுதியில் “கொண்டவளைத் துறந்தேன்; கண்டவள் பின் சென்றேன்; இன்று கண்களையும் இழந்தேன்” என்று புலம்புவதன் நவீன விரிவாக்கமாகவே இக்கதை போக்கு உள்ளது. புலம்பலின் வெளிப்பாடே கழிப்பறையில் சிக்கியவனின் பேச்சும் செயலும். ஆக இது நிச்சயம் காமக் கதை அன்று.
இப்படி காமத்தை இழிவானதாக கூறும் இக்கதையை காமக் கதை என்று (தவறுதலாக) குற்றஞ்சாட்டி பலரும் கடுமையாக தாக்குவதன் காரணம் என்ன என்று சிந்திக்கும் போது, அதன் விவரிப்பு மொழியும் கதை சொல்லும் பாங்குமே காரணம் என்று நாம் கண்டடைய முடியும். அதை தொட்டே வேறு பல சிக்கல்களும் பண்பாட்டு விழுமியங்களை உரசிப்பார்க்கும் தன்மையும் தெரிகிறது.
முதலாவதாக, கதையின் காட்சி விவரிப்புகள் மிக அதிகம். வாசகனின் கற்பனைக்கு வேலை வைக்காமல் படைப்பாளனே வலிந்து சொல்லுதல் தேவை இல்லாதது. சொல்லியும் சொல்லாமலும் செல்லவேண்டிய பகுதிகள் இக்கதையில் நிறைய இருந்தும் படைப்பாளி எல்லாவற்றையும் தானே சொல்ல முன்வந்தது முதல் தவறு. வாசகனுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் போக்கே இக்கதையில் குழப்பம் ஏற்பட காரணமாகிறது. உதாரணமாக கதைநாயகனின் பாலியல் மனப்பிறழ்வு தன் தாயின் மேல் காமம் கொள்ளச் செய்கிறது என்பதை வாசகர்களால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். தாய்மை புனிதமானது என்பது இக்கதையில் எந்த இடத்திலும் மீறப்படவில்லை. தன் மகனின் கண்ணில் விழுந்த தூசை பரிவுடன் நோக்கும் தாயின் அன்பே முதன்மையாகிறது. ஆனால் அதை மறக்கடிக்கும் படியாக நீலப்படம் குறித்த தெளிவான விவரிப்பு கதைக்கு சற்றும் தேவை இல்லாதது. இதை வெறும் ஆபாச திணிப்பு என்றுதான் வாசகர்கள் உணர்வார்கள்.
கதையின் பல்வேறு இடங்களில் கதையின் முக்கியத்துவத்தை சிதைக்கும் காட்சி விவரிப்புகளால் இக்கதை நிரம்பி இருக்கிறது. காட்சி விவரிப்புகள் கூடும் போது தேவையற்ற பாலியல் காட்சிகள் தவிர்க்க முடியாமல் போயிருப்பதை உணரமுடிகிறது.
இறுதியாக, கதையின் முடிவும் கதை போக்கை சிதைத்து விடுகிறது. சிறு வயது முதல் பல்வேறு காம அவலங்களில் கழித்திருந்த ஒருவன் தன் இறுதி நாளில் (தன் செயலால்) மனம் வருந்தி அரற்றுவதாகவே கதையை தயாஜி வடிவமைத்து இருக்கிறார். அந்த அரற்றலின் உச்சம்தான் தன் இஷ்ட தெய்வம் காளியிடம் முறையிடுதல். காளியை தன் காதலியாக கதைநாயகன் நோக்குவது இந்து ஞான மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. கடவுளை குருவாக, தந்தையாக, தாயாக, நண்பனாக, காதலி அல்லது காதலனாக நேசிக்கும் மாண்பை இந்து ஞானம் போதிக்கிறது. ஆகவே இக்கதைநாயகனின் போக்கு விந்தையானது அல்ல. ஆனால் காளியை காதலியாக கண்டவன் அவளுடன் ஐக்கியமாதலை முதன்மையாக கொள்வதை (சரணாகதி நிலையை) படைப்பாளரால் தெளிவாக கொடுக்க முடியவில்லை என்பதே என் கருத்து. மேலும் ஆரம்பம் முதல் தன் காமத்தை வெறுத்து இம்மை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டும் என்று புலம்பியவன் இறுதியில் காளியிடம் ‘காதலை உயர்த்திப்பிடி, காமத்தை விதைப்போம்’ என்று கூறுவது மிகப்பெரிய முரண். இந்த முரணே தெய்வ அவமதிப்பாக தோற்றம் தருகிறது. மொத்த கதையும் இவ்விடத்தில் தான் திசை மாறிப் போவதாக நான் கருதுகிறேன்.
ஆகவே தயாஜியின் க.ப.வ வை சாடுவதும் பாராட்டுவதும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்ட நிலை. ஆனால் சாடுவதாக இருந்தாலும் பாராட்டுவதாக இருந்தாலும் – மற்றவர்கள் சொல்கிறார்களே என்று செயல்படாமல் – இக்கதையின் உட்கிடங்கை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சரியான புரிதலின் வழி மட்டுமே சரியான தீர்ப்பை உங்களால் வழங்க முடியும். நன்றி.
 
அ.பாண்டியன்
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்